தெனாலிராமன்

போனது போகட்டும்.... டும்!

விமர்சனம் 18-Apr-2014 2:20 PM IST Chandru கருத்துக்கள்

தயாரிப்பு : ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் : யுவராஜ் தயாளன்
நடிகர்கள் : வடிவேலு, மீனாட்சி தீக்ஷித், ராதாரவி, மனோபாலா மற்றும் பலர்
ஒளிப்பதிவு : ராம்நாத் ஷெட்டி
இசை : டி.இமான்
எடிட்டிங் : ராஜா முகமது

எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் வடிவேலுவின் காமெடியை ஒரு தரம் பார்த்தால் போதும்... அத்தனையையும் மறந்து மனம்விட்டுச் சிரித்து அந்த டென்ஷனைப் போக்கிவிடலாம். அந்த பெருமைக்குச் சொந்தக்காரரான வடிவேலுவின் படம் கடந்த மூன்றாண்டுகளாக வெளிவராதது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய இழப்புதான். வடிவேலு இல்லாத இந்த காலகட்டத்தில் நகைச்சுவை சேனல்கள் மூலமாகவும், இணையதளங்கள் வழியாகவும் அவர் நம்மை தினமும் மகிழ்வித்துக் கொண்டுதான் இருந்தார். ஒருவழியாக.... இப்போது அவர் நடிப்பில் ‘தெனாலிராமன்’ படம் திரைக்கு வந்திருக்கிறது. வடிவேலு விட்டுச்சென்ற இடம் இன்னமும் காலியாகத்தான் இருக்கிறது. ‘தெனாலிராமன்’ படம் மூலம் மீண்டும் தன் இடத்தைப் பிடித்திருக்கிறாரா வடிவேலு?

கதைக்களம்
வெளியுலகம் தெரியாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் மன்னனுக்கு அனைத்தையும் புரிய வைப்பவனே இந்த ‘தெனாலிராமன்’.
விகட நகரத்தை ஆளும் மன்னனின் (வடிவ«லு) அரசவையில் இருக்கும் 9 ‘நவரத்தின மந்திரிகள்’ மற்றும் ராஜதந்திரி (ராதாரவி) ஆகியோர் மக்கள் நலத்திட்டப் பணிகளை கவனித்து வருகின்றனர். மன்னனை ஏமாற்றி, சீன வியாபாரிகளை விகட நகரத்திற்கு வியாபாரம் செய்ய அழைத்து வருவதற்கு 9 மந்திரிகளுடன் இணைந்து திட்டம் தீட்டுகிறார் ராதாரவி. அதில் ஒருவர் மன்னனுக்கு துரோகம் செய்ய மனமில்லாமல் எதிர்ப்புத் தெரிவிக்க அவரை கொலை செய்து இயற்கை மரணம்போல் காட்டுகிறார்கள். அரசவையில் காலியாகும் அந்த மந்திரிப் பதவியை தன் சமயோஜித புத்திக்கூர்மையால் கைப்பற்றுகிறார் தெனாலிராமன் (வடிவேலு). உண்மையில் தெனாலிராமன் அரசவையில் இடம்பிடித்தது ஆட்சிபுரிய அல்ல... மக்களுக்கு நன்மை செய்யாமல் இருக்கும் மன்னனை கொலை செய்வதற்கு மாறுவேடத்தில் வந்த போராளி. ஆனால், அரண்மனைக்குள் நுழைந்தபிறகுதான் தெரிகிறது.... இத்தனைக்கும் காரணம் மன்னன் அல்ல, அந்த மந்திரிகள்தான் என்று! இதன் பிறகு ‘தெனாலிராமன்’ என்ன செய்தார் என்பது மீதிப்படம்!

படம் பற்றிய அலசல்
வடிவேலுவுக்கு இரட்டை வேடக் கதையை அமைத்து, ‘தெனாலிராமன்’ படத்தின் மூலம் தனது இரண்டாவது படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் யுவராஜ் தயாளன். ஒரு இயக்குனருக்கு, மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமும், வடிவேலு என்ற மாபெரும் கலைஞனும் தனது இரண்டாவது படத்திற்கே கிடைத்திருப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாரா என்பதுதான் முக்கியம்.

திரையில் வடிவேலுவின் முகம் தெரிந்தாலே சிரிக்கத் தொடங்கிவிடும் அளவுக்கு அவரின் காமெடிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர்களை மறந்துவிட்டு, தனக்கு கால்ஷீட் கொடுத்த வடிவேலுவை திருப்திப்படுத்துவதற்காகவே திரைக்கதை அமைத்திருக்கிறார் யுவராஜ். படம் முழுக்க வடிவேலுவே வியாபித்திருக்கிறார்... ஆனால் வயிறு குலுங்க நம்மை சிரிக்க வைக்கவில்லை. அதற்குப் பதிலாக வசனங்களாக பேசித் தள்ளி நம்மை சிந்திக்க வைக்க முயன்றிருக்கிறார் வடிவேலு. சரி, அதிலாவது புதுமையாக எதையாவது செய்திருந்தால் தாராளமாக ஏற்றுக் கொள்ளலாம். ஏற்கெனவே வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்து வெற்றிபெற்ற ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தின் கதையை அப்படியே கொஞ்சம் மாற்றி அமைத்து ‘தெனாலிராமன்’ ஆக்கியிருக்கிறார் இயக்குனர்.

தெனாலிராமனின் புத்திக்கூர்மையைக் காட்டுவதற்காக அமைக்கப்பட்ட சில காட்சிகளும், மன்னன் வடிவேலுவின் ஒருசில காமெடிக் காட்சிகள் மட்டுமே ரசிக்கும்படியாக உள்ளது. மிகப்பெரிய ஒரு அரண்மனையையும், ஒரு கடை வீதியையும் மட்டுமே சுற்றிச்சுற்றிக் காட்டுகிறார்கள். மொத்தத்தில் டிரைலரில் நாம் எதைப் பார்த்தோமோ அதுவே படம் முழுவதும் வருகிறது. வேறு ஒன்றும் புதிதாக இல்லை!


நடிகர்களின் பங்களிப்பு
முழுக்க முழுக்க இப்படத்தில் நடித்திருப்பது வடிவேலு மட்டுமே. மன்னனாகவும், தெனாலிராமனாகவும் மனிதர் தன் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார். அவரின் பழைய உடல்மொழியும், வசன உச்சரிப்பும் இன்னமும் அப்படியே இருப்பது ஒரு நல்ல கலைஞனுக்கு சரியான சான்று. ஆனால், அவருக்கேற்ற நகைச்சுவைக் காட்சிகள் வைக்காதததுதான் சோகம். வடிவேலுவைத் தவிர, மற்றவர்கள் அனைவருமே இப்படத்தில் ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்துபோகிறார்கள். கதாநாயகி மீனாட்சி தீக்ஷித் ஒரே ஒரு பாடலில் வடிவேலுவுடன் ஆடிப்பாடியிருக்கிறார். ராதாரவி, மனோபாலா உள்ளிட்ட பல நட்சத்திரங்களுக்கும் இப்படத்தில் பெரிய வேலை ஒன்றும் இல்லை.

பலம்
1. வடிவேலு... வடிவேலு... வடிவேலு.
2. மன்னர் காலத்து கதைக்களத்தை நம் கண் முன் நிறுத்துவதற்காக போடப்பட்ட அரங்குகளும், உடை, அலங்காரங்களும்.
3. ஒளிப்பதிவும், கிராபிக்ஸ் வேலைகளும்.
4. பின்னணி இசை.

பலவீனம்
1. பழைய படத்தை ஞாபகப்படுத்தும் கதையும், சுவாரஸ்யமில்லாத திரைக்கதையும் இப்படத்தின் பெரிய பலவீனம்.
2. பாடல்கள் படத்தின் ஓட்டத்திற்கு பெரிய தடையாக அமைந்திருப்பது.
3. ‘சப்’பென்று முடிக்கப்பட்ட க்ளைமேக்ஸ்!

மொத்தத்தில்
காமெடி நடிகர்களெல்லாம் ஹீரோவாக மாறிக் கொண்டிருக்கும் தமிழ்சினிமாவின் மோசமான சூழ்நிலையில், வடிவேலு வந்துதான் அந்தக்குறையைப் போக்குவார் எனக் காத்திருந்தோம். ஆனால், அவரும் அதே வழியில் பயணித்திருப்பதை என்னவென்று சொல்வது? சரி... ‘காமெடியன்’ வடிவேலுவிட்ட இடத்தை அதே ‘காமெடியன்’ வடிவேலுவால்தான் நிரப்ப முடியும்! எனவே காத்திருப்பதில் தவறில்லை!

ஒருவரி பஞ்ச் : போனது போகட்டும்.... டும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - நீண்ட நான் பாடல்


;