கோச்சடையான்

ருத்ரதாண்டவம்!

விமர்சனம் 23-May-2014 3:22 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : ஈராஸ் இன்டர்நேஷனல், மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் : சௌந்தர்யா.ஆர். அஸ்வின்
நடிகர்கள் : ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஜாக்கி ஷெராப், ஆதி
ஒளிப்பதிவு : ராஜீவ் மேனன்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
எடிட்டிங் : ஆண்டனி

ரஜினி படம் என்பதைத் தாண்டி, மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் அனிமேஷன் 3டி படம் என்ற பெருமையோடு வந்திருக்கும் ‘கோச்சடையான்’ ரசிகர்களிடத்தில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

கதைக்களம்

தன் தந்தை கோச்சடையானின் மரணத்திற்கு காரணமான மன்னன் ரிஷிகோடகனை, மகன் ராணா பழிவாங்குவதுதான் ‘கோச்சடையான்’ படத்தின் கதை.

கோட்டைப் பட்டிணத்தின் படைத் தளபதி கோச்சடையானின் (ரஜினி) வீரதீர செயல்களால் அண்டை நாடுகள் பலவற்றை கைப்பற்றுகிறான் மன்னன் ரிஷிகோடகன். ஆனால், மக்களும் அரசவை மந்திரிகளும் மன்னனைவிட கோச்சடையானையே அதிகம் புகழ்வதால், ரிஷிகோடகனுக்கு கோச்சடையான் மீது பொறாமை ஏற்படுகிறது.

ஒரு சமயம் பாரசீக நாட்டிற்குச் சென்று ஏராளமான குதிரைகளையும், போர்க்கருவிகளையும் வாங்கிவிட்டு கடல்வழியாகத் திரும்பி வந்துகொண்டிருக்கும் கோச்சடையான் படை மீது எதிரி நாடான கலிங்கபுரி வீரர்கள் ரகசியத் தாக்குதல் தொடுக்கிறார்கள். கோச்சடையான் படை அவர்களை விரட்டியடித்தாலும், அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் உணவுப் பொருட்களில் விஷத்தை கலந்துவிட்டுப் போகிறார்கள் கலிங்கபுரி வீரர்கள். இது தெரியாமல் அதை உண்ணும் ஏராளமான படைவீரர்கள் உயிருக்குப் போராட, வேறு வழியில்லாமல், கலிங்கபுரி மன்னனிடமே தஞ்சமடைகிறான் கோச்சடையான். போர் வீரர்களையும், குதிரைகளையும், போர்க் கருவிகளையும் தன் நாட்டிலேயே விட்டுச்செல்வதாக இருந்தால், விஷத்தை முறிப்பதற்கு உதவி செய்வதாக மன்னன் வாக்குறுதி தருகிறான். தன் வீரர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அனைத்தையும் விட்டுவிட்டு வெறுங்கையுடன் தன் கோட்டைப் பட்டிணத்திற்கு திரும்புகிறான் கோச்சடையான்.

நீண்ட நாட்களாக பொறாமை கொண்டிருக்கும் மன்னன் ரிஷிகோடகன் இந்த தருணத்தைப் பயன்படுத்தி கோச்சடையான் மீது தேச துரோகப் பழியைச் சுமத்தி அவனுக்கு மரண தண்டனை கொடுக்கிறான். சாவதற்கு முன் தன் இரண்டு பிள்ளைகளான ராணா, சேனாவிடம் கலிங்கபுரியில் விட்டுவிட்டு வந்த தன் நாட்டு வீரர்களை நீங்கள்தான் திரும்பக் கூட்டிக் கொண்டு வரவேண்டும் என தன் கடைசி ஆசையை சொல்லிவிட்டு உயிரை விடுகிறார் கோச்சடையான். தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றி அவர் மீது சுமத்தப்பட்ட தேச துரோகப் பழியை ராணா எப்படி போக்குகிறார் என்பதுதான் ‘கோச்சடையான்’ படத்தின் வரலாற்று கதை!

படம் பற்றி அலசல்

டெக்னாலஜியில் அடுத்த பரிணாமத்தை இந்தியாவிற்கு அறிமுகம் செய்து வைத்ததற்காக படத்தின் இயக்குனர் சௌந்தர்யாவுக்கும், ‘கோச்சடையான்’ டீமுக்கும் முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம். ஆனால், அதையும் தாண்டி இப்படத்திற்கு ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வந்ததற்கு முதல் முக்கிய காரணம் ரஜினி என்ற மனிதரின் காந்த சக்தி.

டெக்னாலஜி விஷயங்களைத் தாண்டி ஒரு படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை போரடிக்காமல் கொண்டு செல்வதற்கு ஒரு நல்ல கதையும், சுவாரஸ்யமான திரைக்கதையும், அதற்கு கைகொடுக்கும் வசனங்களும் இருக்க வேண்டியது அவசியம். இந்த மூன்று விஷங்களையும் ‘பக்கா’வாக கொடுத்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். முதலில் கொஞ்சம் கொஞ்சமாக கேரக்டர்களை அறிமுகப்படுத்திவிட்டு மெல்ல கதைக்குள் நகர்ந்து பரபரப்பாக இடைவேளை போடுகிறார்கள். இடைவேளைக்குப் பின் ஃப்ளாஷ்பேக்கில் வரும் கோச்சடையானின் ருத்ரதாண்டவம் தியேட்டரையே அதிர வைக்கிறது. அதோடு ரஜினியின் குரலில் ஒலிக்கும் ‘மாற்றம் ஒன்றுதான் மாறாதது’ பாடலுக்கான சூழ்நிலையும், காட்சியமைப்பும் அற்புதம். க்ளைமேக்ஸை மட்டும் இன்னும் கொஞ்சம் முழுமையாகக் காட்டியிருக்கலாமே என்று தோன்றுகிறது. ஆனாலும் ‘தொடரும்’ எனப்போட்டு அதற்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.

இந்த மோஷன் கேப்சர் டெக்னாலஜியால் கிடைத்த மிகப்பெரிய சந்தோஷம் என்றால் அது மீண்டும் நாகேஷை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியதுதான். அவருக்கான அனிமேஷன் விஷயங்களும், பின்னணிக் குரலும் ஏகப்பொருத்தம்! கொஞ்ச நேரமே வந்தாலும் பழைய நாகேஷைப் பார்த்த திருப்தியை ரசிகர்களின் முகத்தில் காண முடிந்தது.

இந்தப் படத்தில் மிக முக்கியமாக பாராட்டப்பட வேண்டிய இன்னொரு மனிதர் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான். காட்சிக்கு காட்சி அவரின் பின்னணி இசையே படத்தை பிரம்மாண்டமாகவும், ஒரு வரலாற்றுப் படமாகவும் நம்மை ஏற்றுக் கொள்ள வைக்கிறது. பாடல்களையும் அற்புதமாகத் தந்திருக்கிறார். குறிப்பாக ஓபனிங் பாடலும், எஸ்.பி.பி. பாடும் ‘மெதுவாகத்தான்’ பாடலும், ரஜினி பாடும் ‘மாற்றம் ஒன்றுதான் மாறாதது’வும். ஆனாலும் வரிசையாக பாடல்களாக ஒலிக்கிறதோ என்ற எண்ணம் ஏற்பட்டதையும் தவிர்க்க முடியவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

அனிமேஷன் படம்தானே இதில் என்ன பெரிதாக நடிகர்களுக்கு வேலை இருக்கப் போகிறது என எண்ணிவிட வேண்டாம். அவர்கள் கொடுக்கும் அசைவுகள்தான் திரையில் அனிமேஷன் கேரக்டர்களாக நாம் பார்க்கிறோம். அந்த வகையில் ரஜினி மேஜிக் இதிலும் நிகழ்ந்திருக்கிறது. மற்றபடி ஜாக்கி ஷெராப், சரத்குமார், ஆதி, நாசர், தீபிகா படுகோன், ருக்மிணி, ஷோபனா என அவரவர்களின் பங்களிப்பை கச்சிதமாகக் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும், ஒரு சிலரைத் தவிர மற்றவர்களை ‘இது அவர்களா’ என யோசிக்க வைக்கிறது அவர்களுக்கான அனிமேஷன் பாத்திரப் படைப்புகள். ஆனாலும் சண்டைக்காட்சி, ரஜினி ஆடும் ருத்ரதாண்டவம், நாகேஷ் போர்ஷன் போன்றவற்றில் பங்களித்தவர்களுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்!

பலம்
1. ரஜினி... ரஜினி.... ரஜினி!
2. கதை, திரைக்கதை, வசனம்
3. ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை

பலவீனம்
1. கேரக்டர்களின் அனிமேஷன் படைப்பிலும், 3டியிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
2. கோச்சடையான் வரும் காட்சிகளின் அனிமேஷன் அளவுக்கு ராணா வரும் காட்சிகளின் அனிமேஷனில் மெனக்கெடல்கள் இல்லாதது.
3. ஒன்றிரண்டு பாடல்களைத் தவிர்த்திருக்கலாம்.


மொத்தத்தில்...

ரஜினி நடித்த ஒரு வரலாற்றுப் படம் என்பதைத் தவிர்த்துவிட்டு, இது ஒரு 3டி அனிமேஷன் படம் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் பார்த்தால் நிச்சயம் ரசிகர்களுக்கு இப்படம் முழுத் திருப்தியைத் தரவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். காட்சியமைப்பும், வசனங்களும் சரியாகப் பொருந்தி வரும்போது கேரக்டர்களின் பாடி லாங்குவேஜும், முக பாவனைகளும் கொஞ்சம்கூட ஒட்டவேயில்லை. அப்படியிருந்தும்கூட க்ளைமேக்ஸில் ரஜினி பேசும் ஒவ்வொரு வசனத்திற்கும் ரசிகர்கள் தியேட்டரில் ஆர்ப்பரிக்கிறார்கள். அதேபோல் 3டியிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். மத்தபடி ‘தலைவர்’ படத்தில் என்னென்ன இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பார்களோ அத்தனையையும் தந்திருக்கிறது சூப்பர்ஸ்டாரின் ‘கோச்சடையான்’.

ஒரு வரி பஞ்ச் : ருத்ரதாண்டவம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பத்மாவத் - டிரைலர்


;