மஞ்சப்பை

மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்!

விமர்சனம் 6-Jun-2014 3:07 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : திருப்பதி பிரதர்ஸ், சற்குணம் சினிமாஸ்
இயக்கம் : என்.ராகவன்
நடிகர்கள் : விமல், ராஜ்கிரண், லக்ஷ்மிமேனன், ‘கும்கி’ அஸ்வின்
ஒளிப்பதிவு : மாசாணி
இசை : என்.ஆர்.ரகுநந்தன்
எடிட்டிங் : தேவா (அறிமுகம்)

தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே இருக்கும் பாசத்தை சொல்ல வந்திருக்கிறது இந்த ‘மஞ்சப்பை’.

கதைக்களம்

சிறுவயதிலேயே விமலின் அப்பா, அம்மா இறந்துவிட, தன் தாத்தா ராஜ்கிரணின் அரவணைப்பில் வளர்ந்து பெரியவனாகி, கிராமத்திலிருந்து சென்னைக்கு வேலைக்கு வருகிறார் விமல். ஐடி கம்பெனியில் வேலையும் கிடைத்து கை நிறைய சம்பளமும் வாங்கும் விமலுக்கு அமெரிக்காவிற்கு சென்று வேலை செய்து அங்கேயே செட்டிலாகிவிட வேண்டும் என்பது கனவு. இது ஒருபுறமிருக்க, யதேச்சையாக லக்ஷ்மி மேனனை சந்திக்கும் விமல், அவரை துரத்தி துரத்தி காதலிக்கத் தொடங்குகிறார். லக்ஷ்மி மேனனும் காதலுக்கு ஓகே சொல்லும் நேரத்தில், கம்பெனியில் நல்ல பெயரெடுக்கும் விமலுக்கு அமெரிக்க செல்லும் வாய்ப்பும் வருகிறது. அமெரிக்கா செல்லும் வரை, கிராமத்திலிருக்கும் தன் தாத்தா ராஜ்கிரணை சென்னைக்கு வரவழைத்து தன்னுடன் வைத்துக்கொள்ள அழைத்து வருகிறார் விமல்.

சிட்டியையே அதுவரை பார்த்திராத ராஜ்கிரண், தன் கிராமத்தைப் போலவே இங்கேயும் நடந்து கொள்கிறார். ஆனால், அவர் வெள்ளந்தித்தனமாக செய்யும் ஒவ்வொரு விஷயமும் விமலுக்கு சோதனையாக வந்து முடியத் தொடங்குகிறது. தான் வசிக்கும் அபார்ட்மென்ட் ஆட்களிலிருந்து, காதலி வரை எல்லோரும் தாத்தாவை திரும்ப ஊருக்கு அனுப்பச் சொல்ல, மனம் நொந்து போகிறார் விமல். ஒரு கட்டத்தில், தான் நெடுநாள் கனவான அமெரிக்கா செல்லும் வாய்ப்பே ராஜ்கிரணால் கேள்விக்குறியாகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது பதை பதைக்க வைக்கும் ‘க்ளைமேக்ஸ்’.

படம் பற்றி அலசல்

ஆக்ஷன், ரொமான்ஸ், ஹாரர், த்ரில்லர் டைப் படங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் வேளையில் பாசத்தையும், அன்பையும் பொழிய வைக்கும் ஒரு குடும்பப் படத்தைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் என்.ராகவன். முதல் பாதியில் தாத்தா ராஜ்கிரண் சென்னை சிட்டியில் அடிக்கும் லூட்டிகள் ஏக கலாட்டா. அதிலும் லக்ஷ்மி மேனனைப் பார்த்ததும், ‘அப்படியே கிழவிதான்டா’ என அப்பாவியாகச் சொல்லும்போது மொத்த தியேட்டரும் சிரிப்பலையால் அதிர்கிறது. இரண்டாம் பாதியில் கலாட்டாக்களைக் குறைத்து ராஜ்கிரணின் பாசத்தை முன்னிறுத்தி கதையை நகர்த்துகிறார்கள். அதிக பாடல்களை இடையிடையே வைக்காதது, சொல்ல வேண்டிய விஷயத்தை இரண்டு மணி நேரத்திலேயே சொல்லி முடித்திருப்பது என ‘மஞ்சப்பை’ கொஞ்சமும் போரடிக்காமல் சுவாரஸ்யமாக நகர்கிறது. க்ளைமேக்ஸ் கொஞ்சம் அதிர வைக்கிறது!

நடிகர்களின் பங்களிப்பு

படத்தின் ஹீரோ விமலாக இருந்தாலும், கதையின் நாயகன் என்னவோ ராஜ்கிரண்தான். மனிதருக்கு இப்படிப்பட்ட பாத்திரத்தில் நடிப்பதற்கு சொல்லியா தரவேண்டும். ‘தொந்தி படவா’வாக திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைக்கிறார். அவரின் வெள்ளந்தித்தனமான நடவடிக்கையிலும், அதிரடியான பேச்சிலும் அப்படியே அச்சு அசலாக ஒரு ‘கிராமத்து மனிதரை’ நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார். ராஜ்கிரணைப் பொறுத்தவரை அவருக்கு இப்படம் மீண்டும் ஒரு ‘தவமாய் தவமிருந்து’.

விமலுக்கு வழக்கம்போல் அதே டைப் கேரக்டர்தான். ‘குஞ்சு நைனா’வாக அசத்தியிருக்கிறார். ராஜ்கிரணைக் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுக்கும் பேரனாகவும், லக்ஷ்மி மேனனிடம் சில்மிஷம் செய்யும் காதலனாகவும் விமலுக்கு டபுள் டிராக். சிட்டி கேரக்டர் என்பதால் கொஞ்சம் மேக்-அப் தூக்கலாகவே வலம் வருகிறார் லக்ஷ்மிமேனன். பெரிதாக நடிப்பதற்கு வாய்ப்பில்லாத கேரக்டர் என்றாலும், தன் வேலையை சரியாக செய்திருக்கிறார் லக்ஷ்மி! இவர்களைத் தவிர சின்னச் சின்ன கேரக்டர்களாக படத்தில் நிறைய பேர் வலம் வந்தாலும், வேறு யாரும் மனதோடு தங்கவில்லை.

பலம்

1. இயந்திரகதியில் இயங்கிக் கொண்டிருக்கும் சிட்டி லைஃப்பில், மறந்துபோன அன்பையும், உறவையும் ஞாபகப்படுத்தும் கதைக்களம்.
2. ராஜ்கிரணின் அலட்டல் இல்லாத சிறந்த நடிப்பு.
3. போரடிக்காத திரைக்கதையும், அதை இரண்டுமணி நேரத்தில் சொன்ன விதமும்.
4. ராஜ்கிரண் சம்பந்தப்பட்ட கலாட்டா காட்சிகள்.

பலவீனம்

1. பெரிய அளவில் எதுவும் தொந்தரவு செய்யவில்லை.

மொத்தத்தில்...

தாத்தா, பேரனின் பாசம் என்பது தமிழ் சினிமாவிற்கு புதிதில்லைதான். ஆனாலும் இந்த ‘தொந்தி படவா’வையும், ‘குஞ்சு நைனா’வையும் கண்டிப்பாக நம்மால் ரசிக்க முடியும். ராஜ்கிரணுக்காகவே ஒருமுறை இப்படத்தை தியேட்டருக்குச் சென்று ரசிக்கலாம்.

ஒரு வரி பஞ்ச் : மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பவர் பாண்டி - சூரக்காத்து பாடல் வீடியோ


;