‘சதுரங்க வேட்டை’ உங்களை ஏமாற்றாது... ஏன்?

‘சதுரங்க வேட்டை’ உங்களை ஏமாற்றாது... ஏன்?

கட்டுரை 17-Jul-2014 3:25 PM IST Chandru கருத்துக்கள்

அப்படி என்ன பெரிய சிறப்பு இருக்கப் போகிறது ‘சதுரங்க வேட்டை’யில்? என நீங்கள் நினைக்கலாம். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கியிருப்பதற்கு முக்கிய காரணம் இப்படத்தின் டீஸர்களும், அதில் இடம்பெற்ற ரசிக்க வைக்கும் வசனங்களுமே!. இயக்குனராக திரையுலகில் நுழைந்து தற்போது நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் மனோபாலா தயாரித்திருக்கும் முதல் படம் இந்த ‘சதுரங்க வேட்டை’. ஒளிப்பதிவாளர் ‘நட்டி’ நடராஜன், இஷா நாயர் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குனர் வினோத்.

‘இந்தப் படத்தை ஏன் பார்க்க வேண்டும்?’ என எல்லாப் படங்களுக்குமே கட்டுரைகள் எழுதுவது வழக்கம். ஒரு சிறிய வித்தியாசமாக இந்தப் படம் உங்களை ஏன் ஏமாற்றாது என்பதற்கான காரணங்களை இங்கே அடுக்குகிறோம்.

முதலில்... இப்படத்திற்காக தேர்ந்தெடுத்திருக்கும் கதைக்களத்தைச் சொல்லலாம். இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு கதையை இயக்குனர் வினோத் ‘சதுரங்க வேட்டை’யில் காட்டப்போவதில்லை. ஆனால், நிச்சயமாக நீங்கள் பார்த்திராத ஒரு புதிய கோணத்தில் அதை உங்களுக்காக காட்சிப்படுத்தியிருக்கிறாராம். ‘மங்காத்தா’, ‘சூது கவ்வும்’ படங்களைப் போல் இப்படமும் பணம் சம்பாதிக்க தேர்ந்தெடுக்கும் குறுக்குவழிகளை மையமாகக் கொண்டுதான் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக, சுவாரஸ்யமாக, புத்திசாலித்தனமாகக் காட்டியிருக்கிறாராம் இயக்குனர். இப்படத்தின் கதையைவிட, அதில் இடம்பெறும் வசனங்கள் நிச்சயம் பெரிய அளவில் பேசப்படும். ‘‘நல்லவனா இருந்தா செத்ததுக்கு அப்புறம்தான் சொர்க்கம்... கெட்டவனா இருந்தா வாழும் போதே சொர்க்கம்’’, ‘‘பணம் சம்பாதிக்கிறதுக்கு கொள்ளையடிக்கவோ, கொலை பண்ணவோ தேவையில்ல.... அதுக்கு ஆயிரம் வழியிருக்கு!’’, ‘‘உங்கள ஒருத்தன் ஏமாத்துனா அவனை திட்டாதீங்க, ஒரு வகையில அவன் உங்களுக்கு குரு’’ என டீசரில் இடம் பெற்றிருக்கும் சின்னச் சின்ன வசனங்களே இப்படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டியிருக்கிறது. டீஸரில் மட்டுமல்ல படம் முழுக்க இதுபோன்ற ‘ஷார்ப்’பான வசனங்கள் ஒவ்வொரு முக்கியமான காட்சியிலும் இடம் பெற்றிருக்கிறதாம்.

இப்படத்தின் நீளம் மொத்தம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள். ஆனால், எந்த இடத்திலும் உங்களுக்கு போரடிக்காத வகையில் பரபரவென காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்களாம். அதோடு ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் விஷயங்களிலும் மிகுந்த சிரத்தையோடு இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்களாம்.

கடைசியாக... ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் ஒரு படத்தை வாங்கி வெளியிடுகிறதென்றால் கண்டிப்பாக அந்தப் படத்தைப் பார்த்து, ரசித்து, ஆலோசித்த பிறகே களத்தில் இறங்குவார்கள். அந்தவகையில் இந்த வருடம் வெளிவந்த ‘கோலி சோடா’, ‘மஞ்சப்பை’ போன்ற படங்களின் தரத்தையும், அது தந்த வெற்றியையும் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இந்த ‘சதுரங்க வேட்டை’யையும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறதென்றால் நிச்சயம் ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி அவர்களுக்கு இந்தப் படத்தின் மேல் ஏற்பட்டிருக்க வேண்டும். இப்படத்தைப் பார்க்கும் ஆவல் உருவாக்கியிருப்பதற்கு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் வெளியீடும் ஒரு காரணம் என்பதை கண்டிப்பாக மறுக்க முடியாது.

பெரிய நட்சத்திர நடிகர்களோ, இயக்குனரோ இல்லாமல் நல்ல கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் ஜெயிக்க வைக்கும் காலமிது. இந்த லிஸ்ட்டில் ‘சதுரங்க வேட்டை’யும் இடம்பெறும் என்பதே தயாரிப்பாளர்களின் கணிப்பு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சதுரங்க வேட்டை 2 மோஷன் போஸ்டர்


;