தனுஷ் 25: ஒரு ‘VIP’யின் பயணம்!

தனுஷ் 25: ஒரு ‘VIP’யின் பயணம்!

கட்டுரை 15-Jul-2014 5:44 PM IST Chandru கருத்துக்கள்

சினிமாவில் நுழைந்து ஜெயிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே இருக்கிறது. ஆனால், எல்லோருக்கும் அது சாத்தியமில்லை. வெற்றி பெற்றவர்களை மட்டுமே சினி உலகம் வெளிக்காட்டும். போட்டியில் கலந்துகொண்ட 1000 பேரைப் பற்றி எந்த ஒரு ரசிகனுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி, 1000 பேர் கலந்து கொள்ளும் போட்டியில் ஜெயிப்பதென்பது சாதாரண விஷயமில்லை. அப்படி ஜெயித்து வந்தவர்களில் ஒருவர்தான் நடிகர் தனுஷ். ‘துள்ளுவதோ இளமை’யில் ஆரம்பித்த அவருடைய சினிமா பயணம் தற்போது ‘வேலையில்லா பட்டதாரி’யில் ‘தனுஷ் 25’ என்ற மைல்கல்லை வந்தடைந்திருக்கிறது. இந்த வெற்றிப் பயணத்துக்குப் பின்னால் அவரது தந்தை கஸ்தூரி ராஜா, அண்ணன் செல்வராகவன் ஆகியோரின் பங்கு இருக்கிறதென்றாலும், அதையும் தாண்டி தனுஷின் கடின உழைப்புக்கும் நிச்சயம் பெரிய பங்கு இருக்கிறது. அவரின் இந்த 25 படங்களைப் பற்றிய ஒரு மீள் பார்வைதான் இந்தக் கட்டுரை!

18 வயதில் ஹீரோ!

அண்ணன் செல்வராகவன் கதை எழுத, தந்தை கஸ்தூரி ராஜா அதை இயக்க 2002ஆம் ஆண்டில் ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் தனுஷ். அப்போது அவருக்கு வயது வெறும் 18தான். ஒல்லியான தேகம், பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பையன் போன்ற தோற்றம் என ஒரு சினிமா ஹீரோவுக்கான எந்த அடையாளமும் இல்லாமல் தனுஷ் அறிமுகமானதாலோ என்னவோ சில ஊடகங்கள் அப்போது அதை விமர்சனம் செய்தன. ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன்னுடைய வேலையில் மட்டுமே கவனம் செலுத்தினார் தனுஷ். ‘துள்ளுவதோ இளமை’ படம் வெளிவந்து விமர்சன ரீதியாக பெரிய குற்றச்சாட்டை சந்தித்தாலும், தனுஷ் எனும் நாளைய நாயகனை அழுத்தும் திருத்தமாக ரசிகர்களுக்கு சுட்டிக் காட்டியது. பட்டையைக் கிளப்பிய பாடல்களுக்கு தனுஷ் ஆடிய ஆட்டம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. படமும் பட்டி தொட்டியெங்கும் பரவலாக கல்லா கட்டியது.

‘சைக்கோ’வாக நடிப்பில் அசத்திய தனுஷ்!

‘அதிர்ஷ்டத்தால் முதல் படத்தில் ஜெயித்துவிட்டார்’ என தன்னைப் பற்றி பேசியவர்களின் வாயை அடைக்கும்விதமாக ‘காதல் கொண்டேன்’ படத்தில் வெகுண்டெழுந்தார் தனுஷ். செல்வராகவனின் அற்புதமான திரைக்கதை, யுவன் ஷங்கர் ராஜாவின் சூப்பர்ஹிட் பாடல்கள் என 2003ல் வெளிவந்த தனுஷின் இரண்டாவது படமான ‘காதல் கொண்டேன்’ அந்த வருடத்தின் பிளாக்பஸ்டர்களில் ஒன்று! ‘வினோத்’ என்ற சைக்கோ மாணவனாக நடிப்பில் மிரட்டியிருந்தார். அதிலும் அப்படத்தில், ‘‘தூங்கிக் கொண்டிருக்கும் தனுஷை கணக்கு வாத்தியார் எழுப்பி திட்ட, விறுவிறுவென சென்று போர்டில் அந்த ‘பிராப்ள’த்தை கச்சிதமாக போட்டு முடித்துவிட்டு மீண்டும் வந்து படுத்துக் கொள்வார்’’ எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ‘மாஸ்’ காட்சி அது! இப்போதும்கூட தனுஷை மிமிக்ரி செய்ய வேண்டுமென்றால் ‘திவ்யா.... திவ்யா’ என இப்படத்தில் அவர் பேசிய வசனத்தைதான் பயன்படுத்துவார்கள். ‘காதல் கொண்டேன்’ தனுஷின் இன்னொரு பரிமாணத்தை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எடுத்துக் காட்டியது.

கமர்ஷியல் ஹீரோ அவதாரம்!

‘காதல் கொண்டேன்’ மூலம் தனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை கச்சிதமாக பயன்படுத்தி ‘திருடா திருடி’ படத்தையும் வெற்றிப் படமாக மாற்றினார் தனுஷ். முதல் இரண்டு படங்களுக்கு கொஞ்சமும் சம்பந்தமேயில்லாத இப்படத்தில்தான் தனுஷ் தனி ஹீரோவாக அவதாரம் எடுத்தார். டான்ஸ், ஃபைட் மட்டுமல்ல தன்னால் காமெடியும் செய்ய முடியும் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்தார். அறிமுகமான முதல் மூன்று படங்களுமே சூப்பர்ஹிட் வரிசையில் இடம் பிடிக்க நம்பிக்கை நாயகனாக பார்க்கப்பட்டார் தனுஷ். ஆனால் அதன்பிறகு அவர் நடிப்பில் வெளிவந்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’, ‘சுள்ளான்’, ‘ட்ரீம்ஸ்’, ‘தேவதையைக் கண்டேன்’ ஆகிய படங்கள் அவரின் பட எண்ணிக்கையை கூட்டிக் கொள்ள மட்டுமே உதவின. இதில் ‘தேவதையைக் கண்டேன்’ படம் மட்டுமே கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்றது.

பாலுமகேந்திரா கொடுத்த புகழ்!

2005ஆம் ஆண்டு தனுஷிற்கு ஒரு மிகப்பெரிய கௌரவம் கிடைத்தது. அது.... தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை வாங்கிக் குவித்த மரியாதைக்குரிய இயக்குனர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதற்குக் கிடைத்த வாய்ப்புதான். ‘அது ஒரு கனாக்காலம்’ படம் கமர்ஷியல் ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும், தனுஷிற்கு தன் நடிப்பைப் புடம்போட பெரிதும் உதவியது. அதோடு பாலுமகேந்திராவே தனுஷை பயன்படுத்தியிருக்கிறாரே என்ற அடையாளமும் தனுஷிற்கு வந்து சேர்ந்தது.

‘கொக்கி குமார்’ தந்த எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்!

‘காதல் கொண்டேன்’ தந்த வெற்றி செல்வராகவன்&தனுஷ் கூட்டணியில் உருவான ‘புதுப்பேட்டை’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஒரு சாதாரண மாணவன் எப்படி மிகப்பெரிய தாதாவாகிறான் என்பதை நிஜ முகத்தோடு இப்படத்தில் சொல்ல முயன்றார் செல்வராகவன். இப்படம் வெளிவந்து மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டு பண்ணியது. ஆனால், அதிக வன்முறைக் காட்சிகள் இருந்ததாலும், பெண்களைக் கவராததாலும் வணிகரீதியாக இப்படம் ஏமாற்றத்தையே சந்தித்தது. இருந்தாலும், அப்படத்தில் தாதாவாக வாழ்ந்த ‘கொக்கி குமாரை’ தமிழ்கூறும் நல்லுலகு என்றென்றும் ஞாபகம் வைத்திருக்கும்.

இந்தியாவின் புரூஸ் லீ

ஹாட்ரிக் வெற்றியோடு தனது பயணத்தை தனுஷ் ஆரம்பித்திருந்தாலும், அதன் பிறகு ஒரு மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்க அவருக்கு சிறிது காலம் தேவைப்பட்டதையும் மறுப்பதற்கில்லை. ‘திருடா திருடி’ படத்திற்குப் பிறகு அவருடைய நடிப்பில் வெளிவந்த படங்களில் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ மட்டுமே சூப்பர் ஹிட். தொடர்ந்து... அறிமுக இயக்குனர் வெற்றிமாறனின் ‘பொல்லாதவன்’ படமும் தனுஷிற்கு ‘சூப்பர்ஹிட்’டை கொடுத்தது. இப்படத்தில் டான்ஸ், ஃபைட், பெர்ஃபாமென்ஸ் என பட்டையைக் கிளப்பினார் தனுஷ். ரொமான்ஸிலும் புதிய பரிணாமம் காட்டினார். அதோடு ‘சிக்ஸ் பேக்’ வைத்து அவர் போட்ட ‘க்ளைமேக்ஸ்’ சண்டைக்காட்சி தனுஷின் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்துப்போக அவரை செல்லமாக ‘இந்தியாவின் புரூஸ் லீ’ என அழைத்தனர். இப்படத்திற்குப் பிறகுதான் அவருக்கான ரசிகர்கள் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்தது. இப்படத்திற்குப் பிறகு வெளிவந்த ‘யாரடி நீ மோகனி’யும் சூப்பர்ஹிட் வரிசையில் இடம்பிடிக்க உற்சாகத்தின் உச்சிக்குச் சென்றார் தனுஷ். ரஜினி, விஜய், அஜித், சூர்யா ஆகியோருக்கு ஜோடியாக நடித்த முன்னணி நடிகை நயன்தாராவையும் இப்படத்தில் தனக்கு ஜோடியாக்கி அனைவரின் புருவத்தையும் உயர வைத்தார் தனுஷ்.

தேசிய விருதுகளைக் குவித்த ஆடுகளம்!

இந்திய சினிமாவைப் பொறுத்தவரை மிகப்பெரிய சினிமா விருதாகப் பார்க்கப்படுவது மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் தேசிய விருதுகளைத்தான். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தேசிய விருதை ஒன்றல்ல, இரண்டல்ல.... மொத்தம் ஆறு விருதுகளை வாங்கிக் குவித்தது தனுஷ் நடிப்பில் 2011ல் வெளிவந்த ‘ஆடுகளம்’ திரைப்படம். வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் நடித்த தனுஷ் இப்படத்திற்காக ‘சிறந்த நடிகர்’ என்ற விருதை வென்றதோடு, ‘ஒத்த சொல்லால...’ பாடலுக்கு அற்புதமாக நடனமாடி, தன்னை ஆட்டுவித்த மாஸ்டர் தினேஷிற்கும் ‘சிறந்த நடன ஆசிரியர்’ விருதையும் வாங்கக் காரணமானார். ‘ஆடுகளம்’ படம் தேசிய விருதை மட்டுமல்லாமல், 5 ஃபிலிம்ஃபேர் விருதுகளையும், 4 ‘சர்வதேச தென்னிந்திய விருது’களையும் வாங்கிக் குவித்தது. அவற்றில் தனுஷின் ‘சிறந்த நடிகரு’க்கான 2 விருதுகளும் அடக்கம். ஆக, மொத்தம் ஒரே வருடத்தில் மூன்று விருது விழாக்களில் சிறந்த நடிகராக கௌரவிக்கப்பட்டார் தனுஷ். ‘ஆடுகளம்’ படம் இந்திய சினிமா ரசிகர்களையும் கொஞ்சம் தனுஷின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.

‘கொலவெறி’ மூலம் உலகப்புகழ்!

இப்படி ஒரு வெற்றி கிடைக்கும் என தனுஷ் உட்பட ‘கொலவெறி’ பாடலை உருவாக்கிய டீமில் இருந்த யாரும் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ எனும் நிறுவனத்தைத் தொடங்கி, அதன் மூலம் தனது மனைவி ஐஸ்வர்யாவை இயக்குனராக களமிறக்கினார் ‘3’ படத்தில்! அதோடு, அனிருத் என்ற இளம் இசையமைப்பாளரையும், கமலின் மகள் ஸ்ருதிஹாசனை தமிழிலும் அறிமுகம் செய்து வைத்தார் தனுஷ். இப்படம் ஆரம்பித்தபோது இருந்த எதிர்பார்ப்பைவிட ‘கொலவெறி’ பாடல் உலகமெங்கும் ஹிட்டடித்த பிறகு எழுந்த எதிர்பார்ப்பு எக்கச்சக்கமானது. ‘யு டியூபி’ல் ஒரு தமிழ்ப் பாடலை 8 கோடி பேர்களுக்கும் மேல் பார்த்த சரித்திரத்தை ‘கொலவெறி’ பெற்றது. ‘ரஜினியின் மருமகன்’ என்ற அடையாளத்தையும் தாண்டி தனுஷின் தனித்துவம் இதன்பிறகு பன்மடங்கு உயர்ந்தது.

ஹிந்தியிலும் வெற்றிக்கொடி!

பொதுவாகவே தமிழிலிருந்து ஹிந்திக்குச் சென்று ஜெயித்தவர்கள் பெரும்பாலும் டெக்னீஷியன்களாகவோ அல்லது இயக்குனர்களாகவோதான் இருப்பார்கள். இங்கிருந்து சென்று பாலிவுட்டில் ஒரு நடிகர் ஜெயிப்பதென்பது சாதாரண காரியம் அல்ல. ஆனால் அதையும் ‘ரான்ஜ்னா’ மூலம் செய்து காட்டினார் நடிகர் தனுஷ். அதிலும் தனுஷின் நடிப்பை புகழ்ந்து தள்ளி எழுதின பாலிவுட் மீடியாக்கள். இதனால் இந்தியாவெங்கும் ரசிகர்களின் இதயங்களை வென்றார் தனுஷ். இப்படம் ஹிந்தியில் பெரிய வெற்றியைப் பெற்றது. ‘சிறந்த அறிமுக நடிகரு’க்கான ஃபிலிம்ஃபேர் விருதையும் இப்படம் தனுஷிற்கு வாங்கிக் கொடுத்தது.

தனுஷ் 25!

தனுஷ் நடிப்பில் வெளிவரும் படம் கமர்ஷியல் ரீதியாக வெற்றியைச் சந்திக்கலாம், அல்லது தோல்வியைச் சந்திக்கலாம். ஆனால், கண்டிப்பாக தனுஷ் என்ற நடிகர் தோற்றதே இல்லை. ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொரு படத்திலும் தனது தனித்துவத்தை நிரூபித்துக்கொண்டேதான் வருகிறார் தனுஷ். அவரின் இந்த கடுமையான உழைப்புதான் இன்று அவரை ‘வேலையில்லா பட்டதாரி’ மூலம் ‘தனுஷ் 25’ என்ற இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. 12 வருடங்களில் 25 படங்களில் நடித்திருப்பதே நிச்சயம் பெரிய சாதனைதான். ஒரு நடிகராக அறிமுகமாகி பாடகராக ஜெயித்து, தயாரிப்பாளராகவும் சாதித்துக் கொண்டிருக்கும் தனுஷிற்கு 25-ஆவது படமான ‘வேலையில்லா பட்டதாரி’ சிறப்பானதொரு வெற்றியைக் கொடுக்க நமது ‘டாப் 10 சினிமா’வும் வாழ்த்தி மகிழ்கிறது.

25 படங்களின் பட்டியல்

1. துள்ளுவதோ இளமை
2. காதல் கொண்டேன்
3. திருடா திருடி
4. புதுக்கோட்டையிலிருந்து சரவணன்
5. சுள்ளான்
6. ட்ரீம்ஸ்
7. தேவதையைக் கண்டேன்
8. அது ஒரு கனாக்காலம்
9. புதுப்பேட்டை
10. திருவிளையாடல் ஆரம்பம்
11. பரட்டை என்கிற அழகு சுந்தரம்
12. பொல்லாதவன்
13. யாரடி நீ மோகினி
14. படிக்காதவன்
15. குட்டி
16. உத்தமபுத்திரன்
17. ஆடுகளம்
18. சீடன்
19. மாப்பிள்ளை
20. வேங்கை
21. மயக்கம் என்ன
22. 3
23. மரியான்
24. நய்யாண்டி
25. வேலையில்லா பட்டதாரி

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;