முண்டாசுப்பட்டி - விமர்சனம்

புதிய சிந்தனையுடன் தமிழ் சினிமாவிற்குள் நுழையும் இளம் இயக்குனர்களை வரவேற்போம்!

விமர்சனம் 18-Jun-2014 8:39 PM IST Chandru கருத்துக்கள்

தயாரிப்பு : திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
இயக்கம் : ராம்குமார்
நடிப்பு : விஷ்ணு, நந்திதா, காளி வெங்கட், ஆனந்தராஜ்,
ஒளிப்பதிவு : பி.வி .ஷங்கர்
இசை : சீன் ரோல்டன்
எடிட்டிங் : லியோ ஜான் பால்

புதிய இயக்குனர்களை களமிறக்கி தொடர் வெற்றி பெற்றுவரும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் அடுத்த படைப்பான ‘முண்டாசுப்பட்டி’க்குள் ஒரு ரவுண்ட் போய் வரலாம் வாருங்கள்...

கதைக்களம்
காதலியைக் கைப்பிடிப்பதற்காக இதுவரை எத்தனையோவிதமான சாகஸங்களை செய்திருக்கிறார்கள் நம் தமிழ் சினிமா ஹீரோக்கள். கொஞ்சம் வித்தியாசமாக, தான் காதலிக்கும் பெண்ணைக் கைப்பிடிப்பதற்காக அந்த ஊரின் மூடநம்பிக்கையையே பயன்படுத்தி ஹீரோ ஜெயிக்கிறார் என்பதே ‘முண்டாசுப்பட்டி’யின் கதை!

1947-ஆம் ஆண்டு ‘முண்டாசுப்பட்டி’ கிராமத்திற்கு வரும் வெள்ளைக்காரர் ஒருவர், அந்த ஊர் மக்களை ஃபோட்டோ எடுக்க, அதுவரை கேமராவையே பார்த்திராத அந்த மக்கள் அதிசயத்துடன் அதைப் பார்கிறார்கள். அவர் ஃபோட்டோ எடுக்கும் அதே வேளையில், அந்த ஊர் மக்களுக்கு விஷ நோய் ஒன்று தாக்கி ஒவ்வொருவராக இறந்துபோக, ‘புகைப்படம் எடுப்பவர்களுக்கு மரணம் நிச்சயம்’ என நம்பும் ‘முண்டாசுப்பட்டி’ மக்கள் அதன்பிறகு கேமரா என்றாலே பயந்து ஓடத்தொடங்குகிறார்கள். இதனால் ஊரில் ஒருவர் இறந்த பிறகு மட்டுமே அவரை ஃபோட்டோ எடுத்து மாட்டுகிறார்கள்.

(இப்போது 1982ல் கதை பயணிக்கிறது...) அப்படி கதாநாயகி நந்திதாவின் தாத்தா இறக்கும் நேரத்தில், அவரை ஃபோட்டோ எடுப்பதற்காக ‘முண்டாசுப்பட்டி’க்குள் அழைத்து வரப்படுகிறார் கேமராமேன் விஷ்ணு. வந்த இடத்தில் நந்திதா மேல் காதல்கொள்ளும் விஷ்ணு, அவரிடம் தன் காதலைச் சொல்கிறார். நந்திதாவுக்கும் விஷ்ணுமேல் காதல் வந்தாலும், நந்திதாவுக்கும் வேறு ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்கெனவே பேசி முடித்திருப்பதால், அவர்களின் காதல் என்னவாகிறது? தன் காதலியைக் கரம் பிடிக்க ஹீரோ என்னென்ன சாகஸங்களை செய்கிறார் என்பதைக் காண ‘முண்டாசுப்பட்டி’க்கு ஒரு ‘டிக்கெட்’ போடுங்கள்!

படம் பற்றிய அலசல்

ஏற்கெனவே குறும்படமாக வந்து வெற்றிபெற்ற ‘முண்டாசுப்பட்டி’ தற்போது வெள்ளித்திரையில் விரிவாக்கம் பெற்றிருக்கிறது. 20 நிமிடத்தில் சொன்ன கதையை 2 மணி நேரத்திற்கு ரசிகர்களை உட்கார வைத்து சொல்ல வைப்பதே ஒரு சவாலான காரியம்தான். ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், பிறகு சுதாரித்து சுவாரஸ்யத்தைக் கூட்டி அந்த சவாலை கச்சிதாமாக செய்து முடித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ராம் குமார். கேமராவைக் கண்டு பயந்து ஓடும், விண்கல்லை ‘வான முனி’ என கடவுளாக்கி கும்பிடும் ‘முண்டாசுப்பட்டி’ கிராமம், ஹீரோ, ஹீரோயின் அறிமுகம் என முதல்பாதி கொஞ்சம் சுவாரஸ்யமாக ஆரம்பித்து, பிறகு இடைவேளைவரை கதையை நகர்த்த காட்சிகளை கொஞ்சம் இழுத்தடித்திருக்கிறார்கள்.

இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் சூடுபிடிக்கும் கதை, அதன் பிறகு அடுத்தடுத்து காமெடியாக பயணிக்கத் தொடங்குகிறது. குறிப்பாக படத்தின் கடைசி 30 நிமிடங்களில் நம்மையும் மறந்து படத்தோடு சுவாரஸ்யமாக ஒன்ற வைத்துவிடுகிறார்கள். எதிர்பார்த்த க்ளைமேக்ஸ்தான் என்றாலும், திருப்தியாக அமைந்திருப்பதால், படத்தின் முதல்பாதியில் ஏற்பட்ட தொய்வை ரசிகர்களுக்கு மறக்கடித்துவிடுகிறார்கள். 80களில் நடக்கும் கதைக்கேற்ற ‘செட் பிராப்பர்டிகளை’ சரியாகக் கையாண்டிருக்கிறார்கள். அதேபோல் ஒளிப்பதிவும் இப்படத்திற்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. பின்னணி இசை ஒரு சில இடங்களில் நன்றாகவும், சில இடங்களில் திரும்பத்திரும்ப ஒரே மாதிரியாக இருப்பதுபோலவும் ஒலிக்கிறது. ‘ராசா மகராசா....’ பாடல் நச் ரகம். மற்றவை மனதில் நிற்கவில்லை. முதல்பாதி எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நடிகர்களின் பங்களிப்பு
படம் முழுக்க ஹீரோவும், ஹீரோயினும் வந்தாலும் அவர்களுக்கான பாத்திரப்படைப்பில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கலாம். ஆனாலும் விஷ்ணு தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். நாயகி நந்திதாதான் பாவம். குளோசப்பில் கண்களை காட்டுகிறார், வெட்கப்படுகிறார், கோபப்படுகிறார்.... அவ்வளவே! நந்திதாவிற்கு நடிப்பதற்கு கொஞ்சம் வாய்ப்பளித்திருக்கலாமே இயக்குனர்?
இப்படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் இரண்டு கேரக்டர்கள்.... ஒருவர் ஹீரோவின் நண்பனாக வரும் காளி வெங்கட். இன்னொருவர் சினிமா ஹீரோவாக வரவேண்டும் என்ற கனவோடு சுற்றித்திரியும் ‘முனீஸ்காந்த்’ கேரக்டரில் நடித்தவர். இருவருமே அந்தந்த கேரக்டர்களில் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். இவர்களைத் தவிர ஜமீனாக வரும் ஆனந்தராஜ், ‘முண்டாசுப்பட்டி’ கிராமத்தின் சாமியார், நந்திதாவின் அப்பா கேரக்டரில் நடித்தவர் என பலரும் கவனம் ஈர்த்திருக்கிறார்கள்.

பலம்
1. தமிழ் சினிமாவில் சொல்லப்படாத புதிய கதைக்களம்.
2. கலகலப்பான இரண்டாம் பாதியும், திருப்தியான க்ளைமேக்ஸும்.
3. சுவாரஸ்யமான பாத்திர படைப்புகளும், அதில் நடித்தவர்களின் பங்களிப்பும்.
4. 80களில் நடக்கும் கதைக்கேற்ற ஒளிப்பதிவும், அதற்கு கைகொடுத்திருக்கும் கலை இயக்கமும்.

பலவீனம்
1. மெதுவாக நகரும் முதல்பாதி.
2. நாயகன், நாயகிக்கு இடையேயான காதலில் அழுத்தம் இல்லாதது.
3. பின்னணி இசை, எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில்....
முதல்பாதி திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான காட்சிகளை வைத்திருந்தால் பெரிய அளவில் கவர்ந்திருக்கும் ‘முண்டாசுப்பட்டி’. ஆனாலும், முழுப் படத்தையும் பார்த்துவிட்டு எழுந்துபோகும் ரசிகனுக்கு ‘முண்டாசுப்பட்டி’ கிராமம் பிடிக்கத்தான் செய்கிறது. புதிய சிந்தனையுடன் தமிழ் சினிமாவிற்குள் நுழையும் இளம் இயக்குனர்களை வரவேற்போம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கதாநாயகன் - உன் நெனப்பு பாடல் வீடியோ


;