நீ எங்கே என் அன்பே

ஹிந்தி ‘கஹானி’யை பார்க்காதவர்களுக்கு பிடிக்கும்!

விமர்சனம் 2-May-2014 5:34 PM IST Inian கருத்துக்கள்

தயாரிப்பு : என்டேமோல் இந்தியா
இயக்கம் : சேகர் காமுலா
நடிகர்கள் : நயன்தாரா, வைபவ், பசுபதி
ஒளிப்பதிவு : விஜய் சி குமார்
இசை : மரகதமணி
எடிட்டிங் : மார்த்தான் கே வெங்கடேஷ்

வித்யாபாலன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ஹிந்தி படம் ‘கஹானி’. இப்படத்தை ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரில் தமிழிலும், தெலுங்கில் ‘அனாமிகா’ என்ற பெயரிலும் ரீ-மேக் செய்து இயக்கியிருப்பவர் பிரபல தெலுங்குபட இயக்குனர் சேகர் காமுலா. ‘கஹானி’ படத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்ற வித்யாபாலன் நடித்த கேரக்டரில் நயன்தாரா நடித்துள்ளார்.

கதைக்களம்

கைநிறைய சம்பளம் வாங்கும் சாஃப்ட்வேர் இஞ்சினியரான தன்னுடைய காதல் கணவருடன் நயன்தாரா அமெரிக்காவில் வசதியாக வசித்து வருகிறார். அலுவலகப் பணியின் காரணமாக ஹைதராபாத் சென்ற கணவனிடமிருந்து எந்த தொடர்பும் இல்லாமல் போகவே, அவரைத்தேடி வருகிறார் நயன்தாரா. வந்த இடத்தில் அவரை பற்றிய பல புதிரான, திடுக்கிடும் விஷயங்கள் கேட்டு நிலைகுலைந்து போகிறார். அவரது கணவனை கண்டு பிடித்தாரா, என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.

படம் பற்றிய அலசல்

‘கஹானி’யில் கர்ப்பிணி பெண்ணாக வந்து ரசிகர்களின் பரிதாபங்களையும், பாராட்டுக்களையும் பெற்று நடித்திருந்தார் வித்யா பாலன். அதுவே அப்படத்தின் பெரிய பலமாக அமைந்தது. இப்படத்தில் நயன்தாரா திருமணமான சில நாட்களிலேயே கணவன் காணாமல் போக, அவரை தேடி அலையும் அபலைப் பெண்ணாக நடித்து பரிதாபம் ஏற்படுத்துகிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு பெண்ணை பிரதான கதாபாத்திரமாகக் கொண்டு உருவான திரைப்படம். நயன்தாராவை நம்பியே முழு படமும் நகருகிறது. அவரும் திறம்படச் செய்துள்ளார்.

படம் ஒருவித திகிலுடன் ஆரம்பமாகிறது. காற்றாடிகள், அதை பறக்கவிடத் தேவையான நூல் கண்டுகளை தயாரித்து விற்பனை செய்யும் கடைகள் நிறைந்திருக்கும் ஒரு பகுதி, அந்தப் பகுதியில் ஒரு கடையில் பல்வேறு இடங்களில் இருந்து வெடிகுண்டு தயாரிக்கத் தேவையான பொருட்கள் வந்து சேருகிறது. அதை ஒரு நூல்கண்டின் உள்ளே வைத்து அதை வெடிப்பதற்கு ஏற்ற நிலையில் தயார் செய்கின்றனர். அதை செய்பவர் மிகச் சாதுர்யமாகவும், விரைவாகவும் செய்வதை பார்க்கும்போதே நமக்கு ஒரு மரண பீதி ஏற்படுகிறது.

ஆண், பெண், குழந்தைகள் என கூட்டமாக சேர்ந்து காற்றாடி விடும் இடத்தில் அந்த நூல் குண்டு வெடித்து சிதறி பலரின் உயிரைக் குடிக்கிறது. இதற்கு காரணம் யார்? ஏன்? என்பதை பதட்டத்துடனும் பரபரப்புடனும் சொல்கிறார் இயக்குனர் சேகர் காமுலா. முதல் பாதி சற்று தொய்வுடன் இருந்தாலும் இரண்டாம் பாதி அதை சரி செய்கிறது. மும்பை, கோவை குண்டு வெடிப்பு சம்பவங்கள் நம் கண்முன் வந்து செல்கிறது. மரகதமணியின் பின்னணி இசை திடுக் காட்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கிறது. ஹோட்டல் மேனேஜராக வருபவர், ‘ஸ்டில் ஐ ஆம் பேச்சுலர்’ என்றபடி நயன்தாராவை வட்டமிடும் இன்ஸ்பெக்டர், பொம்மை துப்பாக்கியால் சுடுவது போல் தொடர் கொலை செய்யும் ஆசாமி உட்பட பலர் விறு விறு கதைக்கு உதவுகின்றனர்.

நடிகர்களின் பங்களிப்பு

நயன்தாராவை சுற்றியே கதை செல்வதால் அவருக்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு! அதை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். பசுபதியிடம் விவாதம் செய்யும் இடத்திலும், புடவையில் ஒய்யாராமாக நடந்து வரும்போதும் அழகோ அழகு! கிளாமரான உடையணியாமலேயே ஒருவித கவர்ச்சியை காட்டியிருக்கிறார். வசதியே இல்லாத பாழடைந்த ஹோட்டலில் கரப்பான் பூச்சிகளுக்கு நடுவே இரவுகளை கழிக்கும்போது பாரிதாபத்தை அள்ளுகிறார்.

நயன்தாராவிற்கு உதவுபவராக வைபவ் வருகிறார். அளந்து நடித்திருக்கிறார். எந்நேரமும் புகை பிடித்தபடியே வரும் போலீஸ் உயரதிகாரியாக பசுபதி! இவருடைய கதாபாத்திரம் ஒரு வித குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. குண்டு வெடிப்பை கண்டு பிடிக்கும் காவல்துறை அதிகாரியாக இருக்கும்போது அவர் எந்த அளவிற்கு புத்திசாலித்தனத்தை வெளிபடுத்த வேண்டும்? ஆனால் அவர் முட்டாள் போலீஸாகவே வருகிறார். மற்ற அனைவரும் தங்களுடைய கதாபாத்திரதிற்கேற்றபடி நடித்துள்ளனர்.

பலம்

கதை
இரண்டாம் பாதி திரைக்கதை
அற்புதமான நடிப்பை வழங்கிய நயன்தாரா
பின்னணி இசை மற்றும் விறுவிறுப்பான சில காட்சிகள்.

பலவீனம்

படம் நெடுக வரும் தெலுங்கு, ஹிந்தி வசனங்கள்
வாய் அசைவிற்கு பொருந்தாத வசன உச்சரிப்பு
டப்பிங் படம் பார்ப்பது போன்ற உணர்வு
‘கஹானி’ ஏற்படுத்திய அழுத்தம் இதில் இல்லாதது

மொத்தத்தில்.. ஹிந்தி ‘கஹானி’யை பார்க்காதவர்களுக்கு பிடிக்கும் இந்த ‘நீ எங்கே என் அன்பே’

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;