டிரான்ஸ்ஃபார்மர் 4 - ஹாலிவுட் பட விமர்சனம்

குழந்தைகளுடன் சென்று ஜாலியாக ரசிப்பதற்கு ஏற்ற படம் இது!

விமர்சனம் 26-Jun-2014 4:29 PM IST Top 10 கருத்துக்கள்

ஏற்கெனவே மூன்று பாகங்கள் வெளிவந்து ஹிட்டடித்துள்ள ‘டிரான்ஸ்ஃபார்மர்’ படத்தின் நான்காவது பாகமான ‘ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்ஸன்’ தற்போது ரிலீஸாகியுள்ளது. ஆட்டோபாட்ஸுக்கும் டிசெப்டிகான்ஸுக்கும் இந்த முறை நடைபெற்ற யுத்தத்தில் ஜெயித்தது யார்? முந்தைய பாகங்களைப் போல் இந்தமுறையும் ‘டிரான்ஸ்பார்மர்’ ரசிகர்களைக் கவர்ந்துள்ளதா?

இந்த நான்காம் பாகத்தைப் பற்றிப் பார்க்கும் முன்பு ‘டிரான்ஸ்ஃபார்மர்’ வகையறாக்களின் கதைக்களம் எதை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கு ஒரு சிறிய முன்னோட்டம். முழுக்க முழுக்க இயந்திரத்தால் உருவான வேற்றுகிரகவாசிகளான ‘டிரான்ஸ்ஃபார்மர்ஸ்’ ஒவ்வொரு கிரகங்களாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முற்படுகிறார்கள். அப்படி பூமியையும் ஆக்ரமித்து, தங்கள் வசப்படுத்திக் கொள்வதற்காக நம் கிரகத்திற்குள் நுழைகிறார்கள் அந்த வேற்றுகிரக இயந்திர மனிதர்கள். எந்த வாகனமாகவும் தங்களை மாற்றிக்கொள்ளும் சக்திக்கொண்ட இந்த இயந்திர மனிதர்களில் ஆட்டோபாட்ஸ் மற்றும் டிசெப்டிகான்ஸ் என்ற இரு வகைகள் உண்டு. நல்ல எண்ணம் கொண்ட ஆட்டோபாட்ஸிற்கு பூமியில் உள்ள மனிதர்களை அழிப்பதற்கு மனம் வராததால் டிசெப்டிகான்ஸை எதிர்த்து மனிதர்களுக்கு உதவத் துவங்குகிறார்கள். அப்படி ஒவ்வொரு முறையும் டிசெப்டிகான்ஸ்களிடமிருந்து மனிதர்களைக் காப்பதே ஆட்டோபாட்ஸ்களின் வேலை. இந்த நான்காம் பாகத்திலும் அதைத்தான் கொஞ்சம் வேறு வகையில், புதுப்புது ரக இயந்திர உருவங்களுடன் செய்திருக்கிறார்கள்.

இந்த நான்காம் பாகத்தில்.... ‘ஆட்டோபாட்ஸ்களை அழித்தால் மட்டுமே தங்களால் பூமியை கைப்பற்ற முடியும்’ என்ற முடிவுக்கு வரும் டிசெப்டிகான்ஸ் சி.ஐ.ஏ அதிகாரி ஜோஸ்வாவுடன் (ஸ்டேன்லி டுஸி) சட்டத்திற்கு புறம்பாக கூட்டணி வைத்து சில திட்டங்களைத் தீட்டுகின்றன. அதன்படி ஆட்டோபாட்ஸ்களின் தலைவனான ஆப்டிமஸ் மற்றும் அதனுடைய சகாக்களை தேடிக் கண்டுபிடித்து அழிக்க வேண்டியதே அவர்கள் போடும் திட்டம்.

இது ஒருபுறமிருக்க, தன்னுடைய ரோபோட்டிக் ஆராய்ச்சிக்காக நாயகன் ஏகர் (மார்க் வால்பெர்க்) பழுதடைந்த பழைய டிரக் ஒன்றை வாங்கி வருகிறான். தன் மகள் டெஸாவின் (நிக்கோலா பெல்ட்ஸ்) உதவியுடன் அந்த டிரக்கை சரிசெய்யும்போதுதான் ஏகருக்கே தெரிகிறது அது தன்னுடைய பழைய நண்பனான இயந்திர மனிதன் ஆப்டிமஸ் என்பது. அதேநேரம் ஆப்டிமஸிடம் இருந்து கிடைத்த சிக்னல்களை வைத்து அதை சிறை பிடிப்பதற்காக ஏகரின் இருப்பிடத்தை நோக்கி வருகிறார்கள் ஜோஸ்வா அனுப்பிய சி.ஐ.ஏ. டீம்! ஆப்டிமஸ் எங்கே இருக்கிறது என சி.ஐ.ஏ. டீம் ஏகருக்கு கொலை மிரட்டல் செய்து கொண்டிருக்கும்போதே மறைந்திருக்கும் ஆப்டிமஸ் வெளியே வந்து அவர்களுடன் சண்டையிடத் தொடங்குகிறது. நடக்கும் சண்டைக்கிடையில் ஏகரையும், டெஸாவையும் காரில் லிப்ட் கொடுத்து காப்பாற்றுகிறான் டெஸாவின் காதலன் ஷேன் (ஜேக் ரெய்னர்).

இதன்பிறகு ஆப்டிமஸ் தனது ஆட்டோபாட்ஸ் சகாக்கள் அனைவரையும் வரவழைத்து தங்களை அழிக்கப் போட்டிருக்கும் திட்டத்தை ஏகர், டெஸா, ஷேனுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். நடக்கப்போகும் இந்த யுத்தத்தில் ஆட்டோபாட்ஸ் அழிந்துவிட்டால், டெசப்டிகான்ஸ் பூமியில் உள்ள மனிதர்களை அழிக்கத் தொடங்கிவிடுவார்கள் என்பதால், ஆட்போபாட்ஸின் உதவியுடன் அவர்களின் திட்டத்தை தவிடு பொடியாக்கி டெசப்டிகான்ஸ்களை அழிக்க களமிறங்குகிறான் ஏகர். இறுதியில் வெற்றி யாருக்கு என்பதே இந்த நான்காம் பாகத்தின் முடிவு! (அடுத்த பாகமும் இருக்கும் போல....)

மைக்கேல் பே இயக்கியிருக்கும் இந்த நான்காம் பாகத்தில் நாயகன் மார்க் வால்பெர்க் உட்பட நடித்திருக்கும் அத்தனை கேரக்டர்களும் புதியவைதான். ஆட்டோபாட்ஸ், டிசெப்டிகான்ஸ்களோடு இந்தமுறை இயந்திர டைனோசர்களும் சண்டையிட வருவதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் காட்சிகள் பரபரவென பறக்கின்றன. அதோடு இந்த பாகத்தில் ஏகருக்கும் டெஸாவுக்கும் இடையே நிலவும் பாசப் போராட்டம், டெஸாவுக்கும் ஷேனுக்குமான ரொமான்ஸ் காட்சிகள் என ஆங்காங்கே தமிழ்ப்பட ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் விஷயங்களையும் நிறைய வைத்திருக்கிறார்கள்.

முந்தைய பாகங்களைவிட இந்த பாகத்தில் கிராபிக்ஸிலும், 3டி உருவாக்கதிலும் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறார்கள். இயந்திர மனிதர்களுக்கிடையே நடக்கும் ஒவ்வொரு சண்டையையும் தத்ரூபமாக படம்பிடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறார்கள். இவ்வளவு விஷயங்கள் இருந்தாலும் கிட்டத்தட்ட 2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு இப்படம் நீண்டு கொண்டே செல்வதால் ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்டத் தொடங்குகிறது. இன்னும் கொஞ்சம் படத்தை ‘ஷார்ப்’பாக்கியிருந்தால் பெரிய அளவில் கவர்ந்திருக்கும் இந்த ‘டிரான்ஸ்ஃபார்மர்’ நான்காம் பாகம்.

மொத்தத்தில்... ‘டிரான்ஸ்ஃபார்மர்’ படத்தின் முந்தைய பாகங்களை ரசித்தவர்களுக்கு இப்படமும் பிடிக்கும். குழந்தைகளுடன் சென்று ஜாலியாக ரசிப்பதற்கு ஏற்ற படம் இது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;