‘தெனாலிராமன்’ டிரைலர் விமர்சனம்

Tenali Raman Trailer Review

கட்டுரை 28-Mar-2014 10:46 AM IST Chandru கருத்துக்கள்

‘‘எம்பூட்டு வருஷமாச்சு எங்க வைகைப்புயலைப் பார்த்து....’’ என ஏக்கப் பெரூமூச்சுவிடும் ஒவ்வொரு ரசிகனுக்கும் விருந்தளிக்க ‘வந்துட்டாருய்யா... வந்துட்டாரு... வடிவேலு வந்துட்டாரு!’. ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான படைப்பில் உருவாகியிருக்கும் ‘தெனாலிராமன்’ படத்தை இயக்கியிருப்பவர் யுவராஜ் தயாளன். இத்தனை நாட்கள் காத்திருப்பிற்கு தீனி போட்டிருக்கிறதா இந்த டிரைலர்...? ‘தெனாலிராமா... உன் வருகையை கோலாகலமாக கொண்டாட வேண்டும்...!’’ என டிரைலர் முடியும்போது ஒலிக்கும் வசனத்திற்கு ஏற்றாற்போல் இருக்குமா இப்படமும்? வாருங்கள் டிரைலரை ஒரு வலம் வரலாம்....

வடிவேலுவின் கேரியரில் மிக முக்கியமான படம் சிம்புதேவன் இயக்கிய ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’. அந்த படத்தின் கதையை ஞாபகப்படுத்துவதுபோலவே இருக்கிறது இந்த ‘தெனாலிராமன்’ படத்தின் கதை அமைப்பும். இதிலும் வடிவேலுவுக்கு இரட்டை வேடங்கள். மாமன்னர் வடிவேலு... இன்னொருவர் மதியூகி ‘தெனாலிராமன்’. மாமன்னருக்கு 36 மனைவிகளும், 52 வாரிசுகளும். மன்னரின் அரண்மனையில் நவரத்தின மந்திரிகள் 9 பேரும், நயவஞ்சகராக ராதா ரவியும் நடித்திருக்கிறார்.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்து ஆட்சி செய்து வருகிறார் மாமன்னன் வடிவேலு. அவரது அரண்மனைக்கு வருகை தரும் தெனாலிராமனின் மதியூகத்தைப் பார்த்து அதிசயிக்கும் மன்னன், அவரை தன் அரசவையில் சேர்த்துக் கொள்கிறார். மன்னன் போடும் நல்ல திட்டங்கள் அனைத்தும் எளிய மக்களுக்காக இல்லாமல் வசதி படைத்தவர்களுக்கே பயனளிக்கிறது. இதனை மன்னனுக்கு அடையாளம் காட்டுகிறார் தெனாலிராமன். பிறகு மன்னனே சாதாரண மனிதனாக மாறு வேஷத்தில் சென்று மக்களோடு மக்களாகப் பழகி யதார்த்தத்தை கண்டறிகிறார் என்று போகிறது ‘தெனாலிராமன்’ கதை. இப்படத்தின் கதைக்களமும், திரைக்கதை அமைப்பும் 3 நிமிட டிரைலரில் பார்க்கும்போது கிட்டத்தட்ட ‘இம்சை அரசன்’ படத்தின் இரண்டாம் பாகமோ? என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்தாலும் வடிவேலுவின் பாடிலாங்வேஜும், டயலாக் டெலிவரியும் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. ‘வடிவேலு ரிட்டர்ன்ஸ்’ என தாராளமாக சொல்லலாம்! ‘க...க..போ....’ என ‘இம்சை அரசன்’ படத்தில் வடிவேலு பேசும் டயலாக் ரொம்பவே பிரபலம். அதைப்போலவே இந்த ‘தெனாலிராமன்’ படத்திலும்.... ‘டும்....’ என ஒற்றை வார்த்தை பஞ்ச் டயலாக்கை பேசி அசத்தியிருக்கிறார் வடிவேலு. அதேபோல் டிரைலரின் முடிவில் ‘‘ஒருவன் லட்சியம் நிறைவாகும் வரை மறைவாக இருப்பதுதான் நல்லது. இது உலகின் அனைத்துப் போராளிகளுக்கும் பொருந்தும் மன்னா’’ என அரசியல் வாடை கலந்த வசனத்தையும் பேசியிருக்கிறார் வடிவேலு!

டெக்னிக்கலாக இந்த ‘தெனாலிராமன்’ நிச்சயம் பேசப்படும் படமாக அமையும். அந்தக்கால அரண்மனையையும், வீதிகளையும் மீண்டும் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். அதேபோல் உடை, சிகை அலங்காரம், ஒப்பனை என ஒவ்வொரு விஷயத்திலும் நிறைய மெனக்கெட்டிருப்பது டிரைலரிலேயே பிரம்மாண்டமாக பிரதிபலிக்கிறது. ராம்நாத் ஷெட்டியின் ஒளிப்பதிவும், டி.இமானின் இசையும் நிச்சயம் இப்படத்திற்கு பெரிய ப்ளஸ்ஸாக அமையும். வடிவேலுவின் மீது ஏஜிஎஸ் நிறுவனம் வைத்திருக்கும் நம்பிக்கை படத்திற்காக செய்திருக்கும் தாராளமான செலவுகளைப் பார்த்தாலே தெரிகிறது.

மொத்தத்தில் இந்த ‘தெனாலிராமன்’ நிச்சயம் பிரம்மாண்டத்தால் நம்மை வாய்பிளக்க வைப்பார் என்பதில் சந்தேகம் இல்லை! ஆனால், ‘வயிறு குலுங்க சிரிக்க வைப்பாரா?’ என்பதற்கான விடை இந்த டிரைலரில் இல்லை!

(முதலில் ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ என பெயரிடப்பட்ட இப்படம் தற்போது ‘தெனாலிராமன்’ என சுருங்கியிருக்கிறது. ஏப்ரல் 1ஆம் தேதி ‘தெனாலிராமன்’ படத்தின் இசை வெளியீடு நடைபெறுகிறது)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - டிரைலர்


;