திரை முன்னோட்டம் : ‘நான் சிகப்பு மனிதன்’

திரை முன்னோட்டம் : ‘நான் சிகப்பு மனிதன்’

கட்டுரை 9-Apr-2014 3:37 PM IST Chandru கருத்துக்கள்

‘இன்று படப்பிடிப்பு ஆரம்பம்... 100வது நாளில் படம் ரிலீஸ்’ எனும் அறிவிப்போடு ஒரு படம் தமிழ் சினிமாவில் பூஜை போடப்பட்டது என்றால், அது திரு இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ படமாகத்தான் இருக்கும்! படம் ஆரம்பிக்கும்போதே படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவிப்பது வழக்கமாக ஹாலிவுட் படங்களில் மட்டுமே சாத்தியம். இந்த முறையை தமிழ்சினிமாவில் இதற்கு முன்பு பின்பற்றிய ஒரே நிறுவனம் ஏ.வி.எம். மட்டுமே. தற்போது, இந்த ‘திட்டமிடல்’ அணுகுமுறையைப் பயன்படுத்தி யு.டி.வி. நிறுவனமும், ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனமும் இணைந்து தங்களின் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை சொன்னபடி ரிலீஸ் செய்து சாதிக்க இருக்கிறது. சரி... இந்த வார வெள்ளிக்கிழமையில் தியேட்டர்களை ஆக்ரமிக்க இருக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் அப்படி என்னென்ன சிறப்புகள் இருக்கின்றன?

ஒவ்வொரு முறையும் ஏதாவது புதிதாக ஒரு ‘கான்செப்ட்’டை மையமாக வைத்தே திரைக்கதை அமைப்பார் திரு. விஷால் - திரு இணைந்த முதல் படமான ‘தீராத விளையாட்டு பிள்ளை’யில் எந்தப் பொருளை வாங்குவதாக இருந்தாலும், நான்கைந்து ‘சாய்ஸ்’களைப் பார்த்தே வாங்கும் நாயகன், காதலியைத் தேர்வு செய்வதற்கும் அதையே பின்பற்ற, அதனால் வரும் குழப்பங்களை காமெடி + சென்டிமென்ட் கலந்து விறுவிறுப்பாக சொல்லியிருந்தார்கள். இவர்கள் கூட்டணியில் உருவான இரண்டாவது படமான சமரில், ‘மனிதர்களின் நடவடிக்கைகளை அவர்களுக்கே தெரியாமல் வீடியோ எடுத்து ‘லைவ்’ ஷோ காட்டி சூதாட்டம் நடத்தும் கும்பல்’ எனும் வித்தியாசமான கதையை படமாக்கி இருந்தார்கள். தற்போது ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்காக ‘நார்கோலெப்ஸி’ எனும் தூங்கும் வியாதியால் பாதிக்கப்பட்ட நாயகனின் கதையை படமாக்கியிருக்கிறார் திரு. இதுவரை நம் சினிமா ஹீரோக்களுக்கு படத்தில் எவ்வளவோ நோய்கள் வந்திருந்தாலும் இந்த ‘நார்கோலெப்ஸி’ எனும் நோயால் பாதிக்கப்பட்ட நாயகன் இந்தியாவிலேயே முதன்முறையாக விஷாலாகத்தான் இருப்பார் என்கிறார்கள்.

ரிலீஸ் தேதியுடன் பூஜை போடப்பட்ட படத்தின் அறிவிப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸரில் கவனம் ஈர்த்தது, ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவான பாடல்கள் ஹிட்டடித்தது, டிரைலரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என இப்படம் ஒவ்வொரு கட்டத்திலும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. இதோ... இப்போது ரிசர்வேஷனிலும் இப்படம் பெரிய அளவில் ‘புக்கிங்’ நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தனை விஷயங்களையும் திட்டமிட்டபடி சாதித்ததில் ‘யுடிவி’ மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தென்னிந்திய நிர்வாகத் தலைவர் தனஞ்செயனுக்கு பெரிய பங்குண்டு.

இப்படம் சென்சாரில் போட்டுக் காட்டியபோது, விஷால் & லக்ஷ்மிமேனனின் ஒரு ‘லிப் லாக்’ காட்சியை நீக்கினால் ‘யு’ சான்றிதழ் கிடைக்கும் நிலை உருவானது. ஆனால், கதையில் ஒரு முக்கியமான ‘லாஜிக்’ விஷயத்திற்காக அப்படத்திலிருந்து அந்தக்காட்சியை நீக்காமல் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்று நம்பிக்கையோடு பிசினஸில் களமிறங்கியிருக்கின்றன ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் தயாரிப்பு நிறுவனங்கள். இவர்களின் நம்பிக்கை வீண்போகாமல் நிச்சயம் ரசிகர்களிடம் இப்படத்திற்கு பெரிய வரவேற்புக் கிடைக்கும் என நாமும் நம்புவோம்!

இப்படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் :

1. இப்படத்தில் நாயகனாக நடிப்பதற்கு முதலில் பேசப்பட்டவர் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் என்கிறார்கள்.
2. ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘சமர்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இப்படத்தின் மூலம் இணைந்திருக்கிறது விஷால் - திரு கூட்டணி!
3. ‘பாண்டியநாடு’ படத்தின் வெற்றி ஜோடியான விஷால் - லக்ஷ்மிமேனன் இணைந்திருக்கும் இரண்டாவது படம் இது.
4. இப்படத்திற்கு இசையமைத்தன் மூலம் விஷாலுடன் முதன்முறையாக இணைந்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;