வடிவேலுவுக்கு வந்த சோதனை!

வடிவேலுவுக்கு வந்த சோதனை!

செய்திகள் 16-Apr-2014 10:50 AM IST Chandru கருத்துக்கள்

கிட்டத்தட்ட மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் தங்கள் நகைச்சுவை அரசனின் நடிப்பில் ஒரு படம் வெளிவரவிருக்கிறது என வடிவேலுவின் ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்துக் கொண்டிருக்க, அதற்கும் இப்போது சிக்கல் வந்திருக்கிறது. ஏஜிஎஸ் என்டர்டெயின்ட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் ‘தெனாலிராமன்’ படம் வரும் வெள்ளிக்கிழமை உலகமெங்கும் ரிலீஸாகவிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு அனைத்து தெலுங்கு கூட்டமைப்பினர் கருத்துத் தெரிவித்து வந்தனர்.

அதாவது, இப்படத்தில் கிருஷ்ணதேவராயர் மன்னரை இழிவுபடுத்தி சில காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கைகளை எழுப்பி வந்தனர். இந்நிலையில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, தமிழ்நாடு அனைத்து தெலுங்கு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு இதுசம்பந்தமாக சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை இன்று தீர்ப்புக்கு வருகிறது. இந்த தீர்ப்பைப் பொறுத்து தங்களின் அடுத்தகட்டப் போராட்டத்தையும் அறிவிக்கப் போவதாகவும் தமிழ்நாடு அனைத்து தெலுங்கு கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

‘தெனாலிராமன்’ படத்திற்கு தெலுங்கு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் அதேவேளையில், தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த இயக்குனர்கள் பாரதிராஜா, சீமான், வ.கௌதமன், சண்டைப்பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம் உட்பட பலரும் இப்படத்தை எப்படியும் ரிலீஸ் செய்தே தீருவோம் என பலத்த ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழகமெங்கும் பரவலாக ‘தெனாலிராமன்’ படத்திற்கு முன்பதிவு நடைபெற்று வரும் இந்த நேரத்தில் இப்படத்தின் மீது போடப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும் என அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;