அரிமா நம்பி

ஆக்ஷன் த்ரில்லரை விரும்பிப் பார்க்கும் ரசிகர்கள் ஒருமுறை கண்டுகளிக்கலாம் இந்த ‘அரிமா நம்பி’யை!

விமர்சனம் 4-Jul-2014 11:01 AM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : வி.கிரியேஷன்ஸ்
இயக்கம் : ஆனந்த் ஷங்கர்
நடிப்பு : விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த், ஜே.டி.சக்ரவர்த்தி
ஒளிப்பதிவு : ஆர்.டி.ராஜசேகர்
இசை : ‘டிரம்ஸ்’ சிவமணி
எடிட்டிங் : புவன் ஸ்ரீனிவாசன்

‘கும்கி’, ‘இவன் வேற மாதிரி’ படங்களைத் தொடர்ந்து விக்ரம் பிரபுவின் நடிப்பில் வெளிவந்திருக்கும் மூன்றாவது படம் ‘அரிமா நம்பி’. தனக்கு கண்டிப்பாக வெற்றியைத் தேடித் தரும் என ஆக்ஷன் த்ரில்லர் கதையை நம்பி கையிலெடுத்திருப்பதற்கு விக்ரம் பிரபுவிற்கு பலன் கிடைத்திருக்கிறதா?

கதைக்களம்

தனக்கு சம்பந்தமில்லாத பிரச்சனையில் யதேச்சையாக மாட்டிக்கொள்ளும் நாயகன், அதிலிருந்து தப்பி ஓடாமல் அதை எதிர்த்து நின்று ஜெயிப்பதே ‘அரிமா நம்பி’.

‘பப்’பில் பார்த்த முதல் நாளே அனாமிகாவின் (ப்ரியா ஆனந்த்) மேல் விருப்பம் கொள்ளும் அர்ஜுன் (விக்ரம் பிரபு) அவரைப் புகழ்ந்து பாடி அந்தக் கணமே அவரின் மனதில் இடம் பிடிக்கிறார். இரண்டாவது நாள் அனாமிகாவுடன் மது அருந்திவிட்டு, நடு இரவில் அவரின் அழைப்பின் பேரில் அனாமிகாவின் வீட்டிற்குச் செல்கிறார் அர்ஜுன். ஆனால், திடீரென அந்த வீட்டிற்குள் நுழையும் இரண்டு மர்ம நபர்கள் கத்தி, துப்பாக்கி சகிதம் அனாமிகாவை கடத்திச் செல்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் அர்ஜுன், சுதாரித்த பின்பு போலீஸிடம் சென்று நடந்ததைச் சொல்லி உதவியைக் கோருகிறார். சம்பவம் நடந்ததாக அவர் சொன்ன வீடு இருக்கும் அபார்ட்மென்டிற்கு எஸ்.ஐ. எம்.எஸ்.பாஸ்கர் வந்து சோதனை செய்கிறார். ஆனால், அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான எந்த அறிகுறியையும் அங்கே காணவில்லை. அதோடு சேனல் 24 டிவி நிறுவனத்தின் சிஇஓவின் மகளான அனாமிகா கடந்த 4 நாட்களாக கோவாவில் இருப்பதாக அவருடைய அப்பாவே சொல்வதால், கடத்தல் என்பதை நம்பாத போலீஸ் அர்ஜுனை அவருடைய வீட்டில் இறக்கிவிட்டுச் செல்கிறது.

ஆனால் நடந்திருக்கும் அத்தனை விஷயங்களும் உண்மை என்பதை ஆணித்தரமாக நம்பும் அர்ஜுன், அனாமிகாவை காப்பாற்றுவதற்காக களத்தில் நேரடியாகக் குதிக்கிறான். ஆனால், அந்தக் கடத்தலுக்குப் பின்னால் மத்திய அமைச்சர் ரிஷி தேவ் (ஜே.டி.சக்கரவர்த்தி) சம்பந்தப்பட்ட மிகப்பெரிய சம்பவம் ஒன்று இருப்பது நாயகன் அர்ஜுனுக்குத் தெரிய வருகிறது. அது என்ன? அதற்கும் அனாமிகா கடத்தலுக்கும் என்ன சம்பந்தம்? மத்திய அமைச்சர் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரத்தை நாயகன் எப்படி எதிர்கொள்கிறான்? என்பதை பரபர திரைக்கதை மூலம் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

படம் பற்றிய அலசல்

தான் ஏ.ஆர்.முருகதாஸின் பட்டறையிலிருந்து வெளிவந்தவர் என்பதை தன் முதல் படத்திலேயே ரசிகர்களுக்கு உணர்த்த முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஆனந்த் ஷங்கர். படம் ஆரம்பித்த 20 நிமடங்களில் விறுவிறுவென கதைக்குள் நுழைந்து, அதன் பின்னர் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் சஸ்பென்ஸ் த்ரில்லராக அமைய இடைவேளை வரை படம் படு வேகமாக நகர்ந்து செல்கிறது. சமீப காலத்தில் வெளிவந்த படங்களில் முதல் பாதியை இவ்வளவு விறுவிறுப்பாக கொண்டு சென்ற படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

திருப்பங்களும், சுவாரஸ்யங்களும் நிறைந்த முதல்பாதி படத்தைப் பார்த்து முடித்தவர்கள், இரண்டாம் பாதியில் அதைவிட பரபரப்பான காட்சிகளை எதிர்பார்த்து வந்து அமர்வார்களே என்ற எண்ணம் இயக்குனருக்கு ஏற்படாததாலோ என்னவோ, இரண்டாம் பாதியை முழுக்க முழுக்க ஒரே இடத்திலேயே சுற்ற வைத்திருக்கிறார் ஆனந்த் ஷங்கர். அதிலும் லாஜிக் மீறல்களும், நம்ப முடியாத காட்சி அமைப்புகளும் ஒரு கட்டத்தில் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ரசிகனை முணுமுணுக்க வைக்கிறது. தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு அமைச்சர் தன்னுடைய அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வார்தான் என்றாலும், அதற்காக மொத்த போலீஸ்காரர்களையுமே ஏதோ குற்றவாளிகள் போல காட்டியிருப்பதையெல்லாம் எப்படி ஏற்றுக் கொள்வது? அதேபோல் மீடியாக்களும் தூங்கிக் கொண்டிருப்பதாகவே காட்டியிருக்கிறார் இயக்குனர். எத்தனை கொலைகள்? எத்தனை சம்பவங்கள்? எவ்வளவு விசாரணைகள் எழுந்திருக்கும்? எவ்வளவு கேள்விகள் முளைக்கும்? ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் படத்தை முன்னோக்கி நகர்த்துவதிலேயே கண்ணும் கருத்துமாக செயல்பட்டிருக்கிறார்கள். அதேபோல் பரபரப்பாகவும், ‘ட்ரிக்’காகவும் இருக்க வேண்டும் என யோசித்து வைக்கப்பட்ட க்ளைமேக்ஸிலும் திருப்தி ஏற்படவில்லை. இதனால் படம் முடிந்து வெளியே வரும்போது கேள்வி மேல் கேள்விகளாக முளைத்து சிந்தனையுடனே ரசிகனை வெளியே அனுப்பி வைக்கிறது ‘அரிமா நம்பி’.

கதாபாத்திரங்களின் பங்களிப்பு

தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை சரியாக தேர்வு செய்து வருகிறார் விக்ரம் பிரபு. நடிப்பிலும், ஆக்ஷனிலும் நல்ல முன்னேற்றம் தெரிகிறது அவரிடம். ரொமான்ஸ் ஏரியாவில் எப்படி சமாளிப்பார் என்பதை அடுத்தடுத்த படங்களில்தான் தெரிந்துகொள்ள வேண்டும். ப்ரியா ஆன்ந்திற்கு கிளாமர் தேவதை வேடம். படம் முழுக்க வந்துபோனாலும் நடிப்பதற்கு பெரிதாக காட்சிகள் இல்லை. ஆனாலும், திரையில் தான் தோன்றும் காட்சிகளில் ரசிகர்களைக் கவரத் தவறவில்லை. வில்லன் பாத்திரத்திற்கு ஜே.டி.சக்ரவர்த்தி சரியான தேர்வு. மத்திய அமைச்சராக மிரட்டியிருக்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் எம்.எஸ்.பாஸ்கரின் கேரக்டரும், நடிப்பும் மனதில் தங்கும்படி ‘நச்’சென இருக்கிறது. ‘சூது கவ்வும்’ ஜேப்பி இப்படத்தில் போலீஸ் கமிஷனராக வந்து, ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார். நடிகை மேகா ஷர்மாவாக சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் லேகா வாஷிங்டன். இவர்களைத்தவிரவும் படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இருக்கின்றன. அவரவர்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். ‘அரிமா நம்பி’யைப் பொறுத்தவரை நடிப்பில் அனைவருமே உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள்.

பலம்

1. வில்லிலிருந்து புறப்பட்ட அம்புபோல் பயணிக்கும் முதல் பாதி திரைக்கதை.
2. பரபரப்பான காட்சிகளைக்கூட ரசிக்கும்படி தெளிவாகவும், நேர்த்தியாகவும் படம் பிடித்த ஒளிப்பதிவாளரின் திறமை. பாடல்களிலும் அபாரமாக உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்.
3. ஆக்ஷன் த்ரில்லருக்குக் கைகொடுத்திருக்கும் அறிமுக இசையமைப்பாளர் ‘டிரம்ஸ்’ சிவமணியின் பின்னணி இசை.
4. ரசிகனை யோசிக்கவிடாமல் அடுத்தடுத்து காட்சிகளை நகர்த்திய எடிட்டிங் சாமர்த்தியம்.
5. கதாபாத்திரங்களின் நடிப்பு

பலவீனம்

1. நம்பகத்தன்மை இல்லாத காட்சியமைப்புகள்.
2. பல இடங்களில் மீறப்பட்டுள்ள லாஜிக்குகள்.
3. முழுக்க முழுக்க படம் பரபரப்பாகவே நகர்வதால், ஒரு கட்டத்தில் படத்தோடு ஒன்ற முடியாமல் வெறும் காட்சிகளை மட்டுமே ரசிக்க வேண்டியதாயிருப்பது.
4. நாயகன் நாயகிக்கு இடையேயான காதலில் அழுத்தம் இல்லாதிருப்பது.
5. மனதில் நிற்காத பாடல்கள்.

மொத்தத்தில்... முதல் படம் என்ற வகையில் அறிமுக இயக்குனர் தன்னால் முயன்ற அளவுக்கு சுவாரஸ்யமான ஒரு படத்தையே தர முயன்றிருக்கிறார். ஆனால், அதற்காக தமிழுக்கு புதிதான ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுக்காததும், காட்சிகளில் நம்பகத் தன்மையை ஏற்படுத்தாததும் படத்திற்கு பின்னடைவாக அமைந்துவிட்டது. ஆக்ஷன் த்ரில்லரை விரும்பிப் பார்க்கும் ரசிகர்கள் ஒருமுறை கண்டுகளிக்கலாம் இந்த ‘அரிமா நம்பி’யை!

ஒரு வரி பஞ்ச் : கண்கட்டி வித்தை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - டிரைலர்


;