வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

விடுமுறைக் கொண்டாட்டம்!

விமர்சனம் 10-May-2014 2:31 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : ஹேன்ட் மேட் ஃபிலிம், பிவிபி சினிமாஸ்
இயக்கம் : ஸ்ரீநாத்
நடிகர்கள் : சந்தானம், ஆஸ்னா ஸவேரி, ‘மிர்ச்சி’ செந்தில் மற்றும் பலர்
ஒளிப்பதிவு : சக்தி
இசை : சித்தார்த் விபின்
எடிட்டிங் : சாய்காந்த்

வெற்றிபெற்ற படங்களே எப்போதும் ‘ரீமேக்’ செய்யப்படும். ஆனால், ‘ரீமேக்’ செய்யப்படும் படங்கள் அனைத்துமே வெற்றிபெறுவதில்லை. சரி.... ‘நான் ஈ’ புகழ் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் சூப்பர்ஹிட்டான ‘மரியாதை ராமண்ணா’ இங்கே தமிழில் சந்தானம் ஹீரோவாக நடிக்க ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதமா’க ரீமேக்காகி இருக்கிறது. காமெடியனிலிருந்து ஹீரோவாக புரமோஷன் ஆவதற்கு இந்த ஆயுதம், சந்தானத்திற்கு எந்தளவு கை கொடுத்திருக்கிறது?

கதைக்களம்

பழிக்குப் பழி வாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தில் பலி ஆடாக ஒருவன் நுழைந்து, அது அவனுக்கும் தெரிந்த பிறகு, அதிலிருந்து எப்படித் தப்பிக்கிறான் என்பதே ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’.

அரவங்காடு கிராமத்தில் வசித்து வரும் இரண்டு குடும்பங்களுக்கிடையே நடக்கும் பங்காளிச் சண்டையில் சந்தானத்தின் அப்பா, சந்தானத்தின் மாமாவை வெட்டிச் சாய்த்துவிட்டு அவரும் உயிரை விடுகிறார். தன் குடும்பத்தில் ஒருவரை கொன்ற சந்தானத்தின் மொத்த குடும்பத்தையும் பலிவாங்கத் துடிக்கிறது எதிர்த்தரப்பு. தன் மகனின் உயிரைக் காப்பாற்ற அந்த ஊரைவிட்டு சென்னைக்கு வந்து குடியேறி மகனை வளர்க்கிறார் சந்தானத்தின் அம்மா.

சந்தானம் வளர்ந்து பெரிய ஆளாவதற்குள் அவரின் அம்மாவும் உயிரை விடுகிறார். சந்தானத்தை வளர்க்கும் அவரின் மாமா, அரவங்காட்டில் சந்தானத்தின் அப்பா பெயரில் இருக்கும் 5 ஏக்கர் நிலத்தைப் பற்றி ஒரு கட்டத்தில் சொல்கிறார். கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் சந்தானம், அந்த இடத்தை விற்று தன் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளோடு அரவங்காடு நோக்கி பயணமாகிறார். தன்னைக் கொல்லத் துடித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தின் ஒரு வாரிசான நாயகி ஆஸ்னாவும் சந்தானம் பயணம் செய்யும் அதே ரயிலில் பயணிக்க, இருவருக்குள்ளும் நட்பு உருவாகிறது. ஆஸ்னாவின் நட்பால், தன் நிலத்தை விற்க அந்த குடும்பத்தின் உதவியை நாடி அவர்களின் வீட்டிற்குள்ளேயே காலடி எடுத்து வைக்கிறார் சந்தானம்.

27 வருடங்களாக தாங்கள் பழிவாங்கத் தேடிக் கொண்டிருக்கும் குடும்ப வாரிசுதான் சந்தானம் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆஸ்னாவின் அப்பாவும், அண்ணன்களும் கொலைவெறியோடு சந்தானத்தை நெருங்குகிறார்கள். ஆனால், அவர்களின் குடும்ப வழக்கப்படி வீட்டிற்குள் நுழைந்த ஒருவரை, வீட்டில் வைத்து கொலை செய்வதில்லை என்பதால், அவரை வீட்டிலிருந்து வெளியேற்றி கொல்லத் துடிக்கிறார்கள். இந்த விஷயம் சந்தானத்திற்கும் மெல்ல புரிய வர, அவர் அந்த ஆபத்திலிருந்து எப்படித் தப்பிக்கிறார் என்பதே காமெடியும், பரபரப்பும் கலந்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’.

படம் பற்றிய அலசல்

காமெடியன்கள் ஹீரோக்களாக மாறி காணாமல் போய்க் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் ஒரு மோசமான சூழ்நிலையில் சந்தானமும் அந்த களத்தில் தைரியமாக குதித்திருக்கிறார். ஆனால், அவர் குதித்தது சந்தானம் என்ற ஹீரோ மேல் வைத்த நம்பிக்கையால் என்பதைவிட, ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த ஒரு சுவாரஸ்யமான கதையை நம்பி என்பதால், தன் முதல் முயற்சியிலேயே ஜெயித்திருக்கிறார் சந்தானம். ‘மரியாதை ராமண்ணா’வின் கதை ரொம்பவும் சாதாரணமானதுதான். ஆனால், அதை விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் அமைக்கப்பட்ட திரைக்கதையால் தெலுங்கில் பெரும் வரவேற்பு பெற்றது. ஒரு படம் ஜெயிப்பதற்கு ஹீரோவைவிட கதையும், திரைக்கதையும் ரொம்பவும் அவசியம் என்பது இந்தப் படத்தின் வெற்றி உணர்த்தியது. அந்த நம்பிக்கையில்தான், தன்னுடைய நீண்டநாள் ஹீரோ ஆசையை இப்படத்தின் மூலம் சந்தானம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் முதல்பாதி வழக்கம்போல் சந்தானத்தின் நக்கல், நையாண்டிகளோடு கலகலப்பாக பயணித்து, கொஞ்சம் கொஞ்சமாக கதைக்குள் நுழைகிறது. தாங்கள் தேடிக் கொண்டிருக்கும் ஆள்தான் சந்தானம் எனத் தெரிந்து அவரைக் கொல்லத் துடிக்க தொடங்கும் இடத்திலிருந்து கதை ஜெட் வேகம் பிடிக்கிறது. சந்தானத்திற்கும் இந்த உண்மை தெரிய வரும்போது, என்ன செய்யப் போகிறார் என்ற சஸ்பென்ஸோடு இடைவேளை விடுகிறார்கள். இரண்டாம் பாதியில் காமெடியைக் கொஞ்சம் குறைத்து, பரபரப்பு, சென்டிமென்ட், காதல் என ஒரு குடும்பப் படத்திற்கான அத்தனை விஷயங்களையும் கலந்து கொடுத்திருக்கிறார்கள். க்ளைமேக்ஸும் வழக்கம்போல் சுபம்!

வழக்கமாக இதுபோன்ற படங்களில் பாடல்கள் பெரும் இடைஞ்சலாக இருக்கும். ஆனால், இப்படத்தின் பாடல்களை பெரிய அளவில் ரசிக்கமுடியவில்லை என்றாலும், உறுத்தவில்லை. காமெடியனை ஹீரேவாக காட்டும் படங்களில் பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் விஷயங்கள் கைகொடுக்க வேண்டியது ரொம்பவும் அவசியம். இப்படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் சந்தானத்திற்கு கையை அல்ல, தோளையே கொடுத்திருக்கிறது!

தான் ஹீரோவாக களமிறங்கினாலும், ரசிகர்கள் தன்னிடமிருந்து எதிர்பார்ப்பது காமெடியன் சந்தானத்தைதான் என்பதை சந்தானம் இப்படத்திலும் மறக்கவில்லை என்பதால் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போகிறது ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தை!

நடிகர்களின் பங்களிப்பு

சந்தானத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். ‘ஓபனிங் பாடலோ’டு சந்தானம் அறிமுகமானதும், ‘இவருமா இப்படி..?’ எனத் தோன்றினாலும், சட்டென கியரை மாற்றி பழைய சந்தானமாக மாறி நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். மனிதர் ஹீரோ அவதாரத்திற்காக உடல் இளைத்து, கொஞ்சம் பளபளப்பு கூட்டி, நடனங்கள் பயின்று பட்டையைக் கிளப்பியிருக்கிறார்! நல்லவேளையாக பத்து பதினைந்து பேரை அடித்துப் பறக்கவிடும் ஆக்ஷன் ஹீரோவாக மாறாதது பெரும் ஆறுதல். முதல் படத்துக்கு இதுபோதும் என அவர் நினைத்தது அவரின் வெற்றிக்கு அடித்தளம்.

ஹீரோயின் ஆஸ்னா கண்ணுக்கு லட்சணமாக இருக்கிறார். தனக்கு கிடைத்த கேரக்டரை சரியாக செய்திருக்கிறார். ஆஸ்னாவைத் திருமணம் செய்ய இருக்கும் மாப்பிள்ளையாக ‘மிர்ச்சி’ செந்தில். ஹீரோ சந்தானத்தால் கலாய்க்கப்பட்டு, ரசிக்க வைத்திருக்கிறார். இவர்களைத் தவிர ஒரு பெருங்கூட்டமே ஒரு பங்களாவுக்குள் படம் முழுக்க சுற்றிக் கொண்டிருக்கிறது. அவரவர்கள் கொடுத்த வேலையை கச்சிதமாக முடித்திருக்கிறார்கள். அதில் ஆஸ்னாவின் அப்பா கேரக்டர், அண்ணன் கேரக்டர்கள் வெகு பொருத்தம்!

முக்கியமாக இப்படத்தில் இருக்கும் இரண்டு ஸ்டார்களைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும் ஒருவர் ‘சோலார் ஸ்டார்’ ராஜகுமாரன். இன்னொருவர்... ஒரேயொரு சீனில் வந்தாலும், மொத்த தியேட்டரையும் கலங்கடித்த ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன். அவர்களின் அலப்பல்களை தியேட்டரில் ரசியுங்கள்.

பலம்

1. எளிமையான கதையும், சுவாரஸ்யமாக அமைக்கப்பட்ட திரைக்கதையும்.
2. சந்தானத்தின் ‘கல கல’ காமெடியும், அதற்கு கைகொடுத்திருக்கும் வசனங்களும்.
3. தன்னைக் கொல்லத் துடிப்பவர்களிடமிருந்து சந்தானம் லாவகமாக தப்பிக்க அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள்.
4. பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1. இரண்டாம் பாதியின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
2. பாடல்களில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கலாம்.

மொத்தத்தில்...

சந்தானத்தின் பரிசோதனை முயற்சி அவருக்கு நன்றாகக் கைகொடுத்திருக்கிறது. கோடைகால விடுமுறையில் குடும்பத்துடன் பார்க்க ஏற்ற படம் இந்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’.

ஒரு வரி பஞ்ச்: விடுமுறைக் கொண்டாட்டம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;