மீண்டும் கலக்க வரும் சி.வி.குமார்!

மீண்டும் கலக்க வரும் சி.வி.குமார்!

செய்திகள் 29-Apr-2014 12:41 PM IST Inian கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் குறும்பட இயக்குனர்கள் ஆக்கிரமிக்க காரணமானவர் ‘திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் சி.வி.குமார். ‘அட்டகத்தி’, ‘பீட்சா’, ‘சூதுகவ்வும்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களோடு வித்தியாசமான படங்களையும் தயாரித்து வருபவர். இவர் அடுத்ததாக ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘முண்டாசுபட்டி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். அமானுஷ்யங்கள் கலந்த பிரமாதமான ஒரு காமெடிப் படமாக உருவாகியுள்ளது. 9 நிமிடங்களை கொண்ட குறும்படமாக வந்து ரசிகர்களின் பாராட்டை பெற்ற இப்படம் 2.30 மணி நேரம் கொண்ட முழு நீளப் படமாக விரைவில் வரவிருக்கிறது. நந்திதா, விஷ்ணுவிஷால் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் மற்றொரு குறும்பட இயக்குனர் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகிறார்.

இப்படத்தின் பாடல்களை நேற்று சூரியன் பண்பலையில் வெளியிடப்பட்டது. அதற்கு பின் ‘முண்டாசுபட்டி’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது படத்தின் இயக்குனர் ராம்குமார் பேசியபோது, ‘‘1940 மற்றும் 1980-களின் பின்னணியில் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சில கிராமங்களில் ஃபோட்டோ எடுத்துக்கொள்ளவே பயப்படுவார்கள். அதற்கு காரணம் ஃபோட்டோ எடுத்தால் ஆயுள் குறைவு என்ற எண்ணம் தான்! அதை ஒரு கருவாகக்கொண்டு கற்பனையான ஒரு கிராமத்தை உருவாக்கியுள்ளோம். அந்த ஊரில் உள்ளவர்கள் அனைவருமே முண்டாசு கட்டிக்கொண்டுதான் இருப்பார்கள். அந்த ஊருக்கு விஷ்ணுவிஷாலும், காளியும் வருகிறார்கள். அவர்களால் ஏற்படும் ஒரு சம்பவத்தை நகைச்சுவை கலந்த திரைக்கதையாக உருவாக்கியுள்ளோம். சி.வி.குமார் கொடுத்த ஊக்கம் எனக்கு பெரிய உந்துதலாக இருந்தது’’ என்றார்.

அதன் பிறகு விஷ்ணுவிஷால் பேசும்போது, ‘‘முண்டாசுபட்டி குறும்படத்தை பற்றி பல நண்பர்கள் பாராட்டியதுடன் என்னை பார்க்கவும் சொன்னார்கள். நான் பார்ப்பதற்காக யு-ட்யூபில் தேடினேன் கிடைக்கவில்லை. ஒரு நாள் சி.வி.குமாரை சந்தித்தபோது அவருடைய வித்தியாசமான படங்களை பாராட்டினேன். மேலும் அது போன்ற படங்களில் நடிக்கவும் ஆசைப்படுகிறேன் என்று அவரிடம் கூறிய சில நாட்கள் கழித்து இந்த வாய்ப்பு கிடைத்தது. ‘முண்டாசுபட்டி’ குறும்படத்தை போட்டுக் காட்டியதுடன் அந்தப் படத்திலேயே என்னை நடிக்கவும் வைத்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஃபோட்டோ எடுப்பதற்காக முண்டாசுபட்டி கிராமத்திற்கு செல்லும் ஒருவன் படும்பாடு தான் இப்படம். படம் முழுக்க ஜாலியாக இருக்கும். ஆரம்பத்திலிருந்து படம் முடியும் வரை சிரித்துகொண்டே இருக்கலாம்’’ என்றார்.

இளம் திறமையாளர்களை கண்டு, அவர்களை திரையுலகிற்கு அறிமுகபடுத்தி வரும் சி.வி.குமாரின் ஆறாவது தயாரிப்பு ‘முண்டாசுபட்டி’. இப்படத்தின் மூலம் அவர் மீண்டும் கலக்கவுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கதாநாயகன் - உன் நெனப்பு பாடல் வீடியோ


;