என்ன சத்தம் இந்த நேரம்

30 ரூபாய் கொடுத்து நேரில் சுற்றிப் பார்க்க வேண்டிய சரணாலயத்தை 120 ரூபாய் கொடுத்து நம்மை ஒரே இடத்தில் உட்கார வைத்து சுற்றிக் காட்ட முயற்சி செய்திருக்கிறார்கள்!

விமர்சனம் 27-Jun-2014 4:00 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : ஏவிஏ புரொடக்ஷன்ஸ்
இயக்கம் : குரு ரமேஷ்
நடிப்பு : எம்.ராஜா, மானு, மாளவிகா, நிதின் சத்யா
ஒளிப்பதிவு : சஞ்சய் பி.லோக்நாத்
இசை : நாகா
எடிட்டிங் : வி.டி.விஜயன், டி.எஸ்.ஜெய்

‘உலகத் திரைப்பட வரலாற்றிலேயே ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள் (குவாட்ரப்லெட்ஸ்) நடித்திருக்கும் முதல் படம்’ என்ற லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்திருக்கும் சாதனையோடு வெளிவந்திருக்கிறது ‘என்ன சத்தம் இந்த நேரம்’.

கதைக்களம்

விவாகரத்தை எதிர்நோக்கும் ராஜா, மானு தம்பதி, காதல் தோல்வியால் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்ள நினைக்கும் நிதின் சத்யா, வீட்டைவிட்டு ஓடிப்போய் தன் காதலனை பதிவுத் திருமணம் செய்யத் துடிக்கும் சிறப்பு பள்ளி ஆசிரியை மாளவிகா.... இந்த நான்கு பேருக்கும் நடக்கவிருக்கும் இந்த சம்பவங்கள் மானுவுக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளால் தடுத்து நிறுத்தப்படுகிறது. அது எப்படி? என்பதே ‘என்ன சத்தம் இந்த நேரம்’ படத்தின் கதை.

படம் பற்றி அலசல்

கதை என்னவோ நல்ல கருத்தைத்தான் சொல்ல வருகிறது. ஆனால், அதற்காக உருவாக்கப்பட்ட சம்பவங்களும், காட்சிகளும் அமெச்சூர்தனங்களின் மொத்த உருவமாக இருப்பதுதான் இப்படத்தின் மிகப்பெரிய பலவீனம். அப்படி என்ன சம்பவம் என்று கேட்கிறீர்களா?

அந்த நான்கு குழந்தைகளும் (அதிதி, அக்ரிதி, அக்ஷதி, ஆப்தி) வாய் பேச முடியாத, காது கேட்காத குழந்தைகள். அதனால் சிறப்புப் பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார்கள். பள்ளியிலிருந்து குழந்தைகள் அனைவரையும் ஒரு நாள் வனவிலங்குகள் சரணாலயத்திற்கு சுற்றுலா அழைத்து வருகிறார் ஆசிரியை மாளவிகா. வந்த இடத்தில் ஒரு மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று வந்துவிடவே, அனைவரையும் வெளியேறச் சொல்கிறது சரணாலய நிர்வாகம். இதனால் பார்வையாளர்களும், சிறப்புப் பள்ளியைச் சேர்ந்த குழந்தைகளும் தலைதெறிக்க சரணாலயத்தைவிட்டு வெளியேறுகிறார்கள். ஆனால், அதில் அந்த நான்கு குழந்தைகள் மட்டும் மிஸ்ஸிங். காணாமல் போன குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கு ஆசிரியை மாளவிகாவும், சரணாலய ஊழியரான நிதின் சத்யாவும் மீண்டும் உள்ளே செல்கிறார்கள். மலைப்பாம்பிடமிருந்து அந்த குழந்தைகள் தப்பித்ததா? அந்த குழந்தைகளை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதை பரபரப்பாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் குரு ரமேஷ்.

இப்படி கொஞ்சம்கூட லாஜிக்கே இல்லாத ஒரு சம்பவத்தை எப்படி உருவாக்கினார்கள் என்று தெரியவில்லை? சரி அதைக்கூட பரவாயில்லை என்று பொறுத்துக் கொண்டாலும், குழந்தைகள் மாட்டிக் கொண்ட விஷயம் காட்டுத் தீ போல பரவி போலீஸும், மீடியாவும் சரணாலயத்திற்கு முன்பு குவிகிறார்களாம். ஆனால் மலைப்பாம்பு இருப்பதால் போலீஸைக் கூட உள்ளே அனுமதிக்க மாட்டார்களாம். இந்த மாதிரி நேரங்களில் உதவுவதற்காக ‘ஃபயர் சர்வீஸ்’, பாம்புகளைப் பிடிக்கும் பயற்சி பெற்றவர்கள் என ஆட்கள் இருப்பதெல்லாம் இயக்குனருக்கு தெரியாது போல....

சரி இதையும் பொருத்துக்கொள்வோம்.... ஆனால், இப்படி ஒரு பரபரப்பான சூழ்நிலையில் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக உள்ளே போகும் மாளவிகாவும், நிதின் சத்யாவும் செய்யும் காமெடிக் கூத்துக்களையெல்லாம் எப்படிதான் யோசித்தார்களோ.. தெரியவில்லை. சம்பந்தமில்லாத கேரக்டர்கள், தேவையில்லாத வசனங்கள், எரிச்சலை வரவழைக்கும் காமெடிகள் என படம் முழுக்க ரசிகர்களை சோதித்திருக்கிறார்கள். க்ளைமேக்ஸில் அந்த மலைப்பாம்பை கொல்வதற்காக ஒரு ‘ட்ரிக்’ செய்கிறார் நிதின் சத்யா. அந்தக் காமெடியையெல்லாம் தியேட்டருக்குச் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

படத்தின் ஒரே ஆறுதலான விஷயம் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாக வைக்கப்பட்ட படத்தின் நீளம் மட்டுமே!

பலம்

பசுமை நிறைந்த சரணாலயக் காட்சிகள்

பலவீனம்

கதை, திரைக்கதை, டெக்னிக்கல் விஷயங்கள் உட்பட எதிலும் பெரிய மெனக்கெடல்களே இல்லாததால் படத்தின் பெரும்பாலான விஷயங்கள் பலவீனங்களே!

மொத்தத்தில்... நான்கு அதிசயக் குழந்தைகளை தேடிக் கண்டுபிடித்து அவர்களை நடிக்கவும் வைத்து, லிம்கா புக்கில் இடமும் பிடித்த இயக்குனர், ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக படத்தைக் கொடுப்பது எப்படி என கொஞ்சம் யோசித்து அதற்கான மெனக்கெடல்களை உருவாக்கத்தில் காட்டியிருந்தால் தாராளமாக இயக்குனரைப் பாராட்டியிருக்கலாம். 30 ரூபாய் கொடுத்து நேரில் சுற்றிப் பார்க்க வேண்டிய சரணாலயத்தை 120 ரூபாய் கொடுத்து நம்மை ஒரே இடத்தில் உட்கார வைத்து சுற்றிக் காட்ட முயற்சி செய்திருக்கிறார்கள்.... அவ்வளவே!

ஒரு வரி பஞ்ச் : என்ன சத்தம் இந்த நேரம்..... ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என்ன சத்தம் இந்த நேரம்


;