டமால் டுமீல் - விமர்சனம்

டமால் டுமீல்.. நோ சௌன்ட்!

விமர்சனம் 18-Apr-2014 10:51 AM IST Inian கருத்துக்கள்

தயாரிப்பு : கேமியோ ஃபிலிம்ஸ் இந்தியா
இயக்கம் : ஸ்ரீ
நடிகர்கள் : வைபவ், ரம்யா நம்பீசன், கோட்டா சீனிவாச ராவ், சாயாஜி ஷிண்டே
ஒளிப்பதிவு : எட்வின் சகாய்
இசை : தமன்
எடிட்டிங் : பரமேஷ் க்ரிஷ்ணா

பிளாக் காமெடி என்றழைக்கப்படும் படங்களின் வரிசையில் வெளியான காமெடி த்ரில்லர் படம். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வந்திருக்கும் இப்படம் ரசிகர்களை திருப்தி படுத்தியதா என்பதை பார்ப்போம்.

கதைக்களம்
தவறான வழியில் ஒருவனுக்கு அதிக அளவில் பணம் கிடைத்தால் என்ன நடக்கும் என்பதை நகைச்சுவையுடன் சொல்ல வந்திருக்கும் படம் தான் ‘டமால் டுமீல்’.
சங்கம் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் வைபவிற்கு திடீரென வேலை போகிறது. தங்கையின் திருமணம், தன்னுடைய திருமணம் மற்றும் அடுத்த வேலை கிடைக்கும்வரை என்ன செய்வது என்று தவித்து கொண்டிருக்கும்போது வைபவிற்கு அடிக்கிறது ஜாக்பாட்! வீட்டு வாசலிலேயே கத்தை கத்தையாக ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள்! சுக்கிரன் கொடுத்த சூப்பர் ஆஃபராக நினைத்து அதை யாருக்கும் தெரியாமல் அப்படியே லபக்கி விடுகிறார்!

இனி நம் வாழ்வில் சுக்கிர திசைதான் என வைபவ் எண்ணும்போது சனி திசை ஆராம்பமாகிறது. ஒரு ‘சனி’க்கே தாறுமாறாகும் வாழ்க்கையில் இரண்டு சனி பகவான்கள் வருகிறார்கள்… கோட்டாசீனிவாசராவும், சாயாஜிஷிண்டேவும்! அடுக்கடுக்காய் கொலைகள்! நிம்மதியை தொலைத்து, தலைசுத்தி நிற்கிறார் வைபவ்! பணத்தை அவரால் அனுபவிக்க முடிந்ததா? தங்கையின் திருமணம், அத்துடன் வைபவ் காதல் என்ன ஆயிற்று என்பதை சொல்லியிருக்கிறார் ஷங்கரின் உதவியாளரும், இப்படத்தின் அறிமுக இயக்குனரருமான ஸ்ரீ.

படம் பற்றிய அலசல்
படம் ஆரம்பித்தவுடனே இப்போதே ஸ்பீடு ஆரம்பித்துவிடும் என்று நம்மை நாமே சமாதான படுத்திகொண்டு படத்தை பார்த்தாலும் படம் மெல்லவே நகர்கிறது. கோட்டாசீனிவாசராவ் வந்தவுடனே ஒரு வேகம் கிடைக்கிறது. அந்த வேகம் சட்டென முடிய மறுபடியும் ஒரு சோர்வு.

சுவாரஸ்யமற்ற காட்சிகளாகவும், அழுத்தமற்ற திரைக்கதையாலும் மூச்சு திணறி நிற்கிறது திரைக்கதை! காமெடி என நினைத்து உருவாக்கப்பட்ட காட்சிகளால் படத்திற்கு எந்த பயனும் இல்லை. படத்தின் பெரும்பாலான காட்சிகள் நம்பத் தகுந்தவைகளாக இல்லை! லாஜிக்கை பற்றி கவலையே படாமல் படம் பிடித்திருக்கிறார்கள்! இசையில், தமன் முயன்றவரை முயற்சி பண்ணியுள்ளார்! ‘சகா சகா’ பாடல் மட்டுமே பளிச்.

நடிகர்களின் பங்களிப்பு
வைபவ் வேலை இழக்கும்போதும், வீட்டு வாசலில் பணம் கத்தை, கத்தையாக கிடைக்கும்போதும் அவர் முகத்தில் காணப்படவேண்டிய எக்ஸ்பிரஷன்ஸ் டோட்டலா மிஸ்ஸிங்! படமே அவரை நம்பி பயணிக்கும்போது அதிக சிரத்தை எடுத்திருக்கவேண்டும். ரம்யா நம்பீசனுக்கு மொத்தமே 6 அல்லது 7 சீன்கள் மட்டுமே! அவரை பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. சாயாஜிஷிண்டே, கோட்டாசீனிவாசராவ் போன்றவர்களும் வந்து போகிறார்கள்.

பலம்
ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங், ‘சகா சகா’ பாடல் காட்சி

பலவீனம்
மெதுவாக நகரும் அழுத்தமற்ற திரைக்கதை, சுவாரஸ்யமற்ற காட்சிகள், காமெடிக் காட்சிகள்

மொத்தத்தில்
நல்ல கதையாக தோன்றினாலும் திரைக்கதையிலும், காட்சி அமைப்புகளிலும் அதிக கவனம் செலுத்தியிருந்தால் வெற்றிப்படமாக அமைந்திருக்கும்.

ஒருவரி பஞ்ச் : டமால் டுமீல்.. நோ சௌன்ட்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

R K நகர் - டீசர்


;