நீட் ஃபார் ஸ்பீடு - ஹாலிவுட் விமர்சனம்

ரேஸ் ப்ரியர்களுக்கு மட்டுமல்ல, பொதுவான ஹாலிவுட் படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கும் பிடிக்கும் வண்ணம் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்

விமர்சனம் 29-Mar-2014 1:02 PM IST Chandru கருத்துக்கள்

தயாரிப்பு : ட்ரீம் ஒர்க்ஸ், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட்,
தமிழக வெளியீடு : அனு ரோஷினி ஃபிலிம்ஸ்
இயக்கம் : ஸ்காட் வாக்
நடிப்பு : ஆரோன் பால், டொமினிக் கூப்பர், இமோகன் பூட்ஸ், ஸ்காட் மெஸ்குடி
ஒளிப்பதிவு : ஷேன் ஹெர்ல்பட்
இசை : நாதன் ஃபர்ஸ்ட்
எடிட்டிங் : பால் ருபெல், ஸ்காட் வாக்

‘கேம்’ வடிவத்திலிருந்து ‘சினிமா’வாக உருப்பெற்று வெளிவந்திருக்கும் படமே ‘நீட் ஃபார் ஸ்பீடு’. ‘நீட் ஃபார் ஸ்பீடு’ என்பது பிரபலமான ஒரு வீடியோ கேம் தொடர். அதை மையமாக வைத்து, சகோதரர்காளான- ஜார்ஜ் கிராட்டின்ஸ், ஜான் கிராட்டின்ஸ் -ஆகிய இருவரும் திரைக்கதை அமைத்துள்ள படம்தான் இது! 66 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை, ஸ்காட் வாக் இயக்கியுள்ளார். கார் ரேஸை மையமாக வைத்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான இந்த ‘கேம்’, படமாக எந்தளவு சுவாரஸ்யத்தைத் தந்திருக்கிறது?

கதைக்களம்
இதுவும் ஒரு பழிவாங்கும் கதைதான்! ஆனால் திரைக்கதையை சுவாரஸ்யமாக அமைத்து, அதில் கொஞ்சம் அனல் பறக்கும் கார் ரேஸ் காட்சிகளையும் சேர்த்து மற்ற படங்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள்... அவ்வளவே!

நாயகன் ஆரோன் பால் ஒரு சிறந்த மெக்கானிக். கூடவே கார் ஓட்டுவதிலும் வல்லவர்! ரேஸ் கார்களை உருவாக்குவதில் கைதோர்ந்த அவரிடம் வில்லன் டொமினிக் கூப்பர் அதிவேக கார் ஒன்றைத் தயாரிக்கும் வேலையைக் கொடுக்கிறார். டொமினிக் கூப்பரின் அனுமதியின்றி அந்த அதிவேக காரை  யாரும் செல்ல முடியாத வேகத்தில் ஓட்டிக் காட்டி அனைவரிடமும் பாராட்டைப் பெறுகிறார் ஆரோன். இதனால்  ‘ஈகோ’ தலை தூக்கும் வில்லன் டொமினிக் அவரை ரேஸிற்கு வருமாறு அழைக்கிறார்.

ஆரோன், அவரின் நண்பர் ஹாரிஸன், டொமினிக் ஆகிய மூவருக்கும் நடக்கும் ரேஸில், ஹாரிஸனை இடித்துத்தள்ளி விபத்தில் சிக்க வைத்து கொலை செய்கிறார் டொமினிக். ஆனால், கொலைப்பழி ஆரோன் மீது விழ, ஜெயிலில் சிறை தண்டனை அனுபவிக்கிறார். செய்யாத குற்றத்திற்காக இரண்டு வருடம் ஜெயில் தண்டனை அனுபவித்து திரும்பும் நாயகன் ஆரோன், நடந்த உண்மையை கண்டுபிடிக்க களத்தில் குதிக்கிறார். அதோடு தன் நண்பனை கொன்றவனையும் பழிவாங்கத் துடிக்கிறார். ஆரோனின் எண்ணம் நிறைவேறியதா? இல்லையா? என்பதே ‘நீட் ஃபார் ஸ்பீடு’ படத்தின் ஜெட் வேக க்ளைமேக்ஸ்!

படம் பற்றிய அலசல்
‘நீட் ஃபார் ஸ்பீடு’ கேமை விளையாடிப் பழகியவர்களுக்கு இப்படம் நிச்சயம் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருக்கும். சின்ன கம்ப்யூட்டர் திரையில் பார்த்ததை, மிகப்பெரிய திரையில் கண்டுகளிக்கும்போது நிச்சயம் பிரமிப்பு ஏற்படத்தான் செய்யும்.

‘முழுக்க முழுக்க ரேஸ்தான் இருக்கும்.... படத்தில் கதை இருக்காது’ என்ற நினைப்பை மாற்றிய இடத்தில் இப்படம் ஜெயித்திருக்கிறது. இப்படத்தில் ஆரம்பத்தில் ஒரு ரேஸ், பின்னர் க்ளைமேக்ஸில் ஒரு ரேஸ் என இரண்டு ரேஸ் காட்சிகள் மட்டுமே! இதுதவிர நாயகனின் நீண்ட டிராவல் காட்சி ஒன்று இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு அதற்குள் அழகான சில சென்டிமென்ட் காட்சிகளையும் வைத்து, காமெடி காட்சிகளையும் வைத்து சுவாரஸ்யமாக கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் ஸ்காட். க்ளைமேக்ஸ் எதிர்பார்த்தபடி இருந்தாலும் பரபரப்புக்கு பஞ்சமில்லை.

போலீஸின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, நாயகன் எஸ்கேப் ஆகும் ஒவ்வொரு இடமும் விசில் பறக்கிறது. கூடவே நாயகனின் நண்பனாக வரும் ஸ்காட் மெஸ்குடி, வானத்தில் பறந்து வந்து ஒவ்வொரு முறை நண்பனுக்கு உதவும் போதும் கரகோஷத்தில் தியேட்டர் அதிர்கிறது.

பரபர ரேஸ் காட்சியோடு ஆரம்பித்து, ஒரு மரணத்திற்குப் பின்னர் கொஞ்சம் வேகம் குறைந்து, இடைவேளைக்குப் பிறகு மெல்ல வேகமெடுக்கும் படம் க்ளைமேக்ஸில் ஜெட் வேகத்தைத் தொடுகிறது!

நடிகர்களின் பங்களிப்பு
‘பிரேக்கிங் பேட்’ படப்புகழ் நாயகன் ஆரோன் பாலுக்கு இதில் அருமையான கேரக்டர். இளமை ததும்பும் அவரின் நடிப்பும், கார் ஓட்டும்போது அவர் காட்டும் முகபாவனைகளும் படத்திற்கு பெரிய ப்ளஸ். அவருக்கு இணையான கேரக்டர் வில்லன் டொமினிக் கூப்பருக்கு. இவர் ‘தி ஹிஸ்ட்ரி பாய்ஸ்’ படத்தில் நடித்தவர். இப்படத்தில் இரண்டு நாயகிகள்.... ஒருவர் இமோகன் பூட்ஸ். இன்னொருவர் டகோடா ஜான்சன். இரண்டு நாயககிள் இருந்தாலும் நம் மனதை அள்ளிச் செல்வது என்னவோ இமோகன்தான். ‘க்யூட் எக்ஸ்பிரஷன்ஸி’ல் பின்னி இருக்கிறது இந்த ‘ஹாலிவுட் ஏஞ்சல்’!

இவர்களைத்தவிர படத்தில் வரும் ஒவ்வொரு சின்னச் சின்ன கேரக்டர்களையும் சுவாரஸ்யமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். அதில் ஹெலிகாப்டர் ஓட்டுபவராக வரும் ஸ்காட் மெஸ்குடி, ஆங்காங்கே ரசிகர்களை சிரிக்க வைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறார். நாயகனின் இன்னொரு நண்பராக வரும் ரமி மெலேக் ஒரு காட்சியில் மொத்த தியேட்டரையும் அதிர வைக்கிறார். அந்தக் காட்சி என்ன என்பதை திரையில் கண்டு களியுங்கள்!

பலம்
* ரேஸை மட்டுமே நம்பாமல், அழகான கதையையும், போரடிக்காத திரைக்கதையும் உருவாக்கிய இயக்குனரின் சாமர்த்தியம்.
* ரேஸ் காட்சிகளை நேரில் பார்ப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்திய ஒளிப்பதிவும், அதற்கு பக்க பலமாக அமைந்த பின்னணி இசையும்.
* நம்ப முடியாத காட்சிகளையும் நம்ப வைக்கும் அளவுக்கு துல்லியமாக பயன்படுத்தப்பட்டுள்ள கிராபிக்ஸ் காட்சிகள்.
* பரபர ரேஸ் காட்சிகளை உறுத்தாத வகையில் காட்டிய எடிட்டிங்!

பலவீனம்
* என்னதான் போலீஸுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ரேஸ் நடத்துவதைப்போல் காட்டினாலும், ‘லாஜிக்’ நிறைய இடிக்கத்தான் செய்கிறது.
* ரேஸ் காட்சிகள் அதிகம் இருக்கும் என எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு இப்படம் கொஞ்சம் ஏமாற்றத்தையே தரும்.
* ‘3டி’க்கென இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம்!

மொத்தத்தில்...
ரேஸ் ப்ரியர்களுக்கு மட்டுமல்ல, பொதுவான ஹாலிவுட் படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கும் பிடிக்கும் வண்ணம் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஒரு வரி பஞ்ச் : வ்ரூம்ம்ம்ம்ம்.....!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எக்சோடஸ் - டிரைலர்


;