வாயை மூடி பேசவும் - விமர்சனம்

ரசிக்கக் கூடிய மௌன மொழி!

விமர்சனம் 25-Apr-2014 5:08 PM IST Chandru கருத்துக்கள்

தயாரிப்பு : ரேடியன்ஸ் மீடியா, ஒய்நாட் ஸ்டுடியோஸ்
இயக்கம் : பாலாஜி மோகன்
நடிகர்கள் : துல்கர் சல்மான், நஸ்ரியா நசீம், மதுபாலா, பாண்டியராஜன்
ஒளிப்பதிவு : சௌந்தர் ராஜன்
இசை : சீன் ரோல்டன்
எடிட்டிங் : அபினவ் சுந்தர்

குறும்படத்திலிருந்து பெரிய திரைக்கு வந்து ஜெயித்தவர்களின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பமாகியுள்ளது. ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற தனது குறும்படத்தையே சினிமாவாக மாற்றி ஜெயித்தவர் இயக்குனர் பாலாஜி மோகன். அவரின் இரண்டாவது படம் ‘வாயை மூடி பேசவும்’ தற்போது திரைக்கு வந்திருக்கிறது. படம் எந்தளவு பேசப்படும்?

கதைக்களம்
‘நாம என்ன சொல்ல வர்றோம்ங்கிறதை பேசிதான் மத்தவங்களுக்கு புரிய வைக்கணும்ங்கிறதில்லை... பேசாமலேயே புரிய வைக்க முடியும்!’ என்ற கருத்தை அழுத்தமாக சொல்ல வந்திருக்கும் படமே ‘வாயை மூடி பேசவும்’.

ஊட்டியில் உள்ள பனிமலை என்ற மலைக்கிராமத்தில் வித்தியாசமான நோய் ஒன்று பரவி, அதனால் பலரும் குரல்களை இழக்கும் அபாயநிலை வருகிறது. இதனால், அந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை ஊரைவிட்டு யாரும் வெளியில் செல்லவும் கூடாது, யாரும் யாருடனும் பேசவும் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் எந்த விஷயமாக இருந்தாலும் தன் மனதில் பட்டதை ‘பளிச்’சென்று பேசிவிடும் நாயகன் துல்கர் சல்மான், காதலனுக்காக தனக்கு பிடிக்காத விஷயங்களையும் எதுவும் பேசாமல் ஏற்றுக்கொள்ளும் நாயகி நஸ்ரியா நசீம், எப்போது பேசினாலும் எதையாவது உளறி வைத்து அதனால் பிரச்சனைகளை சந்திக்கும் அரசியல்வாதி பாண்டியராஜன், குடும்பத்துக்காக தன் எழுத்துத் திறமையை மறைத்து வைக்கும் மதுபாலா, படிப்பைவிட தனக்கு ஓவியத்தில்தான் ஆர்வம் என்பதை தன் அம்மாவிடம் சொல்லாத மதுபாலாவின் மகன், இவர்களோடு இன்னும் சில காமெடியான கேரக்டர்களும் எப்படி சமாளிக்கின்றன என்பதே ‘வாயை மூடி பேசவும்’ படத்தின் கதை!

படம் பற்றிய அலசல்
முதல் படத்தில் ஜெயித்தவர்கள், பெரும்பாலும் இரண்டாவது படத்தின்போது கொஞ்சம் தடுமாறுவார்கள். ஆனால், முதல் படத்தைவிட தனது இரண்டாவது படத்தில் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டு அழுத்தமாக பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன். ‘சூதுகவ்வும்’ படத்திற்குப் பிறகு அதேபோன்ற பாணியில் நிறைய ‘பிளாக் ஹியூமர்’ த்ரில்லர் படங்கள் தமிழில் வந்துவிட்டன. ஆனால், இந்த ‘வாயை மூடி பேசவும்’ படத்தை தமிழின் முதல் ‘ரொமான்டிக் பிளாக் ஹியூமர்’ என தாராளமாக சொல்லலாம். இப்படத்தின் ‘கான்செப்ட்’டை லாஜிக்கலாக ஏற்றுக்கொள்வது கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், படத்தில் சொல்ல வரும் விஷயங்களும், அதற்கான விஷுவல்களும் அற்புதம்... வெல்டன் பாலாஜி!

‘இவர்லாம் கொஞ்ச பேசாம இருந்தா எப்படி இருக்கும்’ என ஆர்.ஜே. பாலாஜியைப் பார்த்து பொறுமித் தள்ளுபவர்களுக்கு படத்தின் முதல் காட்சியிலேயே சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. முதல் பாதி ஆங்காங்கே காமெடியோடும், கேரக்டர்களின் அறிமுகங்களோடும் ஸ்லோவாக பயணித்து, ‘இரண்டாம் பாதி எப்படி இருக்கும்?’ என்ற யோசனையோடு ‘பாப்கான்’ சாப்பிட வைத்திருக்கிறார்கள். ஆனால், சொன்னால் நம்ப மாட்டீர்கள்...! இரண்டாம் பாதியில் மொத்தமே 20 டயலாக்குகள் மட்டுமே! அதெப்படி டயலாக்கே இல்லாமல் படம் பார்க்க முடியும், போரடிக்காதா? என்று கேட்பவர்கள்... உடனடியாக டிக்கெட்டை முன்பதிவு செய்யுங்கள். பேச்சை குறைத்து செயலில் செய்து காட்டியிருக்கிறார்கள்... குறிப்பாக ‘சார்லி சாப்ளின்’ காமெடியை ரசிப்பவர்களுக்கு இப்படம் ரொம்பவும் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

அப்படியென்றால் வெறும் காமெடி மட்டும்தானா...? என அவசரப்பட்டு முடிவு செய்துவிட வேண்டாம்... படம் நெடுக நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சிகளும், குதூகலிக்க வைக்கும் காதல் காட்சிகளும் ரசிகர்களுக்கு ‘செம’ சர்ப்ரைஸ் தரும்! வித்தியாசமான படம் பார்க்க விரும்புபவர்கள் யோசிக்காமல் உடனே தியேட்டருக்கு நடையைக் கட்டுங்கள்!


நடிகர்களின் பங்களிப்பு
மம்முட்டியின் மகன் துல்கருக்கு தமிழில் இது முதல் படம். கேரக்டருக்கு ஏற்ற துடிப்பான நடிப்பு... வெல்கம் துல்கர்! நஸ்ரியாவுக்கு தமிழில் ஏற்கெனவே மூன்று படங்கள் வெளிவந்திருந்தாலும், இப்படத்தில்தான் நடிப்பதற்கு ஏற்ற நல்ல கேரக்டர் அமைந்திருக்கிறது. அவரும் சிறப்பாகவே செய்திருக்கிறார். திருமணத்திற்குப் பின்பு நடிப்பதை ஒத்திப்போடும் திட்டத்தை உங்கள் ரசிகர்களுக்காக மறுபரிசீலனை செய்யலாமே நஸ்ரியா? வெல்கம்பேக் மதுபாலா.... சின்ன கேரக்டராக இருந்தாலும் முக பாவனைகளில் அனுபவம் பேசுகிறது.

இவர்களைத் தவிர துல்கரின் நண்பர், நஸ்ரியாவின் காதலர், நடிகராக வரும் ஜான் விஜய், அரசியல்வாதி பாண்டியராஜன், ‘மட்டை ரவி’யாக வரும் ரோபோ சங்கர், கல்நெஞ்சக்காரராக வரும் வினுசக்கரவர்த்தி, அநாதை இல்லத்தின் தலைவி என படத்தில் ஏகப்பட்ட கேரக்டர்கள். ஆனால், அத்தனை கதாபாத்திரங்கள் மூலமும் ஒவ்வொரு செய்தியை மறைமுகமாக ரசிகர்களுக்கு சொல்லியிருக்கிறார்கள். அனைவரும் தங்கள் கேரக்டரை உணர்ந்து சரியான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

பலம்
1. வித்தியாசமான கதையும், அதை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்லும் திரைக்கதையும், நடிகர்களின் பங்களிப்பும்.
2. பாஸிட்டிவ் க்ளைமேக்ஸ்
3. காமெடிக் காட்சிகள் பெரிய அளவில் கைகொடுத்திருப்பது.
4. ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங்.

பலவீனம்
1. கொஞ்சம் மெதுவாகவும், கதைக்குள் செல்லாமல் பயணிப்பதுபோன்ற உணர்வைத் தரும் முதல்பாதியின் சில காட்சிகள்.
2. ‘பிரைம் டிவி நியூஸ்’ என்ற பெயரில் இயக்குனர் பாலாஜி மோகன் அடிக்கடி திரையில் தோன்றுவது.

மொத்தத்தில்
காதலையும், சென்டிமென்டையும், காமெடியையும் இப்படியும் காட்ட முடியும் என புதுவித முயற்சியில் தைரியமாக இறங்கியதற்காக ‘வாயை மூடி பேசவும்’ படத்தை தாராளமாக இருகரம் நீட்டி வரவேற்கலாம்.

ஒருவரி பஞ்ச் : ரசிக்கக் கூடிய மௌன மொழி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரிச்சி - டீசர்


;