என்னமோ நடக்குது - விமர்சனம்

என்னதான் நடக்குதுன்னு பார்த்துட்டு வாங்க!

விமர்சனம் 26-Apr-2014 1:20 PM IST Inian கருத்துக்கள்

தயாரிப்பு : ட்ரிபிள் வி ரெக்கார்ட்ஸ்
இயக்கம் : ராஜபாண்டி
நடிகர்கள் : விஜய் வசந்த், மஹிமா, பிரபு, ரகுமான்
ஒளிப்பதிவு : ஏ.வெங்கடேஷ்
இசை : பிரேம்ஜி அமரன்
எடிட்டிங் : பிரவீன், ஸ்ரீகாந்த்

‘சென்னை - 600028’, ‘சரோஜா’, ‘நண்பன்’ ஆகிய படங்களில் நடித்த விஜய் வசந்த் நடித்திருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர்தான் ‘என்னமோ நடக்குது’. அவருடன் பிரபு குத்துச்சண்டை வீரராகவும், ரகுமான் அரசியல்வாதியாகவும் இணைந்து நடித்துள்ளனர். தனது தோற்றத்துகேற்றவாறு ஒரு கதையை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் விஜய் வசந்த்!

கதைக்களம்
கோடிக்கணக்கில் வங்கியிலிருக்கும் மக்கள் பணத்தை, அரசியல்வாதி ரகுமான் தலைமையில் முறைகேடாக வட்டிக்கு விட்டு வருகிறது ஒரு கும்பல்! இக்கட்டான ஒரு சூழ்நிலையில், தன்னுடைய காதலி மஹிமாவின் பணத் தேவைக்காக அந்த கும்பலில் வேலைக்குச் சேர்கிறார் விஜய் வசந்த். 10 கோடி ரூபாயை வங்கியிலிருந்து விஜய் வசந்த் எடுத்து வரும்போது அதை வேறொரு கும்பல் கொள்ளையடிக்கிறது. அவர்கள் யார்? எதற்காக அந்தப் பணத்தை கொள்ளையடித்தார்கள்? என்பதை விறு விறுப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராஜபாண்டி.

படம் பற்றிய அலசல்
நாயகன் விஜய் வசந்த்தை ஒரு கும்பல் புழுதியில் போட்டு புரட்டி எடுக்கும் அந்த ஆரம்பக் காட்சியிலேயே சஸ்பென்ஸ் நம்மை தொற்றிக்கொள்கிறது. அடுத்தடுத்த காட்சிகளிலும் எதிர்பாராத திருப்பங்கள். கொள்ளையடிப்பதில் பலவிதம், அதில் ஒரு புதிய விதமாக வங்கியிலிருக்கும் மக்கள் பணத்தை கொள்ளையடித்து அதை வட்டிக்கு விடும் கும்பல் பரபரப்பாக இயங்கும் விதத்தை நம் கண்முன்னே நிறுத்தியுள்ள இயக்குனரை பாராட்டலாம். படத்தின் கதைக்களம் புதிது.

வழக்கமான நாயகன், நாயகிக்கான காதல் காட்சிகள் அலுப்பை ஏற்படுத்துகிறது. சரண்யா பேசும் சென்னை தமிழ் அந்நியபட்டு நிற்கிறது. விஜய் வசந்த் கதாபாத்திரத்துடன் ஒன்றியுள்ளார். பிரேம்ஜி அமரனின் இசை பரவாயில்லை!

நடிகர்களின் பங்களிப்பு
தனக்கு பொருத்தமான, எந்தவித அலட்டலும் இல்லாத கதாபாத்திரத்தை தேர்வு செய்து அதை திறம்பட நடித்து வெற்றி பெற்றிருக்கிறார் விஜய் வசந்த். அவருடைய பாடி லாங்குவேஜ், முடி, உடை என நிறைய மாற்றம். ஆரம்ப நிலையில் இருக்கும் அவரது கேரியருக்கு ஏற்றவாறு கதையையும், அதில் உள்ள ஆக்‌ஷனையும் தேர்ந்தெடுத்தது பெரிய ப்ளஸ்.

வழக்கமாக அம்மா கேரக்டர்களிலேயே நடித்து வரும் சரண்யா பொன்வண்ணனுக்கு இந்த படத்திலும் அம்மா கேரக்டர் தான். இருந்தாலும் இதற்கு முன் பார்த்திராத சரண்யா. சென்னை குடிசைப் பகுதியில் வாழும் ஒரு பெண்ணாக நடித்து, தான் ஒரு திறமையான நடிகை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.

சுகன்யா, வில்லனாக வரும் ரகுமான், பிரபு படத்தின் சர்ப்ரைஸ் பேக்கேஜ்! தம்பி ராமையா, ‘கும்கி’ அஷ்வின் ஆகியோரும் படம் முழுக்க வந்து ரசிக்க வைக்கிறார்கள்.

பலம்
கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு

பலவீனம்
சரண்யா பேசும் சென்னை தமிழ்
இடையிடையே வரும் பாடல்
வழக்கமான காதல் காட்சிகள்

மொத்தத்தில்..
ஒரு சஸ்பென்ஸ், த்ரில்லர் கதையை சுவாரஸ்யம் குறையாமல் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜபாண்டி. இரண்டு மணிநேர படத்தில் பாடல்கள் இடையிடையே வந்தாலும் அலுப்பு தட்டாத வண்ணம் திரைக்கதையை அமைத்து ரசிகனை நிமிர்ந்து உட்கார வைக்கிறார். முதல் படத்திலேயே சபாஷ் வாங்குகிறார் இயக்குனர்.

ஒரு வரி பஞ்ச் : என்னதான் நடக்குதுன்னு பார்த்துட்டு வாங்க!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;