மான் கராத்தே விமர்சனம்

ஜாலியாக பார்க்கும் முடிவோடு சென்றால், இந்த ‘மான் கராத்தே’ உங்களை கண்டிப்பாக ஏமாற்றாது

விமர்சனம் 4-Apr-2014 2:13 PM IST Chandru கருத்துக்கள்

தயாரிப்பு : எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்
இயக்கம் : திருக்குமரன்
நடிப்பு : சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சூரி, சதீஷ், வம்சி கிருஷ்ணா
ஒளிப்பதிவு : எம்.சுகுமார்
இசை : அனிருத்
எடிட்டிங் : ஸ்ரீகர் பிரசாத்

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என ‘ஹாட்ரிக்’ ஹிட் கொடுத்துள்ள சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘மான் கராத்தே’. தவிர ஹன்சிகா ஜோடி, அனிருத் இசை, ஏ.ஆர்.முருகதாஸ் கதை, 600 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் என இதுவரை சிவகார்த்திகேயன் படத்திற்கு முன்பு உருவாகாத எதிர்பார்ப்பு இப்படத்தின் மீது திரும்பியிருக்கிறது. இத்தனை எதிர்பார்ப்புகளுக்கும் ஈடுகொடுத்திருக்கிறதா இப்படம்?

கதைக்களம்

அப்பாவியாக இருக்கும் ஒருவன், காதலுக்காக ‘அடப்பாவி’ ஹீரோவாகும் வழக்கமான கதைதான் ‘மான் கராத்தே’விலும்!

தனது நண்பர்களுடன் மலைப்பிரதேசத்திற்கு ஜாலி டூர் போகிறார் சதீஷ். போன இடத்தில் சக்தி வாய்ந்த சித்தர் ஒருவர் அவர்கள் கண்களுக்குத் தட்டுப்பட, விளையாட்டாக அவரிடம் வரம் கேட்கிறார்கள். அவர்களில் யாராவது ஒருவருக்கு வரம் தருவதாக சித்தர் ஒப்புக்கொள்ள, ‘ஆயுத பூஜை’க்கு மறுநாள் தினத்தந்தி பேப்பர் வேணும் என சதீஷ் சித்தரை சீண்டிப் பார்க்கிறார். ஆனால் தனது மந்திர சக்தியால் உண்மையிலேயே பேப்பரை கையில் கொடுத்துவிட்டு மறைந்து போகிறார் சித்தர்.

அப்படி என்னதான் இருக்கிறது அந்த பேப்பரில் என ஆவலாக புரட்டிப் பார்க்க, பாக்ஸிங்கில் இரண்டு கோடி ரூபாய் ஜெயிக்கும் பீட்டர் என்பவர், அதற்குக் காரணம் என சதீஷையும், அவரின் நண்பர்களின் பெயர்களையும் பேட்டியில் குறிப்பிட்டிருப்பது அந்த பேப்பரில் இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த செய்தியை நம்பாத அவர்கள், அந்த பேப்பரில் இருக்கும் ஒவ்வொரு விஷயமாக நடக்கத் தொடங்க, இரண்டு கோடி பணத்திற்கு ஆசைப்பட்டு பீட்டரைத் தேடிப் போகிறார்கள். அந்த பீட்டர் வேறு யாருமல்ல சிவகார்த்திகேயன்தான். பாக்ஸிங் என்றால் என்னவென்றே தெரியாத சிவகார்த்திகேயனை நம்பி, அவரை பாக்ஸராக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் சதீஷ் அன் கோ. எப்படியும் ஹீரோதான் ஜெயிக்கப் போகிறார் என்பது தெரியும். ஆனால், அவரை எப்படி ஜெயிக்க வைக்கிறார்கள்? என்பதுதான் ‘கலகல’ மான் கராத்தே ஃபைட்!

படம் பற்றிய அலசல்

படம் பார்க்க ஆரம்பித்த முதல் பத்து நிமிடத்திற்கு ‘என்னடா இது சின்னப்புள்ளத்தனமா இருக்கே’ என்ற நினைப்பு வரும். ஆனால், சிவகார்த்திகேயன் அறிமுகமாகும் காட்சியிலிருந்து அடுத்தடுத்த சீன்கள் ‘கலகல’வென பயணிக்க, போரடிக்காமல் இடைவேளை வரை நம்மை எளிதாக அழைத்துச் சென்றுவிடுகிறது திருக்குமரனின் திரைக்கதை. அதோடு இடைவேளைக்கு முன்பு ஒரு ட்விஸ்ட்டையும் வைத்து, இரண்டாம் பாதியைப் பார்க்கும் ஆவலையும் ஏற்படுத்துகிறார்கள். இரண்டாம் பாதியில் கொஞ்சம் லேசாக தடுமாற, அதன் பின்பு சுதாரித்து மீண்டும் வேகமெடுத்து க்ளைமேக்ஸில் ‘மான் கராத்தே’ ஃபைட்டை நமக்கும் பிடிக்க வைத்து படத்தை முடித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் திருக்குமரன்.

முதல் படம் என்ற வகையில் திருக்குமரன் திருப்தியான படத்தையே கொடுத்திருக்கிறார். ரொம்பவும் யோசிக்க வைக்காமல், காமெடி ப்ளஸ் சென்டிமென்ட் கலந்து ‘டைம் பாஸ்’ மூவியாக ‘மான் கராத்தே’வைத் தந்திருக்கிறார். அதற்கு முருகதாஸின் ஒத்துழைப்பும் கைகொடுத்திருக்கிறது. வசனம், பாடல்கள், ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என மற்ற விஷயங்களும் துணை நிற்க, நொண்டியடிக்காமல் பாய்ந்து செல்கிறது ‘மான் கராத்தே’.

நடிகர்களின் பங்களிப்பு

இன்ட்ரோ சீன், ஓபனிங் சாங் என சிவகார்த்திகேயனை ‘மாஸ்’ ஹீரோவாக்க முயற்சி செய்திருக்கிறார்கள். நல்லவேளை, ஆரம்பம் மட்டுமே அப்படியிருப்பதால் பெரிதாக கவலைப்படத் தேவையில்லை. அதன் பிறகு வழக்கமான ‘நம்ம பக்கத்து வீட்டுப் பையன்’ சிவகார்த்திகேயன் சீக்கிரமே வந்துவிடுகிறார். இப்படத்தில் டான்ஸ், நடிப்பு என அடுத்த லெவலுக்கு எளிதாக டிராவல் செய்திருக்கிறார் சிவா. ஆனாலும், ஆங்காங்கே கொஞ்சம் விஜய், தனுஷ் ஆகியோரின் மேனரிசங்கள் சிவாவின் நடிப்பில் எட்டிப்பார்ப்பதையும் சொல்லியே ஆகவேண்டும்.

க்யூட் ஹன்சிகா... அழகாக வருகிறார், போகிறார், பாடலுக்கு ஆடுகிறார், சிரிக்கிறார், அழுகிறார்... மொத்தத்தில் நம்மை வசீகரிக்கிறார். நம்ம ஹீரோயின்களுக்கு இதைவிட வேறு என்ன பெரிதாக எதிர்பார்த்துவிட முடியும்? மற்றபடி மெயின் காமெடியன் சதீஷ், வெறும் நகைச்சுவைக்காக மட்டுமில்லாமல் கதையை நகர்த்துவதற்கும் பயன்பட்டிருக்கிறார். ரெண்டே காட்சிகளில் வந்தாலும், ‘காமெடி ரெஃப்ரி’யாக சூரி ‘அப்ளாஸ்’ அள்ளுகிறார். வில்லன் வம்சி கிருஷ்ணாவிற்கு ஹீரோவை உசுப்பேத்திவிட்டு அடிவாங்கும் வேலை. கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் தங்களது வேலைகளைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். ‘ஓபன் த டாஸ்மாக்’ பாடலில் அனிருத்தும், ஏ.ஆர்.முருகதாஸும் வந்துபோவதுதான் கொஞ்சம் எரிச்சலாக இருக்கிறது. எதுக்கு பாஸ் இதெல்லாம்?

பலம்
* போரடிக்காத திரைக்கதை
* சிவகார்த்திகேயன், சதீஷ், சூரி ஆகியோரின் காமெடிக் காட்சிகள்
* பாடல்கள் படமாக்கப்பட்ட விதமும், ஒளிப்பதிவும்.
* பின்னணி இசையும், எடிட்டிங்கும்.
* க்ளைமேக்ஸ்

பலவீனம்
* லாஜிக், லாஜிக், லாஜிக்
* காமெடி என்ற பெயரில் முகம் சுளிக்க வைக்கும் ஒரு லிஃப்ட் சீன்.
* பாக்ஸிங் போட்டியின் ஆரம்பச் சுற்றுக்களில் சிவகார்த்திகேயனை வெற்றி பெறுவதற்காக வைக்கப்பட்ட காமெடி ஃபைட்டுகள் ரிபீட் ரகம்!

மொத்தத்தில்...

இந்தப் படத்தைப் பார்க்கும் முன், ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ‘சிரிப்பு போலீஸ்’ போல, இது ஒரு ‘சிரிப்பு பாக்ஸர்’ கதை! எனவே, இதில் லாஜிக், அது இதுவென நீங்கள் யோசிப்பவராக இருந்தால், நிச்சயம் உங்களால் இந்தப் படத்தோடு பயணிக்கவே முடியாது. எனவே, கேள்விகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு, ஜாலியாக பார்க்கும் முடிவோடு சென்றால், இந்த ‘மான் கராத்தே’ உங்களை கண்டிப்பாக ஏமாற்றாது.

ஒரு வரி பஞ்ச் : காமெடி ஃபைட்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

100 டீஸர்


;