தலைவிரித்தாடும் கௌதம் மேனனின் வில்லன்கள்!

தலைவிரித்தாடும் கௌதம் மேனனின் வில்லன்கள்!

கட்டுரை 16-Jul-2014 5:40 PM IST Chandru கருத்துக்கள்

தனக்கென்று தனியாக ஒரு பாணியை வைத்துக் கொண்டு, அதில் சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்து வருபவர் கௌதம் மேனன். தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களின் பட்டியலை தயார் செய்தால், அதில் இவருக்கும் நிச்சயம் இடம் உண்டு. இயக்குனர் பெயரைப் பார்த்து படத்திற்கு வரும் ரசிகர் கூட்டத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் கௌதம் மேனனின் தாய்மொழி மலையாளம்! இருந்தபோதுகூட தன் படங்களுக்கு சுத்தமான, கவித்துவமான தமிழ்ப் பெயர்களையே எப்போதும் சூட்டி அழகு பார்ப்பார். ‘மின்னலே’, ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘பச்சைக்களி முத்துச்சரம்’, ‘வாரணம் ஆயிரம்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘நடுநிசி நாய்கள்’ ‘நீதானே என் பொன்வசந்தம்’ என அவர் படங்களின் தலைப்புகள்கூட ஆயிரமாயிரம் கதைகள் சொல்லும்.... கவிதைகள் படிக்கும்!

தலைப்புக்காக தனிக்கவனம் செலுத்துவதோடு மட்டும்மே நின்றுவிடாமல் தன் படங்களின் நாயகர்கள், நாயககிகள், வில்லன்கள், அவர்களுக்கான நடை, உடை, பாவனை, கேரக்டர்களின் பெயர்கள், படப்பிடிப்புத் தளங்கள் என ஒவ்வொன்றையுமே பார்த்துப் பார்த்து, யோசித்து தேர்வு செய்வதில் கௌதம் வல்லவர். குறிப்பாக தன் படத்தின் நாயகிகளை மிக அழகாகக் காட்டியிருப்பார். ‘காக்க காக்க’வில் அன்புச்செல்வன், மாயா, பாண்டியன், ‘வேட்டையாடு விளையாடு’வில் ராகவன், ஆராதனா, அமுதன், இளமாறன், ‘வாரணம் ஆயிர’த்தில் கிருஷ்ணா, மாலினி, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’வில் கார்த்திக், ஜெஸ்ஸி என அவர் படங்களைப் பற்றிய நினைவுகளை அசைபோடத் தொடங்கினாலே அந்தந்த கேரக்டர்களின் பெயர்களும் மறவாமல் நினைவில் நிழலாடும்!

அவர் இயக்கத்தில் வெளிவந்த ஆக்ஷன் படங்களை கூர்ந்து கவனித்தால் அதில் இன்னொரு தனித்தன்மையும் இருப்பது தெரிய வரும். அது.... அவர் படங்களின் வில்லன்கள்! அவருடைய வில்லன்கள் அனைவருமே முகத்தில் வந்து விழும் அளவிற்கு தலைமுடியை அதிகம் வளர்த்திருப்பார்கள். அவர்களைப் பற்றிய ஒரு சிறப்புப் பார்வைதான் இந்தக் கட்டுரை

‘காக்க காக்க’ பாண்டியன், சேது

2001ல் ‘மின்னலே’ படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமான கௌதம் வாசுதேவ் மேனனின் இரண்டாவது படம் ‘காக்க காக்க’. ரவுடிகளுக்கும், போலீஸுக்கும் இடையே நடக்கும் நிழல் யுத்தங்களை வித்தியாசமான முறையில் இப்படத்தில் பதிவு செய்திருந்தார் கௌதம். சூர்யாவை அன்புச்செல்வனாக உருவாக்கி, முதல்முறையாக அவருக்கு ‘காக்கி’யை மாட்டி அழகு பார்த்தார். அவருக்கு ஜோடியாக மாயா எனும் ஸ்கூல் டீச்சராக ஜோதிகா கலக்கி இருந்தார். இப்படத்தில் அனைவரையும் மிரள வைத்த இன்னொரு கதாபாத்திரம்தான் வில்லன் பாண்டியன். ‘யுனிவர்சிட்டி’ படத்தின் மூலம் நாயகனாக தமிழில் அறிமுகமான ஜீவனை தன் படத்தில் வில்லனாகப் பயன்படுத்தியிருந்தார் கௌதம். அந்த கதாபாத்திரத்தின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாகத்தான் ஹீரோவாக அறிமுகமானவர் வில்லனாக சம்மதித்திருப்பார். ஜீவனின் நம்பிக்கையை கௌதமும் வீணடிக்கவில்லை. சிட்டியின் முக்கியப்புள்ளிகளுடைய வாரிசுகளை கடத்தி பணம் பறிக்கும் தாதாவாக அசத்தலான கேரக்டரில் ஜீவன் நடித்திருந்தார். இவரின் பாஸாக வரும் இன்னொரு வில்லன் ‘சேது’வாக ஜேபி (சூது கவ்வும்) நடித்திருந்தார். இவர்கள் இருவருமே சடை பின்னும் அளவுக்கு தலைகொள்ளா முடியுடன் படம் முழுக்க வலம் வருவார்கள். இதில் இன்னொரு சிறப்பம்சம் இப்படத்தில் ஜீவனுக்கு குரல் கொடுத்திருப்பவர் சாட்சாத் கௌதம் மேனன்தான்.

‘வேட்டையாடு விளையாடு’ அமுதன், இளமாறன்

‘காக்க காக்க’ தந்த உற்சாகத்தால் உலகநாயகனை வைத்து எடுத்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தையும் போலீஸ் பின்னணியிலேயே உருவாக்கினார் கௌதம் மேனன். ஏற்கெனவே சில படங்களில் போலீஸாக கமல் நடித்திருந்தாலும், இப்படத்தின் டிசிபி ‘ராகவன்’ கேரக்டர் அதில் உச்சம் என்று சொல்லலாம். இப்படத்திலும் நாயகி ஜோதிகாதான். ஆராதனா கேரக்டரில் அசத்தியிருப்பார். இவர்களையும் தாண்டி இப்படத்தில் வரும் அமுதன், இளமாறன் கேரக்டர்கள் பெரிதாகப் பேசப்பட்டன. கொடூர எண்ணம் கொண்ட ‘சைக்கோ’ மெடிக்கல் ஸ்டூண்ட்ஸாக இந்த கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் டேனியல் பாலாஜியும், சலீமும். அதற்கு முன்பு சின்ன சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த டேனியல் பாலாஜியின் நடிப்பை ‘காக்க காக்க’வில் பார்த்து வியந்த கௌதம், அவரை ‘வேட்டையாடு விளையாடு’வில் முக்கிய வில்லனாகப் பயன்படுத்தினார். டிசிபி ராகவனுக்கு இந்த அமுதனும், இளமாறனும் சிம்ம சொப்பனமாக இப்படத்தில் விளையாட்டுக் காட்டுவார்கள். இப்படத்திலும் வில்லன்கள் இருவருமே தலை நிறைய முடியுடன்தான் வலம் வருவார்கள். அதிலும் க்ளைமேக்ஸில் டிசிபி ராகவன் இளமாறனை தரையில் முட்டிபோட வைத்து அவனின் தலைமுடியை கொத்தாகப் பிடித்து அமுதனிடம் வாக்குவாதம் செய்யும் காட்சி எப்போதும் நினைவில் நிற்கும். இப்படத்திலும் தன் குரலை இளமாறன் கேரக்டருக்குக் கொடுத்திருப்பார் கௌதம்.

‘பச்சைக்களி முத்துச்சரம்’ லாரன்ஸ்

அதுவரை ஆக்ஷன் ஹீரோவாக பார்க்கப்பட்டு வந்த சரத்குமாரை ஒரு சாதாரண குடும்பஸ்தனாக மாற்றி ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தைக் கொடுத்தார் கௌதம். சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தவர் ஆன்ட்ரியா (அறிமுகம்). இப்படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் தனது ஆஸ்தான நாயகி ஜோதிகாவை நடிக்க வைத்தார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் அமைந்திருந்தது ஜோதிகாவின் வில்லி கேரக்டர். கண்களில் கான்டாக்ட் லென்ஸ், ஒரு பக்க வளைய மூக்குத்தி என ஜோதிகாவை புது பரிணாமத்தில் காட்டியிருப்பார். ‘லாரன்ஸ்’ எனும் கேரக்டரில் மெயின் வில்லனாக இப்படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன். இவரும் கௌதம் படங்களின் வழக்கமான வில்லன்கள்போல் தலைகொள்ளா முடியுடன்தான் இருப்பார். இவருக்கு பின்னணி கொடுத்ததும் கௌதம்தான்.

‘வாரணம் ஆயிரம்’ ஆசாத்

சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமாக அமைந்த படம் ‘வாரணம் ஆயிரம்’. இப்படத்தில் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் நடித்தார் சூர்யா. கேரக்டர்கள்தான் இரண்டு.... ஆனால், அதற்காக போடப்பட்ட கெட்அப்புகள் மட்டும் 15ஐயும் தாண்டும். 16 வயது இளைஞன் முதல் 70 வயது முதியவர் வரை பல தோற்றங்களில் சூர்யாவின் கடுமையான உழைப்பை வெளிக்கொணர்ந்தார் கௌதம். சிம்ரனும், சமீரா ரெட்டியும் (அறிமுகம்) நாயகிகளாக நடித்திருந்தார்கள். இப்படத்தில் குழந்தைகளையும், பெண்களையும் கடத்தி விற்கும் காஷ்மீர் தாதாவாக ‘ஆசாத்’ எனும் கேரக்டரில் நடித்திருந்தார் ‘பப்லு’ என்றெழைக்கப்படும் ப்ரித்விராஜ். கொஞ்ச நேரமே வந்தாலும் ‘ஆசாத்’ கேரக்டர் ரசிகர்களை வெகுவாக பாதித்ததையும் மறுக்க முடியாது. ‘ஆசாத்’தும் தலைமுடியை நிறையவே வளர்த்திருப்பார். இப்படத்தில் பப்லு தனது சொந்தக்குரலிலேயே பேசி நடித்தார்.

‘அஜித்-55’

தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் படங்களில் ‘மோஸ்ட் வான்டட் லிஸ்ட்’டில் இடம்பிடித்திருக்கும் படங்களில் இதுவும் ஒன்று. ஏற்கெனவே ஒரு முறை ‘மிஸ்’ஸாகி தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் தயாரிப்பில் மீண்டும் இணைந்துள்ளது அஜித்-கௌதம் மேனன் கூட்டணி. அஜித் இரட்டை வேடம் ஏற்றிருக்கும் இப்படத்தின் வில்லன்தான் இப்போது ‘டாக் ஆஃப் த சிட்டி’. அருண் விஜய்யும் நடிக்கிறார் என்பது இப்படம் ஆரம்பமான போதே உறுதியானது.... ஆனாலும் அவருக்கு என்ன கேரக்டர் என்பது சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் அவார்ட்ஸில் தயாரிப்பாளர் ரத்னம் அறிவித்த பிறகுதான் தெரியவந்தது. ‘‘ஆமாம்.... ரத்னம் சார் சொன்னதுபோல் நான் வில்லனாகத்தான் நடிக்கிறேன். இப்படம் ‘செம ஸ்டைலிஷ்’ ஆக இருக்கும்’’ என அருண் விஜய்யும் இப்போது ‘ட்வீட்’டியிருக்கிறார். இப்படத்திற்காக அருண் விஜய்யும் நிறைய முடி வளர்த்து, வித்தியாசமான தாடி, மீசையுடன்தான் இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் ஒருவரை, அஜித் படத்திற்காக கௌதம் மேனன் வில்லனாக்கியிருக்கிறார் என்றால் நிச்சயம் அந்த கேரக்டர் ‘பவர்ஃபுல்’லாகத்தான் இருக்கும். அது எப்படியிருக்கும் என்பதைப் பார்க்க நாம் கொஞ்சம் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

மொத்தத்தில் கௌதம் மேனனின் வில்லன்கள் தலைவரித்தாடுவது தொடர் கதையாகிவிட்டது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;