அஜித் பிறந்தநாள் சிறப்பு கட்டுரை

அஜித் பிறந்தநாள் சிறப்பு கட்டுரை

கட்டுரை 30-Apr-2014 5:15 PM IST Top 10 கருத்துக்கள்

தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் ‘தல’ என்றும் அழைக்கப்படுபவர் அஜித்குமார். அவரது சொந்த பெயரைக் கூட மறந்து விடும் அளவுக்கு அஜித்தின் ஒவ்வொரு ரசிகர்களும் அவரை செல்லமாக ‘தல’ என்றே அழைக்கிறார்கள். மே-1 அஜித்தின் பிறந்த நாள்! இந்த வருடம் 43-வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் அஜித் பற்றிய ஒரு சிறிய கட்டுரை இது.

எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்து, சினிமா வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிகளையும் போரட்டத்துடனையே எதிர்கொண்டு, தமிழ்த் திரையுலகில், தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி, அவர்கள் மனதில் நிலைத்திருப்பவர் அஜித். நிறைய தோல்விகளையும், காயங்களையும் மட்டும் சந்தித்தவர். இவர் சினிமாவில் வளர்ந்து வந்த காலத்தில் வெற்றி என்பது அரிதான ஒன்றாகவே இருந்தது.

1971, மே 1-ல் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் சுப்பிரமணியன் - மோகினி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர் அஜித். சென்னையில் படித்து வளர்ந்த இவருக்கு படிப்பில் அவ்வளவு ஆர்வம் இல்லை! அதனால் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டு, பைக் மெக்கானிக்காகவும், ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்திலும் பணிபுரிந்திருக்கிறார்.

பைக், கார் ஓட்டுவதில் இயற்கையிலேயே இருந்த அதீத ஆர்வத்தால், தானாகவே அவற்றை ஓட்ட கற்றுக்கொண்டு, ஓட்டுனர் உரிமத்தையும் பெற்ற அஜித், தொடர்ந்து பைக் பந்தயங்களில் கவனம் செலுத்தி வந்தார்! பைக், கார் பந்தயங்களில் கலந்து கொள்ள பணம் தேவைப்பட்டதால் அதற்காக சிறு, சிறு விளம்பர படங்களில் நடித்தார். அதுவே அவரை சினிமாவிலும் இழுத்து விட்டது.

தனது 20-வது வயதில், ஒப்பந்தமான முதல் படமே இயக்குநரின் மரணத்தால் நின்று போக, அதில் நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டார் அஜித். பின்னர் 21 வயதில், அதாவது 1992-ல் ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதே ஆண்டில், தமிழிலும் செல்வா இயக்கத்தில், ‘அமராவதி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ‘பாச மலர்கள்’, ‘பவித்ரா’ ஆகிய படங்களிலும் விஜய் நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் ஒரு கெஸ்ட் ரோலிலும் நடித்தார்.

அதன் பிறகு வசந்த் இயக்கிய ‘ஆசை’ படத்தில் நடித்த அஜித்துக்கு இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமல்லாமல் பெரும் திருப்புமுனை படமாகவும் அமைந்தது. இப்படம் அஜித்துக்கு நிறைய பெண் ரசிகைகளையும் பெற்றுத் தந்தது. இதற்கிடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் படு காயமடைந்ததால் அவரது சினிமா பயணத்தில் சிறிய ஓய்வு ஏற்பட்டது.

இந்த ஓய்வைத் தொடர்ந்து அஜித் நடித்த படங்கள்தான் ‘வான்மதி’, ‘கல்லூரி வாசல்’, ‘மைனர் மாப்பிள்ளை’, ‘காதல் கோட்டை’ போன்றவை! இதில் அகத்தியன் இயக்கிய ‘காதல் கோட்டை’ சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடியதுடன், சிறந்த காதல் திரைப்படங்களில் ஒன்றாகவும் இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

விக்ரமுடன் ‘உல்லாசம்’ படத்திலும், சத்யராஜுடன் ‘பகைவன்’ படத்திலும் இணைந்து நடித்தார் அஜித். கார்த்திக் நடித்த ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’, பார்த்திபன் நடித்த ‘நீ வருவாய் என’ படங்களிலும், ஷாருக்கான் நடித்த ‘அசோகா’ படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். சமீபத்தில் கூட ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தில் ஸ்ரீதேவி வேண்டுகோளுக்கிணங்க கெஸ்ட் ரோலில் நடித்தார் அஜித்.

சரண் இயக்கிய, ‘காதல் மன்னன்’ அஜித் கேரியரில் பெரிய வெற்றியை பெற்ற படம்! இந்தப் படத்திலிருந்து அஜித்துக்கு பிடித்த இயக்குனர்களில் ஒருவராக மாறினார் சரண். இந்தப் படத்தைத் தொடர்ந்து அஜித்தும், சரணும் மீண்டும் இணைந்த படம் ‘அமர்க்களம்’. இப்படம் அஜித்தின் குடும்ப வாழ்க்கைக்கும் அச்சாரமாக அமைந்துவிட்டது. இந்தப் படத்தில் நடித்தபோதுதான் ஷாலினியை காதலித்து கரம் பிடித்தார் அஜித். இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் நடந்தது.

எஸ்.ஜே.சூர்யா இயக்கிய ‘வாலி’ படம் அஜித்தின் இன்னொரு பரிமாணத்தை காட்டிய படமாகும். இதில் இரண்டு விதமான கேரக்டர்களில் கலக்கினார் அஜித். வசனம் தேவை இல்லை, கண்களாலேயே குரூர நடிப்பை வழங்க முடியும் என உணர்த்தினார். தன்னால் நெகடிவ் ரோலிலும் நடிக்க முடியும் என்பதை ‘வாலி’யில் நிரூபித்தார் அஜித். ‘முகவரி’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ போன்ற படங்கள் அஜித்தின் யதார்த்தமான நடிப்பால் மிகவும் பேசப்பட்டது.

அஜித் கேரியரை ‘தீனா’ படத்துக்கு முன், பின் என இரண்டாக பிரிக்கலாம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘தீனா’ படத்திலிருந்துதான் அஜித் ஆக்ஷன் ஹீரோவாக மாறினார். ‘தல’ என்ற அடைமொழியை ஆரம்பித்ததும் இந்தப் படத்திலிருந்துதான்! தொடர்ந்து ‘சிட்டிசன்’, ‘ரெட்’, ‘வில்லன்’, ‘ஆஞ்சநேயா’, ‘ஜனா’, ‘அட்டகாசம்’ என பல படங்களில் அஜித்துக்கு ஆக்ஷன் அவதாரம்தான். இதில் ‘வில்லன்’ படத்திலும், ‘அட்டகாசம்’ படத்திலும் இரட்டை வேடம்! கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ‘வில்லன்’ வெள்ளி விழா கொண்டாடிய படம்.

தொடர்ந்து ‘ஜீ’, ‘பரமசிவன்’, ‘திருப்பதி’, ‘வரலாறு’, ‘ஆழ்வார்’, ‘கிரீடம்’ என அடுத்தடுத்து நடித்தார் அஜித். இதில் ‘வரலாறு’ படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் மூன்று கேரக்டர்களில் நடித்தார் அஜித். இப்படத்தில் பெண்களுக்கே உரிய நளினத்துடன் அவர் ஆடிய பரதநாட்டியம் மிகவும் பேசப்பட்டது. அதோடு தமிழக அரசின் 2006ஆம் ஆண்டுக்கான எம்.ஜி.ஆர் விருதையும் பெற்றது ‘வரலாறு’ திரைப்படம். இதன் பிறகு 2007-ல் ரஜினிகாந்தின் சூப்பர்ஹிட் படமான ‘பில்லா’ ரீ-மேக்கில் நடித்தார் அஜித். ரஜினி நடித்த ‘பில்லா’ போலவே இப்படமும் அமோக வெற்றி பெற்றது. இப்படம் மூலம் ரஜினிக்கு ப்ரியப்பட்ட நடிகராகவும் மாறினார் அஜித். இவரது 50-வது படமாக ‘மங்காத்தா’ அமைந்தது. 50-வது படம் என்ற பாகுபாடு, இமேஜ் எதுவும் பார்க்காமல் இதில் மீண்டும் ஒரு நெகடிவ் ரோலில் நடித்து அசத்தினார் அஜித். அர்ஜுன் அவரோடு இணைந்து நடித்திருந்தார்.

தன் ரசிகர் மன்றங்களை அஜித் கலைத்த பிறகும்கூட அவருடைய ரசிகர் பட்டாளம் ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின்போதும் தியேட்டர்களை திணற வைத்து வருகிறது. ரசிகர் மன்றங்களையும் தாண்டி எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மிகப்பெரிய ரசிகர் வட்டம் அஜித்துக்கு உண்டு என்பதை எல்லோரும் அறிவர்.

சினிமா தவிர தனது இளமை பருவத்திலிருந்தே பைக் ரேஸ், கார் ரேஸில் ஆர்வம் கொண்டவர் அஜித். மும்பை, டில்லி, சென்னையில் நடந்த பல போட்டிகளிலும், சர்வதேச அரங்கில் நடந்த பல ரேஸ்களிலும் பங்கேற்ற இந்தியர்களில் குறிப்பிடத்தக்கவர் அஜித். ஜெர்மனி, மலேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடந்த போட்டிகளிலும், 2003-ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசியா பி.எம்.டபிள்யூ சாம்பியன்ஷிப் போட்டியிலும் கலந்துகொண்டுள்ளார் அஜித். 2010ஆம் ஆண்டு ஃபார்முலா சாம்பியன்ஷிப் பந்தயங்களில் கலந்துகொண்ட மூன்று இந்தியர்களுள் அஜித்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு விமான ஓட்டவும் பயிற்சி பெற்று, குறிப்பிட்ட நேரம் வரை வானில் பறந்து விமான ஓட்டிக்கான உரிமத்தையும் முறையாக பெற்றுள்ள ஒரே நடிகரும் அஜித் மட்டுமே!

வெற்றியோ, தோல்வியோ எதைப்பற்றியும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அடுத்த படத்துக்கு அதே உற்சாகத்துடன் சென்று விடுவார் தல! இதே வழியைத்தான் அவரது ரசிகர்களும் பின்பற்றுகிறார்கள். ரஜினி படங்களுக்கு அடுத்த படியாக பெரிய ஓபனிங் இருக்கும் நடிகர்களில் அஜித்தும் ஒருவர்.

கஷ்டத்தில் இருப்பவர்களுக்கும், புதியவர்களுக்குமே வாய்ப்புக் கொடுப்பதில் அஜித் முன்னோடி! இன்று முன்னணியில் இருக்கும் பல இயக்குனர்களுக்கு முதல் வாய்ப்பைக் கொடுத்தவர் அஜித்தான். சரண், எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ், ‘முகவரி’ துரை, விஜய் என நிறைய பேரை இயக்குனராக உருவாக்கியவர் இவர்தான்! ‘வீரம்’ படத்தில், ''நம்ம கூட இருக்கிறவங்களை நாம பாத்துக்கிட்டா கடவுள் நம்மளை பாத்துக்கிடுவார்'' என அஜித் பேசும் வசனத்துக்கு பொருத்தமான நபர் அஜித்தான்! ‘வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது’ என்று நினைப்பவர் அஜித்.

‘எனக்கு கட்-அவுட் வைப்பதை விட உன்னுடைய வீட்டுக்கு உழைப்பதையே நான் விரும்புகிறேன்’ என்று ரசிகர்களிடம் கூறுபவர். தான் படிக்காத கல்வியை, தன் ரசிகர்களை படிக்க சொல்கிறவர். தனது ரசிகர்களை தன்னுடைய சுயநலத்துக்காக என்றுமே பயன்படுத்தாதவர்.

மொத்தத்தில்... ‘தல’ போல வருமா...!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;