‘என் வாழ்க்கையை திசை மாற்றியவர் ராஜாமணி!’ - சமுத்திரக்கனி

‘என் வாழ்க்கையை திசை மாற்றியவர் ராஜாமணி!’ - சமுத்திரக்கனி

செய்திகள் 7-Jul-2014 10:13 AM IST Top 10 கருத்துக்கள்

'மைந்தன்' படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. படத்தின் இசைத்தட்டை மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் வெளியிட இயக்குநர் சமுத்திரக்கனி, நடிகர்கள் விமல், ஸ்ரீகாந்த், நட்ராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மலேசியாவில் தொலைக்காட்சி மற்றும் பண்பலைகளில் புகழ் பெற்று விளங்கும் ஆஸ்ட்ரோ நிறுவனம் முதலில் தயாரித்த படம் ‘அப்பளம்’. இரண்டாவது படமாக 'மைந்தன்' படத்தை தயாரித்துள்ளது. சி.குமரேசன் நாயகனாக நடித்து இயக்கியுள்ளார். 'புன்னகை பூ 'கீதா, ஷைலா நாயர் நாயகிகளாக நடித்துள்ளனர். மன்ஷேர்சிங் இசையமைத்துள்ளார்.

விழாவில் ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் நிர்வாகத் துணைத்தலைவர் ராஜாமணி பேசும் போது, ‘‘தமிழில் 'அப்பளம்' முதல்படம். இரண்டாவது படம் 'மைந்தன்' . படம் தயாரிப்பது லாபநிச்சயம் இல்லாத தொழில்தான். இருந்தாலும் எதிலும் முறை, திட்டமிடுதல், விளம்பரம் ஆகியவற்றை சரியாகச் செய்தால் வெற்றி பெற முடியும். இதை ஊடகத்துறையில் நாங்கள் செய்து காட்டியுள்ளோம். இப்படத்தில் 100% மலேசிய தமிழர்கள், மலேசிய இந்தியர்கள்தான் பங்கு பெற்று இருக்கிறார்கள். நாங்கள் தமிழ்த்திரையுலகுடன் இணைந்து படங்கள் தயாரிக்க ஆர்வமாக இருக்கிறோம். 'மைந்தன்' படம் இதற்கு ஒரு இணைப்புப் பாலமாக இருக்கும். தமிழ்த் திரையுலகம் ஒரு மாற்றத்தை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறது. இச்சூழலில் இருவரும் இணைந்தால் வெற்றி பெற முடியும்'' என்றார்.

இயக்குநர் சமுத்திரக்கனி பேசும் போது, ‘‘முதல் இரண்டு படங்கள் சரியாகப் போகாததால் சிரமப்பட்டேன். திக்குத் தெரியாமல் திசைமாறி தவித்துக் கொண்டிருந்தபோது எனக்கு சரியான திசை காட்டியவர் ராஜாமணி அவர்கள். அவர் அறிமுகப்படுத்தியவர்தான் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். அவர் கொடுத்த வாய்ப்புதான் 'நாடோடிகள்'. இப்படி என் வாழ்க்கையையே திசைமாற்றியவர் ராஜாமணி. கலைதான் உலகை இணைக்கும். அவர்களது படம் நிச்சயம் உலகில் சிதறிக் கிடக்கும் தமிழர்களை இணைக்கும். உலகத் தமிழர்களிடம் போய்ச் சேரும் " என்றார்.

இவ்விழாவில் இயக்குநர்கள் ராஜகுமாரன் (தேவயானி), நாகேந்திரன், நடிகர் விமல், ஶ்ரீகாந்த், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ், இசையமைப்பாளர் மன்ஷேர் சிங், நடிகைகள் 'புன்னகை பூ 'கீதா, ஷைலா நாயர், ஒளிப்பதிவாளர் என்,கே. ஏகாம்பரம், என்.ஜி.பி.நிறுவனத்தின் தயாரிப்பாளர் நவநீதம் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பஞ்சுமிட்டாய் - டிரைலர்


;