அனிருத்தின் ரசிகன் நான்! - இயக்குனர் ஷங்கர்

I am anirudh fan - shankar

செய்திகள் 17-Mar-2014 10:13 AM IST VRC கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்‌ஷனும், எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘மான் கராத்தே’. வருகிற ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி வெளிவர இருக்கும் இப்படத்தின் இசையை இயக்குனர் ஷங்கர் வெளியிட, இசையமைப்பாளர் தேவா பெற்றுக்கொண்டார். ’மான் கராத்தே’ இசைத் தட்டை வெளியிட்டு இயக்குனர் ஷங்கர் பேசியதாவது,

‘‘மான் கரத்தே’ என்றால் பெண்கள் போடுகிற கராத்தே அல்லது ஆண்கள் பெண்களுக்காக போடுகிற சண்டையா இருக்கும் என்று நினைத்தேன். முருகதாஸிடம் அர்த்தம் கேட்டபோது அவர் கூறிய பதில் எனக்கு சிரிப்பை வரவழைத்தது. சண்டைன்னு வந்தா மான் மாதிரி ஓடி ஒளிவதுதான் அர்த்தமாம்!

இந்த விழாவிற்கு நான் அனிருத்தின் ரசிகனாக வந்திருக்கேன். அவருடைய எல்லா படப் பாடல்களையும் முதலிலேயே கேட்டு விடுவேன். ‘3’, ‘எதிர் நீச்சல்’ பாடல்கள் பிடிக்கும். அவரோட பின்னணி இசையும் நன்றாக இருக்கும். ‘வணக்கம் சென்னை’ படப்பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இசையமைப்பில் வந்த மிகவும் அருமையான படம் அது. எனக்கு மட்டு மில்லாமல் எனது குடும்பத்தினரின் விருப்பமான படப்பாடல்கள் எது என்றால் அது ‘வணக்கம் சென்னை’ தான்.

‘மான் கராத்தே’ பாடல்கள் எல்லாம் மாஸ் சாங்க்ஸ்! இன்றைய இளைய தலைமுறையினரின் விருப்பத்திற்கேற்ப இருக்கிறது. ‘டார்லிங் டம்பக்’ பாடல் ரொம்ப நல்லாயிருக்கு. இந்தப் பாடல் கண்டிப்பா மிகப்பெரிய ஹிட் ஆகும். தேவா பாடிய பாடல் உட்பட எல்லா பாடல்களுமே நன்றாக இருக்கிறது.

அனிருத் இப்போது கர்னாடிக் மியூசிக் கற்று வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் ‘ரோஜா’ பட வெற்றிக்கு பிறகு நல்ல நிலையில் இருந்தபோது அவர் ஹிந்துஸ்தானி இசையை கற்றுக்கொண்டிருந்தார். தெரியாத ஒன்றை கற்றுக்கொள்ள் ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி ஆர்வம் காட்டி வந்தாரோ அதே போல் அனிருத்தும் ஆர்வம் காட்டி வருகிறார். நிச்சயம் அனிருத் ஒரு பெரிய இடத்திற்கு வருவார் அதற்கான அறிகுறி தெரிகிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
முருகதாஸ் இயக்கிய ‘துப்பாக்கி’ பார்த்தேன். ரொம்ப நல்லா பண்ணியிருக்கிறார். நான் எளிதில் திருப்தி அடையமாட்டேன். நான் ரொமப் ரசித்து, திருப்தியா பார்த்த படம் ‘துப்பாக்கி’. அவர் இயக்கிய படங்கள் மட்டுமின்றி தயாரிக்கும் படங்களும் நன்றாக இருக்கிறது. ‘ராஜா ராணி’ நன்றாக இருந்தது. ‘மான் கராத்தே’ கண்டிப்பா நன்றாக இருக்கும். ரசித்து தான் எடுத்திருப்பார். வாழ்த்துக்கள்.

சிவகார்த்திகேயன் நல்ல நிலையில் இருக்கிறார். இப்படியே படங்கள் நடித்து வந்தால் முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம் பிடிப்பார்’’ என்றார்.
அதனை தொடர்ந்து முருகதாஸ் பேசும்போது, ‘‘நான் உதவி இயக்குனராக வேலையில் சேர்வதற்கு சென்னை வரும்போது, மாமண்டூர் பஸ் ஸ்டான்டில் ‘ஜென்டில் மேன்’ டிரைலர் ஓடிக்கொண்டிருந்தது. பார்க்கவே ரொம்ப மிரட்சியாக இருந்தது. இன்றுவரை ஷங்கரும் அவர் இயக்கிய படங்களுமே எனக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கிறது. தமிழ் சினிமாவை இந்திய அளவில் கொண்டு சென்று, அகில உலக அளவில் தமிழ் சினிமா வியாபாரத்தை விரிவுபடுத்தியவர். அவர் போட்டு கொடுத்த பாதையிலேயே நாங்கள் இப்போது பின் தொடர்கிறோம்.

அனிருத் நான் தயாரிக்கிற படத்திற்கும், இயக்கும் படத்திற்கும் இசையமைக்கிறார். விஜய் நடிக்கும் படத்துக்கு அனிருத்திடம் ஒரு ஒப்பந்தம் போட்டேன். என்னவென்றால், எந்த புதிய விஷயமானாலும் அது விஜய் படத்தில் தான் இருக்க வேண்டும் என்றேன். ஆனால் ‘மான் கராத்தே’வில் எல்லா புது விஷயங்களும் இருக்கிறது. எனவே இதை விட பெரிய அளவில் விஜய் படத்தின் இசை இருக்கவேண்டும்.

‘மாஞ்சா கண்ணுல’ பாட்டு படமாக்கியிருப்பதை பார்த்தால் வெளிநாட்டில் படமாக்கியதை போல இருக்கிறது. ஆனால் அதை பாண்டிச்சேரியில் தான் படமாக்கியிருக்கிறார்கள். பாண்டிச்சேரியில் இந்த பாடலை எப்படி வித்தியாசமாக படமாக்கமுடியும் என்று நான் கேட்டதை, மனதில் சவாலாக கொண்டு கௌதம் மேனன் மாதிரி பாடலை எடுத்துள்ளனர். நன்றாக இருக்கிறது. படமும் பார்த்துவிட்டேன் ரொம்ப நல்லாயிருக்கு. கண்டிப்பா வெற்றி பெறும்’’ என்றார்.

முன்னதாக தயாரிப்பாளர் பி.மதன் வரவேற்புரை ஆற்றினார். நிர்வாக தயாரிப்பாளர்கள் ஜேம்ஸ் மற்றும் ராஜா விழா நிகழ்ச்சிகளை கவனித்து கொண்டனர். கவிஞர் - நிர்வாக தயாரிப்பாளர் ராஜா இப்படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியுள்ளதை ஊக்குவிக்கும் வகையில் கவிஞர் அறிவுமதி அவருக்கு முத்தம் கொடுத்து மகிழ வைத்தார்.
தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார் மற்றும் தேவா, திருமதி லதா ரஜினிகாந்த் உட்பட பலர் விழாவிற்கு வந்து சிறப்பு செய்தனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;