வேலையில்லா பட்டதாரி - விமர்சனம்

ஹீரோ ரகுவரனுக்காக ஒரு விசிட் அடிக்கலாம்!

விமர்சனம் 18-Jul-2014 4:03 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : வுண்டர்பார் ஃபிலிம்ஸ்
இயக்கம் : வேல்ராஜ்
நடிப்பு : தனுஷ், அமலா பால், சமுத்திரக்கனி, சுரபி, விவேக்
ஒளிப்பதிவு : அருண் பாபு
இசை : அனிருத்
எடிட்டிங் : எம்.வி.ராஜேஷ் குமார்

25-வது படம் என்பது ஒரு நடிகரின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல். அவரின் ரசிகர்கள் அனைவரும் அந்தத் தருணத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். தனுஷின் 25வது படமான இந்த ‘விஐபி’ அந்த ஆவலுக்கு தீனி போட்டிருக்கிறதா?

கதைக்களம்

தன் படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் அப்பா சமுத்திரக்கனியிடம் திட்டு வாங்கிக் கொண்டே எப்போதும் சும்மாவே சுற்றித் திரிகிறார் நாயகன் தனுஷ். அவருக்கும் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அமலாபாலுக்கும் காதல் வருகிறது. திடீரென ஒரு நாள் தனுஷின் அம்மா சரண்யா பொன்வண்ணன் மாரடைப்பில் இறந்துவிட, அவரின் உடலுறுப்புக்களைப் பொருத்தி வாழ்க்கை பெறுகிறார் சுரபி. அதனால் சுரபியின் அப்பா வைத்திருக்கும் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் இன்ஜினியர் வேலை கிடைக்கிறது தனுஷிற்கு. கம்பெனியில் சேர்ந்து நல்ல பெயரெடுக்கும் தனுஷிடம் கவர்மென்ட் சம்பந்தப்பட்ட புராஜெக்ட் ஒன்றை தனியாகப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. தங்களுக்கு வரவேண்டிய டென்டரை தனுஷ் தட்டிப் பறிப்பதால் அவர்மீது கோபம் கொள்கிறது போட்டி கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி. தன் அப்பாவிடமிருந்து பொறுப்பை வாங்கி கம்பெனியை நடத்த ஆரம்பித்த முதல் புராஜெக்ட்டிலேயே தோல்வி கிடைப்பதால் தனுஷை பழிவாங்க நினைக்கிறார் போட்டி கம்பெனியின் புது எம்.டி. அமிதேஷ். பிறகென்ன வழக்கம்போல் தமிழ்சினிமாவில் நடக்கும் சில ‘தள்ளு முள்ளு’களுக்குப் பிறகு சுபம்!

படம் பற்றிய அலசல்

வித்தியாசமான முயற்சிகளாக மேற்கொண்டு அதில் நிறைய பாராட்டுக்களையும், விருதுகளையும் தனுஷ் பெற்று வந்தாலும் ‘பொல்லாதவன்’, ‘படிக்காதவன்’ போன்ற ஒரு மாஸ் ஹிட்டை மீண்டும் கொடுக்க வேண்டும் என்ற ஆசையில்தான் இந்த ‘வேலையில்லா பட்டதாரி’யை கையிலெடுத்திருக்கிறார் தனுஷ். படத்தின் முதல் பாதி முழுக்க முழுக்க சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் பயணிக்கிறது. குறிப்பாக முதல் இரண்டு பாடல்களான ‘வாட் ஏ கருவாடு’, ‘ஊதுங்கடா சங்கு’ பாடல்களுக்கு தியேட்டரில் தனுஷ் ரசிகர்கள் ஆடித் தீர்த்துவிட்டார்கள். ஜாலியாக பயணித்துக் கொண்டிருந்த கதையில் திடீர் திருப்பமாக சரண்யா பொன்வண்ணனின் மரணத்தோடு ‘இடைவேளை’ போடுகிறார்கள். அதன் பிறகு வழக்கம்போல் வேலையில்லாமல் திரியும் நாயகனுக்கு ஒரு வேலை கிடைத்து அதில் எப்படி தன் சவாலை முடிக்கிறார் என்பதே இரண்டாம்பாதி.

தன் முதல் படத்தில் எப்படியும் தனுஷ் ரசிகர்களைத் திருப்திப்படுத்திவிட வேண்டும் என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார் இயக்குனர். ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களிடமிருந்து விசில் பறக்க வேண்டும் என்பதற்காக தனுஷிற்கான காட்சி, வசனம் என பார்ர்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார். அந்த அளவில் தான் நினைத்ததை இயக்குனர் சாதித்துவிட்டார். அதோடு என்ஜினியரிங் முடித்துவிட்டு வேலையில்லாமல் கஷ்டப்படும் இளைஞர்களுக்கு இப்படத்தையும் சமர்ப்பித்திருக்கிறார். அறிமுக இயக்குனரான வேல்ராஜுக்கு, இப்படத்தின் மற்ற அறிமுகங்களான ஒளிப்பதிவாளர் அருண் பாபு, எடிட்டர் எம்.வி.ராஜேஷ்குமார், சண்டைப்பயிற்சி இயக்குனர் ஹரி தினேஷ் என அத்தனை பேரும் பெரிய அளவில் கைகொடுத்துள்ளனர். அனிருத்தும் தன் வேலையை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். பின்னணியில் மட்டும் ஆங்காங்கே ‘3’ படத்தின் சாயல் தெரிகிறது.

நடிகர்களின் பங்களிப்பு

‘ரகுவரன்’ கேரக்டரில் வெளுத்து வாங்கியிருக்கிறார் தனுஷ். பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி, டான்ஸ், ஃபைட் என அத்தனை ஏரியாக்களையும் அடித்து துவம்சம் செய்திருக்கிறார். என்ன... இவை அத்தனையையும் தனுஷ் ஏற்கெனவே பல படங்களில் செய்துவிட்டார் என்பதுதான் பிரச்சனை!

அமலா பாலுக்கு அக்மார்க் தமிழ்சினிமா ஹீரோயின் வேடம்! கதைக்கு சம்பந்தமில்லையன்றாலும் கொடுத்த வேலையை சரியாகச் செய்துவிட்டு சத்தமில்லாமல் ஒதுங்கிச் செல்கிறார். கதையை நகர்த்தப் பயன்பட்டிருக்கும் சுரபிக்கு நடிப்பதற்கு பெரிதாக ‘ஸ்கோப்’ எதுவும் கொடுக்கப்படவில்லை. இப்படத்தில் தனுஷிற்கு இணையாக நடிப்பில் ஸ்கோர் செய்வது சமுத்திரக்கனியும், சரண்யா பொன்வண்ணனும்தான். அப்பா கேரக்டருக்கு சமுத்திரக்கனி ஏகப் பொருத்தம். அம்மா கேரக்டருக்காகவே ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது ஒன்றை எதிர்காலத்தில் உருவாக்கினால், அந்த விருது சரண்யாவுக்கு நிச்சயம்! அப்பாடா.... இந்த மாதிரி விவேக் எப்போது மீண்டும் திரையில் தோன்றுவார் என்றுதான் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்கள். இரண்டாம் பாதியை சுவாரஸ்யப்படுத்துவதே விவேக்கின் சின்னச் சின்ன காமெடிகள்தான். பணக்கார வில்லன் கேரக்டரில் அமிதேஷ் பாஸ் மார்க் வாங்குகிறார்.

பலம்

1. படத்தின் சுவாரஸ்யமான முதல் பாதியும், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் மாஸ் காட்சிகளும், அதற்குக் கை கொடுத்திருக்கும் வசனங்களும்.
2. தனுஷ், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரின் நடிப்பு.
3. அனிருத்தின் பாடல்களும், பின்னணி இசையும்!
4. ஒளிப்பதிவு, எடிட்டிங், சண்டைப் பயிற்சி

பலவீனம்

1. அழுத்தமில்லாத கதை.
2. ஹீரோயிசத்திற்காக திணிக்கப்பட்ட சில காட்சிகளும், லாஜிக் மீறல்களும்
3. நாயகன், நாயகிக்கான காதலில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கலாம்.

மொத்தத்தில்...

கதை, ஹீரோயிசம், லாஜிக் மீறல்கள் ஆகியவற்றைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாதவர்களுக்கு ‘வேலையில்லா பட்டாதரி’ செம மாஸ் என்டர்டெயினர்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை! குறிப்பாக தனுஷ் ரசிகர்களை ‘வேலையில்லா பட்டாதாரி’ கொண்டாட வைக்கும்!

ஒரு வரி பஞ்ச்: ஹீரோ ரகுவரனுக்காக ஒரு விசிட் அடிக்கலாம்!

எங்களுடைய ரேட்டிங் : 6/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;