ராம நாராயணன் மறைவு : படப்பிடிப்புகள் ரத்து!

ராம நாராயணன் மறைவு : படப்பிடிப்புகள் ரத்து!

செய்திகள் 24-Jun-2014 10:39 AM IST Chandru கருத்துக்கள்

‘ஆடிவெள்ளி’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’ உள்பட தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் 128 படங்களை இயக்கி சாதனை புரிந்த இயக்குனர் ராம நாராயணன் (வயது 66) கடந்த ஞாயிற்றுக்கிழமை (22-6-14) அன்று சிங்கப்பூர் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். ஏராளமான படங்களை தயாரித்து, விநியோகமும் செய்திருக்கும் ராமநாராயணனுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே சிறுநீரகக் கோளாறு இருந்து வந்தது. இப்பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்காக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காததால் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி (இந்திய நேரப்படி) அளவில் சிங்கப்பூர் மருத்துவமனையிலேயே அவர் மரணமடைந்தார்.

தமிழ்த் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ராம நாராயணனின் உடல் விமானம் மூலம் நேற்று இரவு சென்னை கொண்டு வரப்பட்டு மகாலிங்கபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. திரையுலகைச் சேர்ந்த அனைத்து தரப்பு பிரபலங்களும் இராமநாராயணனின் இல்லத்திற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் சுமார் 3 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற இருக்கின்றன.

இராம நாராயணனின் மறைவை ஒட்டி சென்னையில் இன்று (24-6-14) தமிழ்த் திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திரைப்படம் தொடர்பான அனைத்து வேலைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், இதற்கு அனைத்து சினிமா சங்கங்களும் ஒத்துழைப்பு தரும் என்று தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக இரங்கல் செய்தி ஒன்றை வௌயிட்டுள்ளது.

தமிழ் சினிமாவிற்கு பல ஆண்டுகளாக தனது பங்களிப்பினைக் கொடுத்து வந்த இயக்குனர், தயாரிப்பாளர் ராம நாராயணன் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய, அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை ‘டாப் 10 சினிமா’ தெரிவித்துக் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டைட்டில் மோஷன் போஸ்டர்


;