நெடுஞ்சாலை விமர்சனம்

பாதையை இன்னும் கொஞ்சம் சரி செய்திருந்தால் அலுப்பில்லாததாக அமைந்திருக்கும் இந்த ‘நெடுஞ்சாலை’ பயணம்

விமர்சனம் 28-Mar-2014 4:41 PM IST Inian கருத்துக்கள்

தயாரிப்பு : ஃபைன் ஃபோகஸ்
இயக்கம் : கிருஷ்ணா
நடிப்பு : ஆரி, ஷிவதா, தம்பி ராமையா, சலீம்குமார், பிரசாந்த் நாராயணன்
ஒளிப்பதிவு : ராஜவேல்
இசை : சி.சத்யா
எடிட்டிங் : டி.இ.கிஷோர்

‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை எடுத்த இயக்குனர் கிருஷ்ணா கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு கொடுத்துள்ள படம்தான் ‘நெடுஞ்சாலை’. முதல் படத்தில் முன்னணி நடிகர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் உபயோகப்படுத்திய கிருஷ்ணா, இந்தப் படத்தில் வளர்ந்து வரும் கலைஞர்களை வைத்து கொண்டு படமெடுத்துள்ளார். அவரின் நீண்டநாள் காத்திருப்புக்கு பலன் கிடைத்திருக்கிறதா?

கதைக்களம்
நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதிகளில் வாழும் ஆரி, பிறந்த அன்றே தாயையும், தந்தையையும் இழந்தவர். சிறு வயதில் தன்னை வளர்த்த சீயானையும் இழந்து விடுகிறார். அதன் பின்பு நண்பர்களோடு சேர்ந்து நெடுஞ்சாலையில் ஓடியபடி இருக்கும் லாரிகளில் யாருக்கும் தெரியாமலேயே அதில் உள்ள பொருட்களை திருடி, சலீம்குமாரிடம் கொடுத்து அதற்கான கூலியைக் வாங்கிக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

அதே ஊரில் ‘தாபா ஹோட்டல்’ நடத்துகிறார் நாயகி ஷிவதா. அவள் தாபாவில் நிறைய சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் போகிறார் ஆரி. அதனால் போலீஸிடம் போகும் நாயகியைப் பார்த்த இன்ஸ்பெக்டர் பிரஷாந்த் அவளை அடைய துடிக்கிறார். இதற்கிடையில் ஆரிக்கும், இன்ஸ்பெக்டர் பிரஷாந்த்-க்கும் மோதல் ஏற்பட இருவரும் கொலை வெறியோடு ஒருவரை ஒருவர் கொல்ல அலைகிறார்கள்.

இந்நிலையில் நாயகி மீது ஆரிக்கு காதல் வர, திருந்தி வாழ முடிவெடுக்கிறார். தேர்தல் செலவுக்கு பணம் அனுப்பும் ஒரு தாதாவின் பணத்தை கொள்ளை அடிக்க திட்டம் போடுகிறார் இன்ஸ்பெக்டர். அதை யார் கொள்ளை அடித்தது? திருந்தி வாழ முடிவெடுத்த ஆரி, ஷிவதா நிலை என்ன? என்பதே பர பர கிளைமாக்ஸ்.

படம் பற்றிய அலசல்
யாரும் தொடாத ஒரு கதைக்களம். ராஜவேல் ஒளிவீரன் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு ஃபிரேமும் சூப்பர். 1960, 1980, 2014 என மூன்று காலகட்டங்களையும் வேறுபடுத்தி காட்டியதில் இவரின் பங்கு மகத்தானது.

குறிப்பாக அந்த நடுநிசியில் ஓடிக்கொண்டிருக்கும் லாரியில் கொள்ளை அடிக்கும் காட்சிகள் மிகப்பிரமாதம். சரசரவென நகரும் அந்த காட்சிகள் திக், திக் எஃபெக்டை கொடுக்கின்றன. க்ளைமேக்ஸில் எரிகின்ற மரத்தை ரோட்டில் சாய்க்கும் காட்சிக்கு பலத்த கைதட்டு.

சத்யாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ‘தாமிரபரணி...’, ‘கடல் தாண்டி...’ ஆகிய பாடல்களை காட்சிகளுடன் பார்க்கும் போது மிகவும் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசை படத்திற்கேற்ற உணர்வை உண்டாக்குகிறது. கொள்ளை அடிக்கும் காட்சிகளில் வரும் ‘தீம் மியூசிக்’ மனதில் நிற்கும் ரகம்.

முதல் படத்தை காதல், காமெடி என ஜனரஞ்சகமாக கொடுத்த இயக்குனர் கிருஷ்ணா, முற்றிலும் வேறுபட்ட கதைக்களத்தை எடுத்து அதற்காக மெனக்கெட்டு காட்சிகளை அமைத்து, காலகட்டங்களுக்கேற்றவாறு படமாக்கியுள்ளார்.

நடிகர்களின் பங்களிப்பு
நாயகனாக ஆரி. ‘ரெட்டச்சுழி’, படத்தில் பெரிதாக பேசப்படாவிட்டாலும், ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’ படத்தில் தன்னை நிரூபித்தவர் ஆரி. இந்த படத்தில் அடுத்த கட்டத்தை எட்டிவிட்டார் என்றே சொல்லலாம். தேர்ந்த நடிப்பு, அளவில்லா மெனக்கெடல் என படம் முழுக்க நூறு சதவீத அர்ப்பணிப்பை கொடுத்து நடித்துள்ளார் ஆரி. ஆனால், ஆங்காங்கே ‘பருத்திவீரன்’ கார்த்தியை ஞாபகப்படுத்தவும் தவறவில்லை.

நாயகியாக ஷிவதா பொருத்தமான தேர்வு. அழகான, இயல்பான நடிப்பை கொடுத்துள்ளார். நாயகிக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தி இருக்கிறார். படத்தில் இவர் பேசும் மலையாள தமிழ் ரசிக்க வைக்கிறது.
இப்படத்தில் வில்லனாக வரும் பிரஷாந்துக்கும், ஆரியின் முதலாளியாக வரும் சலீம்குமாருக்கும் அற்புதமான கேரக்டரைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதை இருவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்களில் நடித்த தம்பி ராமையா, கிஷோர், ‘கும்கி’ அஷ்வின், கண்ணன் பொன்னையா என அத்தனை பேருமே கதைக்கேற்ப நடித்துள்ளனர்.

பலம்
* இதுவரை காட்டப்படாத ஒரு கதைக்களம்
* முதல் பாதி திரைக்கதையும், குறிப்பிட்ட சில காட்சிகளும்
* காலகட்டத்திற்கு ஏற்ற ஒளிப்பதிவும், கதைக்கேற்ற பின்னணி இசையும்
* படமாக்கப்பட்ட இடங்களும், நேட்டிவிட்டியை முடிந்தளவு காப்பாற்றியிருக்கும் ஆர்ட் டைரக்ஷனும்
* நடிகர்களின் பங்களிப்பு

பலவீனம்
* இழுத்தடிக்கும் இரண்டாம்பாதியும், திருப்தியில்லாத க்ளைமேக்ஸும்
* லாஜிக் ஓட்டைகள்
* இரண்டாம்பாதியில் வரும் தேவையில்லாத சில காமெடிக் காட்சிகளும், ஒரு பாடலும்.

மொத்தத்தில்...
வித்தியாசமான ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து, அதற்கான சரியான காலகட்டத்தையும், டெக்னிக்கல் விஷயங்கைளயும் பெற்ற இயக்குனர், கடைசி வரை படத்தோடு ரசிகனை ஒன்ற வைக்கத் தவறிவிட்டார். முதல்பாதியில் கொடுத்துள்ள சுவாரஸ்யத்தையும், வித்தியாசமான காட்சியமைப்புகளையும் இரண்டாம்பாதியிலும் கொடுத்திருந்தால் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும் இந்த ‘நெடுஞ்சாலை’.

ஒரு வரி பஞ்ச் : பாதையை இன்னும் கொஞ்சம் சரி செய்திருந்தால் அலுப்பில்லாததாக அமைந்திருக்கும் இந்த ‘நெடுஞ்சாலை’ பயணம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;