சினிமாவை காப்பாற்ற சேரனின் புதிய முயற்சி!

சினிமாவை காப்பாற்ற சேரனின் புதிய முயற்சி!

செய்திகள் 15-Jul-2014 2:40 PM IST inian கருத்துக்கள்

இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான சேரன் 'C2H' என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை துவங்கியுள்ளார். இதன் துவக்க விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் சேரன் பேசும்போது,

‘‘கடந்த வருடத்தில் வெளியான படங்களின் எண்ணிக்கையில் 10 சதவிகித படங்களே வெற்றி பெற்றது. 90 சதவிகித படங்கள் தோல்வியடைந்த படங்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே! சென்ற வருடம் 300-க்கும் அதிகமான படங்கள் வெளியீட்டிற்கு தயாரான நிலையில் 130 படங்கள் மட்டுமே வெளியானது. இந்த ஆபத்தான நிலையை அலசி ஆராய்ந்து பார்த்தபோது மக்களின் நேரமின்மையும், மக்களுடைய வேலைப்பளுவில் கிடைக்கும் நேரத்தில் திரைப்படம் பார்ப்பதான பழக்கமும், அதற்கான வசதிகளும் வந்துவிட்டதே காரணம் என்பதை அறிந்தேன். இதை பயண்படுத்தி சில சமூக விரோதிகள் அனுமதியின்றி திரைப்படங்களை திருட்டு வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த திருட்டுத்தனங்களை களைந்து முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுப்பது தான் எங்களின் நோக்கம். பெரிய படங்களை முதலில் திரையரங்கிலும், பின்னர் டிவிடி, கேபிள், செட்டாப் பாக்ஸ், டிடிஎச், இனையதளம் உள்ளிட்டவற்றிலும், சிறிய படங்களை திரையரங்கிலும், அதே நாளில் டிவிடி, கேபிள், செட்டாப் பாக்ஸ், டிடிஎச், இனையதளம் உள்ளிட்டவற்றில் திரையிட்டால் திரைத்துறை நஷ்டத்தை சரி செய்யவும், தனிமனித நஷ்டத்தை ஈடுகட்டவும் முடியும் என எங்கள் ஆராய்ச்சி உணர்த்தியது.

சிறிய படங்களை குறைந்த தியேட்டர்களில் வெளியிட்டு, அதே நாளில் டிவிடி, கேபிள், செட்டாப் பாக்ஸ், டிடிஎச், இணையதளம் ஆகியவற்றுக்கு கொண்டு சென்றால் வெளியாகமல் தேங்கி கிடக்கும் அனைத்துப் படங்களும் வெளியாகவும், வியாபாரமாகவும் வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டே C2H நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. இதில் ‘2’ என்பது குறிப்பது இரண்டாம் தளம். முதல் தளம் திரையரங்கு. இரண்டாம் தளம் வீடு மற்ற இடங்கள். இந்த நிறுவனம் திரைப்படங்களை திரையரங்கம் அல்லாது டிவிடி, கேபிள், செட்டாப் பாக்ஸ், டிடிஎச், இணையதளம் என பல வடிவங்களில் வெளியிடும்’’ என்றார்.

''C2H நிறுவனம் வெளியிடும் படங்களை திருடுபவர்களை கண்டுபிடித்து காவல்துறையில் ஒப்படைத்து சட்டபடி நடவடிக்கை எடுப்பதற்கு பல குழுக்களும், வழக்கறிஞர்களும், வழக்கறிஞர் ராஜாசெந்தூர பாண்டியன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே பர்மா பஜார் வியாபாரிகளும், தமிழகம் முழுக்க டிவிடி விற்பனை செய்யும் அனைத்து வியாபாரிகளும் இந்த அழைப்பை ஏற்று இனி வரும் படங்களை முறையான அனுமதி பெற்று வியாபாரம் செய்யுங்கள்’’ என 'C2H' நிறுவனத்தின் சார்பில வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரங்கு பொம்மை - ட்ரைலர்


;