சதுரங்க வேட்டை - விமர்சனம்

ரசிக்க வைக்கும் மோசடி!

விமர்சனம் 18-Jul-2014 5:08 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : மனோபாலா பிக்சர் ஹவுஸ்
இயக்கம் : வினோத்
நடிப்பு : நட்ராஜ், இஷா நாயர்
ஒளிப்பதிவு : கே.ஜி.வெங்கடேஷ்
இசை : சீன் ரோல்டன்
எடிட்டிங் : ராஜா சேதுபதி

‘கோலி சோடா’, ‘மஞ்சப்பை’ படங்களைத் தொடர்ந்து ‘சதுரங்க வேட்டை’யும் வாங்கி வெளியிட்டுள்ளது ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம். அவர்களின் கணிப்பின்படி இப்படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதா?

கதைக்களம்

பணம் மட்டுமே வாழ்க்கையில்லை. அதையும் தாண்டி சில விஷயங்களுக்காகவே இந்த உலகம் சுழல்கிறது என்பதை உணர்த்துவதே ‘சதுரங்க வேட்டை’.

தன்னோட சின்ன வயசுல மத்தவங்களோட பணத்தாசையால தன் குடும்பத்தை இழந்து அனாதையாக வளருகிறார் ‘நட்டி’ நட்ராஜ். வளரும்போது தனக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்களை, தன் புத்திசாலித்தனத்தால் அதையே மூலதனமாக வைத்து மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கத் தொடங்குகிறார். ஒவ்வொரு இடமாக சென்று, ஒவ்வொரு திட்டமாக போட்டு பணத்தை ஏமாற்றும் நட்ராஜ் ஒரு கட்டத்தில் போலீஸில் சிக்குகிறார். அதற்கு முன்பு அவர் செய்த மொத்த பித்தலாட்டங்களும் பலதரப்பட்ட வழக்குகளாக அவர்மேல் வந்து குவிகிறது. ஆனால், எல்லா வழக்குகளையும், தான் ஏற்கெனவே சேர்த்து வைத்திருக்கும் பணத்தாலும், தன் கூட்டாளிகளாலும் உடைத்து வெளியே வருகிறார். நட்ராஜால் பாதிக்கப்பட்ட ஒருவர், தன் பணத்தை திரும்பப் பெறுவதற்காக ரவுடி கும்பல் ஒன்றிடம் தஞ்சம் அடைகிறார். அந்த ரவுடி கும்பல் நட்ராஜை கடத்தி வந்து, பணத்தைத் தரவில்லையென்றால் கொன்றுவிடுவதாக மிரட்டவும், தான் சேர்த்து வைத்திருக்கும் மொத்த பணத்தையும் எடுத்துக் கொண்டு தன்னை காப்பாற்ற வருமாறு தனது கூட்டாளிகளிடம் கூறுகிறார். ஆனால், பெரிய தொகை தங்கள் கைவசம் வந்ததும் அதன்மேல் ஆசைகொள்ளும் அவரது கூட்டாளிகள் பணத்தை எடுத்துக் கொண்டு நட்ராஜிற்கு ‘டாடா’ காட்டுகிறார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் நட்ராஜ் என்ன செய்கிறார்? அந்த ரவுடி கும்பலிடமிருந்து தப்பித்தாரா இல்லையா? நட்ராஜின் பணத்தாசை என்னவாகிறது? என்பதே ‘சதுரங்க வேட்டை’.

படம் பற்றிய அலசல்

நேர்த்தியான காட்சிகள், அசத்தலான வசனங்கள் மூலம் ‘யாருப்பா இது...?’ என தன் மீது கவனத்தைத் திருப்ப வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் வினோத். வெல்கம்! ஏமாற்றி சம்பாதிக்கும் கதைகள் தமிழுக்கு புதிதில்லைதான் என்றாலும், அதற்காக இயக்குனர் உருவாக்கியிருக்கும் சூழ்நிலைகளும், புத்திசாலித்தனமான காட்சியமைப்புகளும் நிச்சயம் கோடம்பாக்கத்திற்கு புதுசுதான். இப்படத்தில் உருவாக்கியிருக்கும் அத்தனை மோசடிகளும் நம் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் விஷயங்கள் என்பதால் நம்மால் அதை ஏற்றுக் கொள்ளவும் முடிகிறது.

‘5 லட்சம் போட்டா 15 கோடி எடுக்கலாம்’ என இரண்டு தலை பாம்பை சாமர்த்தியமாக ஏமாற்றி விற்கும் காட்சியோடு அறிமுகமாகிறார் நட்ராஜ். அதன் பிறகு அடுத்தடுத்து ‘ஈமு கோழி’, ‘எம்.எல்.எம். பிசினஸ், ‘நகைக்கடை ஆஃபர்’ ‘ரைஸ் புல்லிங் கோபுர கலசம்’ என நம்மைச்சுற்றி இத்தனை மோசடிகளா என வாய்பிளக்க வைத்திருக்கிறார்கள். சுவாரஸ்யமில்லாத பாடலோடு கொஞ்சம் ஸ்லோவாக ஆரம்பித்து பிறகு கியர் ஏற்றி விறுவிறுவென பயணித்து, ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ‘இதிலிருந்து எப்படித் தப்பிப்பார்?’ என நம்மை நகம் கடிக்க வைத்து ‘இடைவேளை’ போடுகிறார்கள். அதன்பிறகு ஆங்காங்கே சின்னச் சின்ன ஓட்டைகளோடும், சறுக்கல்களோடும் பயணித்து கடைசி 30 நிமிட க்ளைமேக்ஸில் நிமிர்ந்து உட்கார வைக்கிறது ‘சதுரங்க வேட்டை’. குறிப்பாக படத்தின் முடிவில் சொல்லியிருக்கும் மெசேஜ் (பழசாக இருந்தாலும்) நச்!

வித்தியாசமான கதைக்களம், பரபரப்பான காட்சிகள் என படத்தில் நிறைய ப்ளஸ்கள் இருந்தாலும், ஆங்காங்கே கொஞ்சம் போரடிக்கும் இடங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதோடு சில இடங்களில் லாஜிக் மீறல்களும் இல்லாமல் இல்லை.

நடிகர்களின் பங்களிப்பு

மோசடி மன்னன் கேரக்டருக்கு ‘நட்டி’ நச்சென்ற செலக்ஷன். ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அனுபவம் வாய்ந்த நடிகர் போல் கலக்கியிருக்கிறார். குறிப்பாக சாமியார் வேடம்போட்டு தொழிலதிபர் ஒருவரை மனமாற்றம் செய்யும்போது அவருடைய வசன உச்சரிப்பும், பாடி லாங்குவேஜும் பிரமாதம்! ஹீரோயின் இஷா கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் தங்கும் கேரக்டர். க்ளைமேக்ஸில் ரொம்பவே கவர்கிறார். ‘சுத்தத் தமிழ் பேசும் ரவுடி’ ஒருவரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அவரின் பாத்திரப்படைப்பும், நடிப்பும் ‘கலகல’வென ரசிக்க வைக்கிறது. இவர்களைத் தவிர படத்தில் வரும் ஒவ்வொரு சின்னச் சின்ன கேரக்டரிலும் நிறைய மெனக்கெடல்கள்.

பலம்

1. மோசடிப் பேர்வழிகளின் முகத்தைத் தோலுரித்துக் காட்டும் கதைக்களம்
2. சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் உருவாக்கப்பட்ட சில மோசடிக் காட்சிகளும், அதற்கு துணை நிற்கும் வசனங்களும், அழுத்தமான க்ளைமேக்ஸும்.
3. நடிகர்களின் பங்களிப்பு
4. ஒளிப்பதிவு

பலவீனம்

1. ஆங்காங்கே தொய்வடையும் திரைக்கதை
2. பாடல்களிலும், பின்னணி இசையிலும் இன்னும் மெனக்கெடல் தேவை
3. சில நீளமான காட்சிகளை எடிட்டிங்கில் இன்னும் ‘ஷார்ப்’ செய்திருக்கலாம்.

மொத்தத்தில்...

அறிமுக இயக்குனருக்கான படம் என்ற வகையில் ‘சதுரங்க வேட்டை’யை தாராளமாக வரவேற்கலாம். குறிப்பாக ஒரு படத்திற்கு வசனங்கள் எவ்வளவு பெரிய பலம் என்பதை இப்படம் நிரூபித்திருக்கிறது. ஆனால், இன்னும் கொஞ்சம் திரைக்கதையை கவனமாக செதுக்கியிருந்தால் முத்திரை பதித்திருக்கும் இந்த ‘சதுரங்க வேட்டை’.

ஒரு வரி பஞ்ச்: ரசிக்க வைக்கும் மோசடி!

எங்களுடைய ரேட்டிங் : 5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹர ஹர மஹாதேவகி - பாடல் வீடியோ


;