‘லக்கி ஸ்டார்’ லக்ஷ்மிமேனன்!

‘லக்கி ஸ்டார்’ லக்ஷ்மிமேனன்!

செய்திகள் 11-Apr-2014 10:17 AM IST Chandru கருத்துக்கள்

தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை ஜெயிப்பதற்கு உழைப்பும், திறமையும் எவ்வளவு முக்கியமோ, அதைப்போல அதிர்ஷ்டமும் அவசியம். திறமையிருப்பவர்களின் பக்கம் அதிர்ஷ்டக்காற்று லேசாக வீசினால் போதும் அவர்கள் மளமளவென முன்னுக்கு வந்துவிடுவார்கள். தமிழ்சினிமாவில் காலம் காலமாக ஜெயித்துக் கொண்டிருக்கும் சிலரின் சினிமா வரலாறைப் புரட்டினால் இதற்கு பலபேரை உதாரணம் சொல்லலாம். அந்த வரிசையில் ‘கும்கி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான லக்ஷ்மிமேனனுக்கு தமிழ்சினிமாவில் நல்ல எதிர்காலம் பிறந்திருக்கிறது.

தன் முதல் படமான ‘கும்கி’யின் இசைவெளியீட்டு விழாவிலேயே தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களான ரஜினியும், கமலும் கலந்து கொண்ட அதிர்ஷ்டம் நிச்சயம் வேறு எந்த அறிமுக நடிகைக்கும் கிடைத்திருக்காது! இப்படத்தில் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும், அவரின் நடிப்பில் வெளிவந்த முதல் படம் என்னவோ சசிகுமாரின் ‘சுந்தர பாண்டியன்’தான். அந்தப் படத்தில் இவரின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தன. அதேபோல் ‘கும்கி’ படத்திலும் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக நடித்து, தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி அடுத்தடுத்த படங்களில் ‘கமிட்’ ஆனார் இந்த கேரளத்து +2 ஸ்டூடண்ட்!

மீண்டும் சசிகுமாருடன் இணைந்து நடித்த ‘குட்டிப்புலி’ விமர்சனரீதியாக பின்னடைவைச் சந்தித்தாலும், வசூலில் மோசம் போகவில்லை. அந்தவகையில் லக்ஷ்மிமேனன் நடித்தால், அந்தப் படம் தோற்காது என்ற ‘சென்டிமென்ட்’ உருவானது. அதன்பிறகு விஷாலுடன் நடித்த ‘பாண்டியநாடு’ படம் 100 நாட்கள் ஓடி, விமர்சனத்திலும், வசூலிலும் நல்ல பெயரை வாங்கித் தந்தது. இதோ... இப்போது மீண்டும் விஷாலுடன் இணைந்து நடித்திருக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ படம் இன்று உலகெங்கும் ரிலீஸாகிறது. இப்படத்திற்கும் வெளிநாடுகளிலிருந்து தற்போது பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இப்படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருக்கும் ‘ஜிகர்தண்டா’ படம் வருகிற 25ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ‘பீட்சா’ படத்தின் அதிரிபுதிரி வெற்றியால் இப்படத்திற்கும் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து வரும் மே 1ஆம் தேதி விமலுக்கு ஜோடியாக நடித்திருக்கும் ‘மஞ்சப்பை’ படம் திரைக்கு வரவிருக்கிறது.

இப்படி குறுகிய இடைவெளியில் தொடர்ந்து மூன்று படங்கள் ஒரு நடிகைக்கு வெளியாவது தமிழ் சினிமாவில் அரிதாகவே நடக்கும். அதிலும் வெளியாகும் படங்கள் அனைத்துமே ஓரளவு நல்ல படங்களாகவும், எதிர்பார்ப்புள்ள படங்களாகவும் அமைவது நிச்சயம் அந்த நடிகைக்கு பெரிய வரமே! தற்போதைய சூழலில் அந்த வரத்தைப் பெற்ற ‘லக்கி ஸ்டார்’ அனேகமாக லக்ஷ்மிமேனன் மட்டுமே... தொடர்ந்து ஜெயிக்கட்டும் இந்த அதிர்ஷ்ட தேவதை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

றெக்க - டிரைலர்


;