வெற்றிச்செல்வன்

அழுத்தமில்லாத புதிய முயற்சி!

விமர்சனம் 20-Jun-2014 4:01 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : சிருஷ்டி சினிமாஸ்
இயக்கம் : ருத்ரன்
நடிப்பு : அஜ்மல், ராதிகாஆப்தே, மனோ, கஞ்சா கருப்பு
ஒளிப்பதிவு : ரமேஷ்குமார்
இசை : மணிசர்மா
எடிட்டிங் :டி.கிஷோர்

மனநோயிலிருந்து முற்றிலும் குணமானவர்கள் மனநோய் காப்பகங்களிலேயே அடைந்து கிடக்க வேண்டிய அவலங்களையும், மனநோய் காப்பகங்களில் நடக்கும் முறைகேடுகளையும் கண்முன்னே நிறுத்தும் படம்.

கதைக்களம்

சிறு வயதில் அஜ்மல் தன் தங்கையுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவரது தங்கை நீரில் மூழ்கி இறக்கிறார். தங்கை ஞாபகமாகவேயிருக்கும் அஜ்மலை, மனநோய் காப்பகத்தில் சேர்க்கின்றனர் பெற்றோர். அஜ்மல், மனோ, ஷெரிஃப் ஆகிய மூவரும் மனநோய் சிகிச்சைக்குப் பிறகு முற்றிலும் குணமடைகின்றனர். நோயிலிருந்து விடுபட்ட அவர்களை அழைத்துக்கொண்டு போக உறவினர்கள் யாரும் முன் வரவில்லை. குணமடைந்த மற்றவர்களுக்கும் அதே நிலை தான்! அழைத்துப்போக யாரும் வரவில்லையே என்ற ஏக்கத்துடன் காலத்தை கழிக்கும் அவர்கள், காப்பகத்திலிருக்கும் மற்றவர்களுக்கு உதவிகள் செய்கின்றனர். அதோடு அங்கே நடக்கும் முறைகேடுகளையும் தட்டிக் கேட்கின்றனர். இதனால் காப்பகத்திலிருக்கும் டாக்டருக்கும், அவர்களுக்கும் பகை ஏற்படுகிறது.

ஒரு நாள் அஜ்மல், மனோ, ஷெரிஃப் மூவரும் தங்கள் உறவினர்களைக் காண காப்பகத்தை விட்டு தப்பித்து செல்கின்றனர். ஊட்டிக்கு வரும் இவர்கள் தற்காலிகமாக கஞ்சா கருப்பு நடத்தும் கார் மெக்கானிக் ஷெட்டில் வேலை செய்கின்றனர். அங்கே வரும் வக்கீலான ராதிகா ஆப்தேவுக்கும், அஜ்மலுக்கும் காதல் முளைக்கிறது. இவர்களது காதல் ஆடல், பாடல் என கல்யாணம் வரை நெருங்குகிறது.

அந்த சமயத்தில் போலீஸ், கொலை குற்றத்திற்காக அஜ்மலை கைது செய்கின்றனர். ராதிகாஆப்தே அதிர்ச்சியில் உறைகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக் கதை.

படம் பற்றிய அலசல்

மனநோய் காப்பகங்களில் மனநோயாளிகள் படும் அவஸ்தை, சித்ரவதைகளை அப்பட்டமாக படம் பிடித்துள்ளனர். குளிப்பதற்காக அனைவரையும் ஒரு இடத்தில் நிற்க வைத்து நிர்வாணப்படுத்தி குளிக்க வைக்கும் காட்சியும், அவர்களை முரட்டுத்தனமாக அடிக்கும் காட்சியும் பரிதாபப்பட வைக்கிறது. காப்பகத்தையே சுற்றி வரும் காட்சிகள் சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. ஒருசில காட்சிகளில் நாடகத்தனம் தெரிகிறது. காமெடி என்ற பெயரில் கஞ்சா கருப்பு, சஞ்சனாசிங் காட்சிகள் சகிக்க முடியவில்லை.

குளிர்ச்சியாக வந்து குதூகலிக்க வைக்கிறார் ராதிகாஆப்தே. அஜ்மல், ராதிகாஆப்தேவின் காதல் காட்சிகளை இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம். பாடல் காட்சிகளில் இயற்கையின் அழகோடு ராதிகாவின் அழகையும் அழகாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ரமேஷ்குமார். மணிசர்மாவின் பாடல்களை ரசிக்கலாம். குணமடைந்தவர்கள் திரும்பவும் உறவினர்களுடன் சேர ஏங்கும் காட்சிகளுக்கு இன்னும் அழுத்தம் கொடுத்திருந்தால் இப்படம், நல்ல ஒரு படைப்பாக இருந்திருக்கும். மனநோயிலிருந்து குணமானவர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சமூகத்தை சாடியுள்ள இயக்குனரை பாராட்டலாம்.

நடிகர்களின் பங்களிப்பு

வழக்கமான நடிப்பை கொடுத்துள்ளார் அஜ்மல். க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் பேசும் வசனங்கள் ‘நச்’ ரகம். ராதிகாஆப்தே காதல் காட்சிகளில் துறுதுறுவென வந்து மனதில் குடிகொள்கிறார். மனோ தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். சஞ்சனாசிங், கஞ்சா கருப்பு இவர்களைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை!

பலம் : அஜ்மல் - ராதிகாஆப்தே காதல் காட்சிகள், பாடல் காட்சிகள், ஒளிப்பதிவு, இசை.

பலவீனம் : அழுத்தமில்லாத திரைக்கதை, நாடகத்தனமான சோர்வு தரும் காட்சிகள், காமெடி

மொத்தத்தில்…

மனநோயாளிகளை மனிதர்களாகவே ஏற்றுக்கொள்ள முடியாத சமூகத்தின் மீது சாட்டையைச் சுழற்றிய இயக்குனர் சரியாக சுழற்றவில்லை!

ஒருவரி பஞ்ச் : அழுத்தமில்லாத புதிய முயற்சி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரவுக்கு ஆயிரம் கண்கள் - டீசர்


;