‘பீட்சா’ வரிசையில் இன்னொரு படம்!

After Pizza

செய்திகள் 1-Apr-2014 10:24 AM IST Chandru கருத்துக்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்க 2012ல் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆன ‘பீட்சா’ படம் தந்த பாதிப்பை அதன் பிறகு வெளிவந்த வேறு எந்த ‘ஹாரர்’ படமும் தரவில்லை. ‘பீட்சா’வின் இரண்டாம் பாகம் என்ற அடைமொழியோடு வெளிவந்த ‘வில்லா’ முதற்கொண்டு இதற்கு விதிவிலக்கல்ல. இந்த குறையைப் போக்குமா இன்று டிரைலர் வெளியாகியிருக்கும் ‘யாமிருக்க பயமே’ படம்?

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் கிருஷ்ணா, ஓவியா, ரூபா மஞ்சரி, கருணா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கியிருப்பவர் டி கே. இவர் இயக்குனர் கே.வி.ஆனந்திடம் இணை இயக்குனராகப் பணிபுரிந்தவர். இப்படம் முழுக்க முழுக்க நைனிடாலில் படமாக்கப்பட்ட திகில் படமாகும். அதெல்லாம் சரி... அப்படி இந்தப் படத்தில் எதை வைத்து பயமுறுத்தப் போகிறார்கள்...?

தன் அப்பா தன் பெயரில் எழுதி வைத்திருக்கும் ஒரு பாழடைந்த பங்களாவை ஹோட்டல் லாட்ஜாக மாற்றி பிசினஸில் இறங்குகிறார் கிருஷ்ணா. அவருக்கு உதவியாக அவரின் காதலி ஓவியா, நண்பர் கருணா, ரூபா மஞ்சரி ஆகியோர் அதே ஹோட்டலில் பணிபுரிகிறார்கள். சுற்றிலும் ஆள்அரவமற்ற தனிமையில் இருக்கும் அந்த பங்களாவில் தங்குவதற்கு யாருமே வராமல் போகிறார்கள். ஒருவழியாக முதல் முறையாக ஒரு ஜோடி வந்து தங்குகிறது. இனி ஹோட்டல் பிசினஸ் ‘பிச்சுக்கிட்டு’ப் போகும் என கிருஷ்ணா நினைக்கத் தொடங்கும் நேரத்தில் அடுத்தடுத்து துர்சம்பவங்கள் நடக்கத் தொடங்குகின்றன. கருணா யதேச்சையாக சொன்னது போல் சில மரணங்கள் நடக்க, அனைவரும் விழிபிதுங்குகிறார்கள். ஏன்? எதற்கு? அப்படி என்னதான் இருக்கிறது அந்த ஹோட்டலில்? என்பதற்கான விடை வெள்ளித்திரையில்.

இப்படத்தின் டிரைலரைப் பார்க்கும்போதே படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் தானாகவே வந்துவிடுகிறது. வசனம், பின்னணி இசை, எடிட்டிங் என ஒரு ‘திகில்’ படத்திற்கான முக்கிய விஷயங்கள் இந்த டிரைலரில் சரியாகக் கைகொடுத்திருக்கின்றன. டிரைலர் தந்த ‘பீதி’யை படமும் தந்தால் ‘பீட்சா’ வரிசையில் நிச்சயம் இடம் பிடிக்கும் இந்த ‘யாமிருக்க பயமே’வும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;