‘நான் சிகப்பு மனிதன்’ - விமர்சனம்

தூங்காதே... தம்பி... தூங்காதே!

விமர்சனம் 11-Apr-2014 5:04 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : விஷால் ஃபிலிம் ஃபேக்டரி, யுடிவி மோஷன் பிக்சர்ஸ்
இயக்கம் : திரு
நடிப்பு : விஷால், லக்ஷ்மிமேனன், இனியா, சுந்தர்ராமு, ‘நண்டு’ ஜெகன்
ஒளிப்பதிவு : ரிச்சர்டு எம்.நாதன்
இசை : ஜீ.வி.பிரகாஷ்
எடிட்டிங் : ஆண்டனி ரூபன்

ஷார்ட்டெர்ம் மெமரி லாஸ், மல்டி பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர், பைபோலர் டிஸ்ஆர்டர் வரிசையில் ‘நார்கோலெப்ஸி’ எனும் வித்தியாசமான ஒரு வியாதியோடு வெளிவந்திருக்கும் படம் ‘நான் சிகப்பு மனிதன்’. இந்த ‘நார்கோலெப்ஸி’க்கு ரசிகர்களிடம் எந்த அளவு வரவேற்பு கிடைத்திருக்கிறது?

கதைக்களம்

திடீரென உண்டாகும் சப்தம், அதிகப்படியான கோபம், அதிர்ச்சியான சந்தோஷம் இப்படி எந்தவிதமான எமோஷன் வந்தாலும் உடனே தூக்கநிலைக்கு போய்விடும் ‘நார்கோலெப்ஸி’ எனும் வியாதியால் பாதிக்கப்பட்டவர் நாயகன் விஷால். அப்படி அவர் தூக்கத்தில் இருந்தாலும், அவரின் மூளை மட்டும் விழிப்புடனே இருக்கும். தன் முன்னால் யார் என்ன பேசினாலும், கேட்டாலும் அது அவரது மூளையில் பதிவாகிவிடும்.

இப்படிப்பட்ட வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்ட விஷாலுக்கு சில ஆசைகள் உருவாகின்றன. கை நிறைய சம்பாதித்து அம்மாவுக்கு ஓய்வு தரவேண்டும், ஒரு நாள் முழுவதும் தூங்காமல் இருக்க வேண்டும், ரோட்டில் தனியாக நடந்து செல்ல வேண்டும், ஷகிலா படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க வேண்டும், அழகான பெண்ணை சந்திக்க வேண்டும், லவ் பண்ண வேண்டும், தப்பு நடந்தால் தட்டிக் கேட்க வேண்டும் என்பது ‘நார்கோலெப்ஸி’ இந்திரனின் ஆசை லிஸ்ட்! ஒரு சூழ்நிலையில் அவரின் வாழ்க்கையில் லக்ஷ்மிமேனன் நுழைகிறார். விஷாலின் ஆசைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வைத்து அவரை சந்தோஷத்தின் உச்சத்திற்கே கொண்டே போகிறார் லக்ஷ்மிமேனன். கடைசியாக... ‘தட்டிக் கேட்க வேண்டிய’ விஷாலின் ஆசைக்கு அவரது சந்தோஷமான வாழ்க்கையே பலிகடாவாகிறது!

இந்த மாதிரி ஒரு வியாதியுடன் விஷால் எப்படி தன்னுடைய ஆசைகளை நிறைவேற்றுகிறார்? ‘தட்டிக் கேட்க’ வேண்டிய அளவுக்கு அவர் வாழ்க்கையில் என்ன நடக்கிறது? அதிகப்படியான கோபம் வந்தால் தூக்கம் வருமே... பின் எப்படி அவர் வில்லன்களை தட்டிக் கேட்கப் போகிறார்? என்பதற்கான விடைகள் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் உங்களுக்காகவே....

படம் பற்றிய அலசல்

விஷாலுடன் கூட்டணி அமைத்து மூன்றாவது படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் திரு. தனது முதல் இரண்டு படைப்புகளான ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘சமர்’ ஆகிய படங்களில் வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்ததைப் போலவே இப்படத்திலும் இதுவரை இந்திய சினிமாக்களில் காட்டப்படாத ‘நார்கோலெப்ஸி’ எனும் நோயின் தாக்கத்தை காட்டியதற்காகவே திருவுக்கு முன்னால் தாராளமாக ‘உயர்திரு’ போடலாம்!

முதல் பாதியில் சென்டிமென்ட், காதல், காமெடி என படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி, இடைவேளையின்போது ‘பதைபதைக்க’ வைக்கும் ஒரு ட்விஸ்ட்டை வைக்கிறார். அந்தக் காட்சியை ஏற்றுக்கொள்வதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், நாட்டில் நடப்பதைத்தான் அவர் படமாக்கியிருக்கிறார் என்பதால், இரண்டாம் பாதியை பார்க்கும் ஆவல் தானாகவே ஒட்டிக்கொள்கிறது. இடைவேளைக்குப் பின்னர் நம்மால் யூகிக்க முடியாத பல திருப்பங்களைத் தந்திருக்கிறார் திரு. யார்தான் வில்லன் என நாம் குழம்பிப் போயிருக்கும் வேளையில்... வில்லன் இவர்தான் என நமக்குக் காட்டும்போது இவரா இப்படி? என திகைக்க வைத்திருக்கிறார். பரபரப்பான இரண்டாம்பாதியில் ‘க்ளைமேக்ஸி’ல் மட்டும் இன்னும் கொஞ்சம் ஆக்ரோஷத்தைக் கூட்டியிருக்கலாம். மற்றபடி ‘நான் சிவப்பு மனிதன்’ புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி!

நடிகர்களின் பங்களிப்பு

‘பாண்டியநாடு’ படத்தைப்போல இப்படத்திலும் ஹீரோயிசத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு கதையின் தேவைக்கேற்ப நடித்ததற்காகவே விஷாலுக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட்! ‘நார்கோலெப்ஸி’ நோய் பாதிக்கப்பட்டவராக நடித்திருக்கிறார் என்பதைவிட வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். அவர்மேல் பரிதாபம் ஏற்படும் காட்சிகளாகட்டும், காதல் வயப்படும் சீன்களாகட்டும், தன் அம்மாவின் மேல் பாசத்தை பொழியும் இடங்களாகட்டும்... ஒவ்வொன்றிலும் இயல்பாக பொருந்துகிறார் விஷால்.... வெல்டன்!

நடிப்பில் வழக்கம்போல் அதே ‘துறு துறு’ லக்ஷ்மிமேனன் இதிலும்! ஆனால், பணக்கார வீட்டுப் பெண்ணாக மாடர்ன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இல்லையே என்ற உணர்வு ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. மேக்அப்பும் கொஞ்சம் ஓவர்தான்! இனியாவுக்கு ‘விவகாரமான’ ஒரு நெகட்டிவ் ரோல். கிடைத்ததை சரியாகச் செய்திருக்கிறார். விஷாலின் நண்பர்களாக வரும் ‘நண்டு’ ஜெகன், சுந்தர்ராமு ஆகியோருக்கும் நல்ல கேரக்டர். விஷாலின் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன்! இவர் உண்மையில் நடிக்கிறாரா? என்பதே ஒவ்வொரு படத்திலும் சந்தேகமாக இருக்கிறது. யாருக்கு அம்மாவாக நடித்தாலும் அப்படியே மாறிவிடுகிறார். இவரை மிஞ்ச நிச்சயம் ஆள் கிடையாது! மற்றபடி ஜெயப்பிரகாஷ், ரிஷி, பிரமிட் நடராஜன், ஜெயபாலன் ஆகியோருக்கு சின்ன சின்ன கேரக்டர்கள்!

பலம்

1. வித்தியாசமான கதைக்களமும், அதை சுவாரஸ்யமாகக் காட்டிய பரபர திரைக்கதையும்.
2. லாஜிக்கை சரியாகக் கையாண்டிருப்பதும், அதற்கு உறுதுணையாக இருக்கும் வசனங்களும்.
3. விஷாலின் அலட்டல் இல்லாத நடிப்பு.
4. ஒளிப்பதிவு, பின்னணி இசை, பாடல்கள், எடிட்டிங் உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள்.

பலவீனம்

சில காட்சிகள் கொஞ்சம் மனதை நெருடுவதுபோல் இருப்பதும், மிகப்பெரிய ஆக்ரோஷத்தைக் காட்ட வேண்டிய நாயகனுக்கு அமைக்கப்பட்ட க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சியும்!

மொத்தத்தில்...

காமெடிப் படங்களையும், ஆக்ஷன் படங்களையும் பார்த்து பார்த்து போரடித்த ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான படத்தைத் தந்திருக்கிறது ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’யும், ‘யுடிவி’ நிறுவனமும்! தன் மேல் விஷால் வைத்த நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறார் திரு. சுவாரஸ்யமான திருப்பங்களைக் கொண்ட படத்தைப் பார்க்க விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இந்த ‘நான் சிகப்பு மனிதன்’.

ஒரு வரி பஞ்ச் : தூங்காதே... தம்பி... தூங்காதே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;