அதிதி

இன்றைய சமுதாயத்தை பாதித்து வரும் முறையற்ற செயலுக்கு தீர்வு சொல்ல வந்திருக்கும் படம்!

விமர்சனம் 27-Jun-2014 11:01 AM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : ஸ்பெல் பௌன்ட் ஃபிலிம்ஸ்
இயக்கம் : பரதன்
நடிப்பு : நந்தா, நிகேஷ்ராம், அனன்யா
ஒளிப்பதிவு : ஜெய்
இசை : பரத்வாஜ்
எடிட்டிங் : ப்ரவீன், கே.எல்.ஸ்ரீகாந்த்

அருண்குமார் இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்த படம் ‘காக்டெயில்’. இப்படம் பெரிய வெற்றியை பெறவில்லையென்றாலும் ரசிகர்களால் பாராட்டு பெற்றது. இப்படம் தான் தமிழில் ‘அதிதி’யாக மறு உருவாக்கம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. இன்றைய சமூகத்தில் நடந்து வரும் ஒரு முறையற்ற செயலால் பல குடும்பங்கள் எப்படி சீரழிகிறது என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம்.

கதைக்களம்

அழகான காதல் மனைவி அனன்யாவுடனும், அன்பான குழந்தை யுவினாவுடனும் தேவைக்கு மிஞ்சிய பணத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் நந்தா. அவர் நகரின் மிக முக்கியமான பில்டிங் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தில் புராஜெக்ட் மேனேஜராக இருக்கிறார். அந்நிறுவனத்தில் இருந்து கொண்டே நிறுவனத்தை மிரட்டி பணம் பறிக்கும் மூவரை நந்தா கண்டு பிடிக்கிறார். இதனால் அவர்கள் வேலையிலிருந்து தூக்கி எறியப்படுகிறார்கள். நந்தாவைப் பாராட்டி நிறுவனத்தின் முதலாளி விலையுயர்ந்த புதிய காரை பரிசளிக்கிறார்.

அந்தக் காரில் நந்தாவும், அனன்யாவும் சென்று கொண்டிருக்கும்போது வில்லனாக நுழையும் நிகேஷ்ராம் துப்பாக்கி முனையில் அவர்களை கடத்துகிறார். அது மட்டுமின்றி வீட்டிலிருக்கும் அவர்களது குழந்தையும் கடத்தப்படுகிறது. தன்னுடைய சொல்படி நடக்காவிட்டால் குழந்தையை கொன்று விடுவாதாக மிரட்டும் நிகேஷ்ராம், அவர்களை கொடுமைப்படுத்தி விரக்தியின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறார். அதன் உச்சக்கட்டமாக நந்தாவிடம் ஒருவரை கொலை செய்யச் சொல்லியும் மிரட்டுகிறார். அவர் யார்? ஏன்?, எதற்காக? அவர்களை கடத்தினார் எனபதை பரபரப்பில்லாத திரைக்கதையில் யூகிக்க முடியாத சஸ்பென்ஸுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பரதன்.

படம் பற்றிய அலசல்

மிக உயரமான கட்டிடத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டு தண்ணியடித்துக் கொண்டிருக்கும் வில்லன் நிகேஷ்ராமை பார்க்கும்போது திகிலும், பயமும் ஒரு சேர தொற்றிக் கொள்கிறது. அடுத்தக் காட்சியில் அவர் விபத்தில் சிக்க அவர் யார்? என்ன நடந்தது? என்ற கேள்வி எழுகிறது. அடுத்தடுத்தக் காட்சிகள் பரபரப்பாக இல்லாமல் மெதுவாக நகர்கிறது. நந்தா, அனன்யா கடத்தப்படும் ஆரம்ப காட்சிகள் சுவாரஸ்யமில்லாமலிருந்தாலும் க்ளைமேக்ஸ் காட்சியை நெருங்கும்போது பரபரப்பாகிறது.

நிகேஷ்ராமிடம் மாட்டிக்கொள்ளும் நந்தா, அனன்யா இருவரும் தவிக்கும் ஒரு சில காட்சிகள் தவிர மற்றக் காட்சிகளில் அழுத்தம் இல்லை. தப்பிக்க முயற்சி செய்து போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழையும் காட்சி நகம் கடிக்க வைக்கும் திகில் காட்சி. அது தோல்வியில் முடியும்போது, ‘அய்யோ பாவம்’ என பரிதாபம் ஏற்படுகிறது. நந்தா கண் முன்னால், தப்பிக்க நினைக்கும் ஒவ்வொரு முயற்சியையும் அசால்டாக முறியடிக்கும் காட்சிகள் சபாஷ்! கடைசி வரை யூகிக்க முடியாத க்ளைமேக்ஸை கொடுத்த இயக்குனர் பரதனை பாராட்டலாம். தம்பி ராமய்யாவின் காமெடிகள் பெரிதாக இல்லை. திரைக்கதையின் பெரிய பலமாக விளங்குவது யூகிக்க முடியாத க்ளைமேக்ஸ் தான்!. ஒளிப்பதிவும், பின்னணி இசையும் காட்சிகளுக்கு பலம்.

நடிகர்களின் பங்களிப்பு

நிகேஷ்ராம் அனன்யாவிடம் அத்துமீறும் காட்சியில் நந்தா, அனன்யா, நிகேஷ் ராம் மூவரும் காட்சியில் ஒன்றிணைந்து நடித்து பாராட்டை பெறுகின்றனர். தன் மனைவியிடம் அத்து மீறும் நிகேஷ்ராமை ஒன்றும் செய்ய முடியாமல் தனது இயலாமையால் அமைதியாக கோபத்தை வெளிப்படுத்தும் காட்சி, குழந்தை கடத்தப்பட்டதை அறிந்து கோபம் கொள்ளும் காட்சி என காட்சிகளுக்கேற்ற நடிப்பை கொடுத்துள்ளார் நந்தா. அனன்யா காதல் காட்சிகளிலும், குழந்தையின் அம்மாவாகவும் காட்சிகளுக்கேற்ற நடிப்பை கொடுத்துள்ளார். புதுவரவு வில்லன் நிகேஷ்ராம் சரியான தேர்வு. அமைதியான வில்லத்தனம். இளைஞர்களை சூடேற்ற ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டிருக்கிறார் ரக்‌ஷனா மௌரியா.

பலம் : ஒளிப்பதிவு, இசை, யூகிக்க முடியாத க்ளைமேக்ஸ்

பலவீனம் : எடிட்டிங், காமெடி காட்சிகள், நம்பகதன்மையற்ற காட்சிகள், பாடல்கள்

மொத்தத்தில்… இன்றைய சமுதாயத்தை பாதித்து வரும் முறையற்ற செயலுக்கு தீர்வு சொல்ல வந்திருக்கும் படம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;