தமிழை கட்டாயமாக்க தமிழ்நடைப் பேரணி!

தமிழை கட்டாயமாக்க தமிழ்நடைப் பேரணி!

செய்திகள் 8-Jul-2014 10:37 AM IST Inian கருத்துக்கள்

வெற்றித் தமிழர் பேரவை சார்பில் கவிஞர்கள் திருநாள் கலை இலக்கியத் திருவிழா ஜூலை 13, ஞாயிற்றுக் கிழமை கோவை ‘கொடீசியா' வளாகம் அரங்கில் நிகழ்கிறது. இந்நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக கவிப்பேரரசு வைரமுத்து மணிவிழா மற்றும் பத்மபூஷண் விருதுக்கான பாராட்டு விழாவும் நிகழ்கிறது.

கலை இலக்கியக் கருத்தரங்கிற்கு சக்தி நிறுவனங்களின் தலைவர் நா.மகாலிங்கம் தலைமை தாங்குகிறார். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் முதன்மை விருந்தினராகப் பங்கேற்கிறார். மலேசிய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை மத்திய துணை அமைச்சர் டத்தோ சரவணன், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசி விமலா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். அதனைத் தொடர்ந்து இயக்குநர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். கவிப்பேரரசு வைரமுத்து ஏற்புரை வழங்குகிறார்.

முன்னதாக ஜூலை 12-ஆம் நாள் கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் "தமிழ்நடை"ப் பேரணி நிகழ்கிறது. தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயமாய் ஒரு பாடமாக்கக் கோரியும்,தேசிய நூலாகத் திருக்குறளை அறிவிக்கக் கோரியும், நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டியும் நிகழும் இந்தப் பேரணியில் தமிழறிஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் மாணவ மாணவியர் பங்கேற்கின்றனர். காலை 7 மணிக்கு கோவை சிவானந்தா காலனியில் தொடங்கும் இந்தப் பேரணி வி.கே.கே.மேனன் சாலையில் நிறைவடைகிறது

ஜூலை 12-ஆம் நாள் மாலை கோவையில் பொன்னேகவுண்டன் புதூர் கிராமத்தில் ஓராண்டுக்குள் 6000 மரக்கன்றுகள் நட்டு 'வைரவனம்' உருவாக்கும் திட்டத்தின் தொடக்க விழா நிகழ்கிறது. இதனை வெற்றித்தமிழர் பேரவையுடன் இணைந்து மாரியம்மன் கோவில் அறக்கட்டளை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு இயக்கம், பொன்னே கவுண்டன்புதூர் கிராமப் பொதுமக்கள் ஆகியோரின் ஆதரவில் ’சிறுதுளி’ மற்றும் 'ராக்’ அமைப்பினர் ஊராட்சித் துணைத்தலைவர் சத்தியமூர்த்தி, ராக் அமைப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் தலைமையில் செய்து வருகின்றனர். சுழற்சங்கங்கள் சார்பில் இதற்கான சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கப்படுகிறது.

இந்நிகழ்வையொட்டி 60 பள்ளிகளுக்கு கவிப்பேரரசு வைரமுத்துவின் 36 படைப்புகள் அடங்கிய பேழைகள் பரிசளிக்கப்படுகின்றன. தமிழகமெங்கும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு கவிப்பேரரசு வைரமுத்து படைப்புகள் சார்ந்த இலக்கியப் போட்டிகள் நிகழ்த்தப்பட்டு 60,000 ரூபாய் அளவில் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. 60 தமிழார்வலர்கள் குருதிக்கொடை வழங்குகின்றனர். கவிஞர்கள் திருநாள் விருது இந்த ஆண்டு கவிஞர் கல்யாண்ஜிக்கு (வண்ணதாசன்) வழங்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;