நான்தான் பாலா - விமர்சனம்

ஏமாற்றம்!

விமர்சனம் 19-Jun-2014 9:40 AM IST Inian கருத்துக்கள்

தயாரிப்பு : எஸ்.எஸ்.எஸ். என்டர்டெயின்மென்ட்
இயக்கம் : கண்ணன்
நடிப்பு : விவேக், வெங்கட்ராஜ், ஸ்வேதா
ஒளிப்பதிவு : அழகியமணவாளன்
இசை : வெங்கட் க்ரிஷி
எடிட்டிங் : வி.விஜய்

முதன் முறையாக விவேக் கதாநாயகனாக களமிறங்கியுள்ள படம். பாலாவின் உதவியாளர் இயக்குனராக அறிமுகமாகியுள்ள இப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளதா?

கதைக்களம்

ஆச்சாரமான பெருமாள் கோவில் பூசாரிக்கும், கூலிக்கு கொலை செய்யும் மாபாதகனுக்கும் ஏற்படும் நட்பினால் விளையும் நன்மை, தீமைகளை சொல்லும் படம். ஆச்சார அனுஷ்டானங்களை கடைப்பிடித்து, வயதான தாய், தந்தைக்கு பணிவிடைகளை செய்து வருகிறார் விவேக். பெருமாள் கோவிலில் பூசாரியாக வேலை பார்க்கும் இவர் தட்டில் விழும் தட்சணையைக் கூட வாங்க மறுப்பவர். மிகவும் நேர்மையானவர். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இவருக்கு பணத்தேவை ஏற்படும்போது, முன் பின் தெரியாத கூலிக்கு கொலை செய்யும் வெங்கட்ராஜ் உதவுகிறார். இதன் மூலம் இருவரின் நட்பும் பிரிக்க முடியாத நட்பாக மாறுகிறது.

இதனிடையே போளி விற்கும் ஸ்வேதாவுடன் விவேக்கிற்கு காதல் ஏற்படுகிறது. இவர்களின் திருமணத்தை தன்னுடைய தலைமையிலேயே நடத்தி வைக்க வெங்கட்ராஜ் ஏற்பாடு செய்கிறார். பல உதவிகளை செய்து வரும் வெங்கட்ராஜின் உண்மையான முகம் விவேக்கிற்கு தெரியும்போது அதிர்ந்து போகிறார். வெங்கட்ராஜை போலீஸில் சரணடைய வற்புறுத்துகிறார் விவேக். இருவருடைய நட்பு என்னவாயிற்று? விவேக்கின் திருமணம் என்னவாயிற்று? என்பதை இயக்குனர் கண்ணன் சிரமப்பட்டு திரைக்கதையில் விளக்கியுள்ளார்!

படம் பற்றிய அலசல்

படம் துவங்கியதிலிருந்தே மெதுவாக நகரும் திரைக்கதை! இரண்டாம் பாதியிலாவது வித்தியாசமாக, சுறுசுறுப்பாக, திரைக்கதை நகரும் என்றால் ஏமாற்றமே மிஞ்சிகிறது. படம் முடியும வரை இதே நிலைதான். இந்தக் கதையில் பல இடங்களில் திருப்பங்களையும், சுவாரஸ்யத்தையும் கொடுப்பதற்கு இடமிருந்தாலும் அவற்றை இயக்குனர் ஏன் பயன்படுத்தவில்லை என்ற குழப்பம் ஏற்படுகிறது.

கூலிக்கு கொலை செய்யும் கேரக்டரில் வரும் வெங்கட்ராஜ் கேரக்டருக்கு எந்தவிதமான அழுத்தமும் இல்லை. திரும்ப, திரும்ப வரும் ஒரே மாதிரியான காட்சிகள் சோர்வை தான் தருகிறது. திகில் தரவேண்டிய காட்சிகள் கூட வெறுப்பைத்தான் கொடுக்கிறது. உயிரோட்டமான கேரக்டர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்கள் திறமையின்றியிருப்பது படத்தின் பெரிய மைனஸ்! இசை, பின்னணி இசை, கேமிரா பரவாயில்லை ரகம்.

நடிகர்களின் பங்களிப்பு

விவேக் முற்றிலும் வித்தியாசமாக நடித்துள்ளார். தனது இயற்கையான கலகலப்பான நடிப்பிலிருந்து மாறுபட்டு, சோகம், அழுகை, ஏமாற்றம் என அனைத்தையும் அருமையாக இவரது முகம் பிரதிபலித்திருக்கிறது. அடியாட்களை வைத்து தொழில் செய்யும் தென்னவனின் மனைவியாக வரும் சுஜாதா ஒருசில காட்சிகளில் நடிப்பால் அசத்தியுள்ளார்.

மிக முக்கியமான கேரக்டரில் வரும் வெங்கட்ராஜ் சற்றும் பொருந்தவில்லை. கோபத்தையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்த வேண்டிய காட்சிகளில் பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளார். ஸ்வேதா, போளி விற்கும் பெண்ணாக வந்து போகிறார்.

பலம் : விவேக்

பலவீனம் : கதை, திரைக்கதை, இயக்குனர்.
மொத்தத்தில்… சுவாரஸ்யமாக கொடுக்க வேண்டிய ஒரு படத்தை சுவாரஸ்யமின்றி கொடுத்துள்ளனர்.

ஒருவரி பஞ்ச் : ஏமாற்றம்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - கலக்கு மச்சான் ஆடியோ பாடல்


;