சுனாமியில் சிக்கிய விஷால்! விஜய்சேதுபதியின் ‘பீட்சா 3’!

சுனாமியில் சிக்கிய விஷால்! விஜய்சேதுபதியின் ‘பீட்சா 3’!

கட்டுரை 27-May-2014 11:29 AM IST Chandru கருத்துக்கள்

எதையாவது ‘குண்டக்க மண்டக்க’ புதுசாகச் சொல்லி ரசிகர்களை சுவாரஸ்யப்படுத்துவதில் பெயர்போனவர் இயக்குனர் கம் நடிகர் ரா.பார்த்திபன் என்கிற ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இந்த முறை தன் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திற்காக கதையே இல்லாமல் படம் எடுத்திருக்கிறாராம். அதோடு இந்த ஒரு படத்தில் விஷால், விஜய் சேதுபதி, ஆர்யா, சேரன், பிரகாஷ் ராஜ், அமலா பால், டாப்ஸி, நஸ்ரியா நசீம் உட்பட தமிழ்சினிமாவின் பிரபலங்கள் பலரும் நடிக்கிறார்கள் என்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக ஏற்றிவிட்டிருக்கிறது. தவிர ‘‘இப்படத்தின் முதல்பாதியை பார்த்துவிட்டு இரண்டாம்பாதி இப்படித்தான் இருக்கும் என்று சரியாகக் கூறுபவர்களுக்கு 1 கோடி தருகிறேன்’’ தன் படத்தின் மீது தனக்கிருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் பார்த்திபன். இவ்வளவு பில்&டப்களோடு தற்போது வெளிவந்திருக்கும் ‘க.தி.வ.இ’ படத்தின் டிரைலர் எப்படி?

சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் கதை இதுதான் என நம் ‘டாப் 10 சினிமா’வில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம். இந்த டிரைலரைப் பார்க்கும்போது கிட்டத்தட்ட நாம் வெளியிட்ட செய்தியை உண்மையாக்குவதுபோல்தான் இருக்கிறது. ஏற்கெனவே சினிமாவுக்குள் சினிமாவைக் காட்டிய ஏகப்பட்ட படங்களை நாம் தமிழ் சினிமாவில் பார்த்திருக்கிறோம். ‘வெள்ளித்திரை’, ‘தமிழ்ப்படம்’ வரிசையில் இப்படமும் சினிமா பின்னணியில் உருவாக்கப்பட்ட ஒரு படம்தான். ஒரு படத்திற்கான கதை டிஸ்கஷன் எப்படியிருக்கும் என்பதுதான் இப்படத்தின் கதை. அதில் ஒவ்வொரு காட்சிகளைப் பற்றி விவரிக்கும்போதும், அது இப்படித்தான் இருக்கும் என கற்பனையில் பிரபல நடிகர்களை அந்தக் காட்சியில் நடிக்க வைத்திருக்கிறார் பார்த்திபன்.

டிரைலரின் முதல் காட்சியில் 25-5-2041 என்ற தேதியைக் காட்டிவிட்டு பெரிய சுனாமி வருவதுபோல் காட்டுகிறார்கள். அடுத்த ‘கட்’டில் ‘‘கன்ஃபார்மா நேஷனல் அவார்டு கிடைக்கும்..... உனக்கு! ஆனா, எனக்கு?’’ என ஏ.எல்.அழகப்பன் வசனம் பேசுகிறார். அடுத்த ‘கட்’டில் ‘‘ஆணும் பொண்ணும் சத்தியமா சமமா இருக்கவே முடியாது....’’ என பழைய ரஜினி பேசுகிறார். அதற்கடுத்து ‘‘ஸீ... உன்கிட்ட பேச முடியாது... யு ஆர் ஏ....’’ என கறுப்பு வெள்ளை கமல் திரையில் தோன்றுகிறார். இப்படி வரிசையாக ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத, ஆனால் வசனங்கள் சம்பந்தப்படுத்துவதைப் போன்ற ஷாட்களாக யோசித்து யோசித்து டிரைலரில் பயன்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக கதை டிஸ்கஷனின்போது தம்பி ராமையா அடிக்கும் கமென்ட்களுக்கேற்றவாறு காட்சிகளைக் காட்டியிருப்பது சுவாரஸ்யம். உதாரணமாக ‘‘இந்த சீன் நான் சொன்னதா’’ என அவர் கேட்டதும், அடுத்த ‘கட்’டில் நாயகி ‘தூ...’ என துப்புவதையும், ‘‘த்ரில்லர், ஹாரர், டெம்ப்பர் இத மூணையும் கலந்து 3டில ‘பீட்சா 3’னு ஒரு படத்த....’’ என தம்பி ராமையா சொன்னதும், அடுத்த ‘கட்’டில் விஜய்சேதுபதியைக் காட்டுவதையும் வைத்திருக்கறார்கள். அதோடு சுனாமியில் சிக்கி கதறி அழும் விஷால், அமலாபாலுடன் ரொமான்ஸ் செய்யும் ஆர்யா, கிருஷ்ணர் வேடத்தில் வரும் பிரகாஷ்ராஜ், யுடிவி தனஞ்செயனின் வருகை என டிரைலர் நெடுக சின்ன சின்ன ஆச்சரியங்கள் ஏகப்பட்டதை வெறும் 2 நிமிட 22 வினாடிகளுக்குள்ளாகவே வைத்திருக்கிறார். அப்படி என்றால் 2 மணி நேர படத்தில் எவ்வளவு ஆச்சரியங்கள் காத்திருக்கும்?

மொத்தத்தில்... தன்னிடமிருந்து ரசிகர்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு தன்னுடைய ‘பழைய பாதை’க்கு திரும்பி இருக்கிறார் ரா.பார்த்திபன். வெல்கம் பேக்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;