யாமிருக்க பயமே

சிரிப்பு பேய்!

விமர்சனம் 9-May-2014 5:17 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட்
இயக்கம் : டி கே
நடிகர்கள் : கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஓவியா, கருணாகரன்
ஒளிப்பதிவு : ராமி
இசை : எஸ்.என்.பிரசாத்
எடிட்டிங் : ஏ.ஸ்ரீகர் பிரசாத்

ரசிகர்களை பயமுறுத்துவதற்கு ‘காஞ்சனா’, ‘பீட்சா’ வரிசையில் வந்திருக்கும் இன்னொரு படமே ‘யாமிருக்க பயமே’. பயமுறுத்தியிருக்கிறதா?

கதைக்களம்

தன் அப்பா தன் பெயரில் எழுதி வைத்திருக்கும் பாழடைந்த பங்களா ஒன்று கிருஷ்ணாவின் கைக்கு வருகிறது. அந்த இடத்தை ஹோட்டலாக மாற்றி பிசினஸ் ஆரம்பிக்கலாம் என தன் காதலி ரூபா மஞ்சரியுடன் இணைந்து வேலையில் இறங்குகிறார். அதற்கு கருணாகரனும், அவரது தங்கை ஓவியாவும் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கிறார்கள். பாழடைந்த பங்களாவை சுத்தப்படுத்தி, சரி செய்து ஹோட்டல் பிசினஸைத் தொடங்குகிறார்கள் கிருஷ்ணா அன்ட் கோ. முதன் முதலாக ஒரு ஜோடி அந்த ஹோட்டலில் வந்து தங்குகிறது. மறுநாள் காலை அந்த ஜோடி மின்சாரம் தாக்கி இறந்துவிட, போலீஸுக்குப் பயந்து அதை யாரிடமும் சொல்லாமல் பங்களா வெளியே குழி தோண்டி புதைத்து விடுகிறார்கள். அதன் பிறகு அந்த ஹோட்டலுக்கு வந்து தங்கும் ஒவ்வொரு கஸ்டமராக இதேபோல் ஏதாவது ஒரு காரணத்தால் இறந்துபோக, ஒவ்வொருவரையாக அடக்கம் செய்யத் தொடங்குகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த பங்களாவில் ஏதோ அமானுஷ்யம் இருப்பதாக அனைவரும் பயந்து நடுங்கத் தொடங்குகிறார்கள். எதற்காக அங்கு வரும் கஸ்டமர்கள் எல்லோரும் மரணமடைகிறார்கள்? அந்த பங்களாவில் இருக்கும் மர்மம் என்ன என்பதற்கான பதில்களோ விடைதான் ‘யாமிருக்க பயமே’.

படம் பற்றிய அலசல்

அமானுஷ்யம் சம்பந்தப்பட்ட படங்கள் என்றாலே ஏதாவது ஒரு பாழடைந்த பங்களா இருக்க வேண்டும் என்ற தமிழ்சினிமாவின் மாற்றமுடியாத விதிக்கு இப்படமும் விதிவிலக்கல்ல. அரதப்பழசான கதையில் கொஞ்சம் பயமுறுத்தும் காட்சிகளையும், ஆங்காங்கே வயிறுகுலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளையும் சேர்த்து ரசிகர்களை கடைசிவரை போரடிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் அறிமுக இயக்குனர் டி கே.

படத்தில் வரும் முதல் 20 நிமிடங்கள் கதைக்கு சம்பந்தமேயில்லாமல் நகர்வதைப் போன்ற உணர்வைக் கொடுக்கின்றன. அதன் பின்பு கொஞ்சம் கதைக்குள் நுழைந்த பிறகுதான் ஆறுதல். அதிலும் நிறைய இடங்களில் இரட்டை அர்த்த வசனங்களை அள்ளித் தெளித்து முகம் சுழிக்க வைத்திருக்கிறார்கள். ஆனாலும் அடுத்தடுத்து சுவாரஸ்யமான நகைச்சுவைக் காட்சிகளை வைத்து முதல்பாதியை நகர்த்தி, இடைவேளை வரும்போது கொஞ்சம் பயத்தோடு வெளியில் அனுப்பி வைக்கிறார்கள். இரண்டாம் பாதியில் வித்தியாசமாக எதையாவது சொல்வார்கள் என்ற நினைப்போடு உள்ளே வந்தால், அதிலும் பழைய மசாலாதான். ஆனாலும், காட்சிக்கு காட்சி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. க்ளைமேக்ஸையும் பெரிதாக இழுத்தடிக்காமல் சட்டென ‘என்ட் கார்டு’ போட்டு வழியனுப்பி வைத்திருப்பது படத்திற்கு ப்ளஸ்.

வழக்கம்போல இதுபோன்ற ‘ஹாரர் த்ரில்லர்’ படங்களில் இடையில் வரும் பாடல்கள் படத்தின் ஓட்டத்திற்கு பெரிய இடைஞ்சலாக இருக்கும். இப்படத்திலும் அதே! ஆனாலும் பின்னணி இசையில் இசையமைப்பாளரின் பங்கு சிறப்பானது. அதேபோல் ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் பயமுறுத்த வேண்டிய காட்சிகளில் பெரிய பங்கு வகித்திருக்கின்றன. பத்து ஆர்ட்டிஸ்டுகளையும், ஒரு பங்களாவையும் வைத்துக் கொண்டு 2 மணி நேரம் ரசிகர்களை தியேட்டரில் அமர வைக்க முடியும் நிரூபித்திருக்கிறது ‘யாமிருக்க பயமே’ டீம்!

நடிகர்களின் பங்களிப்பு

தனக்கு எந்த கேரக்டர் சரியாக இருக்கும் என தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கிருஷ்ணா. இதுபோன்ற கேரக்டர்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து செய்தால் கண்டிப்பாக கிருஷ்ணாவிற்கென ஒரு இடம் கிடைப்பது நிச்சயம். நடிப்பிலும் நல்ல ‘மெச்சூரிட்டி’ வந்திருக்கிறது அவருக்கு! மொத்த படத்தையும் சுவாரஸ்யமாக நகர்த்த்திச் செல்வதில் முக்கியப்பங்க வகிப்பவர் ‘சுளுக்கெடுக்கும் சூடுகை சுந்தரம்’ கேரக்டரில் நடித்திருக்கும் கருணாகரன்தான். மனிதர் திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சிக்கும் தியேட்டரில் சிரிப்பு வெடிதான். ரூபா மஞ்சரி, ஓவியா முதல்பாதியில் ‘கிளுகிளு’ப்பூட்டி இரண்டாம்பாதியில் ‘கிடுகிடு’க்க வைத்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர ஆதவ் கண்ணதாசன், மயில்சாமி, அன்ஸ்வரா உள்ளிட்ட நட்சத்திரங்களும் தங்களின் பங்களிப்பை சரியாகக் கொடுத்திருக்கிறார்கள்.

பலம்

1. பேய்ப்படம் என்பதற்காக முழுக்க முழுக்க பயமுறுத்தும் காட்சிகளாக வைக்காமல், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து சுவாரஸ்யமாக அமைக்கப்பட்ட திரைக்கதை.
2. தங்களின் கேரக்டர்களை உணர்ந்து மிகைப்படுத்தாத நடிப்பை வழங்கியிருக்கும் நடிக, நடிகைகளின் பங்களிப்பு.
3. பின்னணி இசை, ஒளிப்பதி, எடிட்டிங் உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள்.

பலவீனம்

1. கொஞ்சம்கூட லாஜிக்கே இல்லாத அரதப்பழசான கதை.
2. படம் நெடுக இழையோடும் இரட்டை அர்த்தம் தெளிக்கும் வசனங்கள்
3. கதைக்கு சம்பந்தமேயில்லாமல் இடையிடையே வரும் பாடல்கள். (மொத்தமே நான்கு பாடல்கள்தான் என்றாலும் அதுவுமே மைனஸ்தான்).

மொத்தத்தில்...

ஹாரர் படம் என்பதற்காக ‘பீட்சா’ படத்தில் இருக்கும் ‘மேக்கிங்’கை இப்படத்தில் ரசிகர்கள் நிச்சயம் எதிர்பார்க்க வேண்டாம். ஆனால் கண்டிப்பாக ‘கலகல’ப்புக்கு பஞ்சமிருக்காது. ஜாலியாகச் சென்று, கொஞ்சம் பயத்தோடு சிரித்துவிட்டு வருவதற்கு ஏற்ற பொழுதுபோக்கு படம்தான் இந்த ‘யாமிருக்க பயமே’!

ஒரு வரி பஞ்ச் : சிரிப்பு பேய்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;