ஆதியும் அந்தமும் திரை விமர்சனம்

கொஞ்சம் சுவை குறைந்த ‘பீட்சா’

விமர்சனம் 14-Mar-2014 10:01 AM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : ஆர்.எஸ்.ஆர். ஸ்கிரீன்ஸ்
இயக்கம் : கௌசிக்
நடிப்பு : அஜய், கவிதா ஸ்ரீனிவாஸ்
ஒளிப்பதிவு : டி.எஸ்.வாசன்
இசை : எல்.வி.கணேசன்
எடிட்டிங் : எம்.ரமேஷ் பாரதி

தமிழ் சினிமாவில் வெளியாகும் அனேக திகில் படங்கள் வெற்றி பெற்றுக்கொண்டுதான் வருகின்றன. சமீபத்தில் கூட ‘பீட்சா’ படம் வெளியாகி வெற்றி பெற்றது ஞாபகம் இருக்கலாம். அந்த வகையில் இதுவும் ஒரு திகில் படம். ஆனால் வேறு ஒரு ஜானரில் அதாவது சைக்காலஜிகல் த்ரில்லராக வந்துள்ளது. அதுதான் ஆதியும் அந்தமும்! பல மெகா சீரியல்களில் நடிகராக அறிமுகமான கௌசிக் இயகியுள்ளார். ‘கோலங்கள்’ தொடர் புகழ் ஆதி, வெள்ளித்திரையில் அஜய்யாக கால் பதித்துள்ளார். இந்த சின்னத்திரை கூட்டணி வெள்ளித்திரையில் சாதித்துள்ளதா?

கதைக்களம்
ஊட்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் சைக்கலாஜி துறையில் பேராசிரியராகவும், மனநல மருத்துவராகவும் சேர்கிறார் அஜய். அங்கேயே தங்கும் அவருக்கு ஒரு இளம்பெண்ணின் ஆவி தினந்தோறும் இரவில் கண்ணில் பட, அது யார் என கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதே கல்லூரியில் ஒரு டிவி நிகழ்சிக்காக தங்கும் காம்பியருக்கும் அங்கு ஏதோ தவறாகப் பட, அவரும் அஜய்யுடன் சேர்ந்துகொள்கிறார்.

இதற்கு கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து எதிர்ப்பு உருவானதால் கல்லூரி நிர்வாகத்தின் மேல் சந்தேகப்படுகிறார்கள். இந்த நிலையில் அஜய், காணாமல் போக கல்லூரி முதல்வர்தான் காரணமென அவரிடம் போய் கேட்கிறார் காம்பியர். அஜய் திரும்ப கிடைத்தாரா? அவரை ஏன் கல்லூரி நிர்வாகத்தினர் தடுக்கிறார்கள்? அந்த ஆவியின் பின்னணி என்ன? அது ஏன் அஜய் கண்ணுக்கு மட்டும் தெரிகிறது? என பல சஸ்பென்ஸ் கேள்விக்களுக்குப் பதிலாக திரையில் திரைக்கதையாக விரிகிறது ‘ஆதியும் அந்தமும்’.

படம் பற்றிய அலசல்
படத்தில் முதல் காட்சியிலேயே நேராக கதைக்குள் ரசிகர்களை கூட்டிச் செல்கிறார் இயக்குனர் கௌசிக். அதோடு ரசிகர்களை சோதிக்காமல் இரண்டு மணி நேரத்தில் கதையை சொல்லி முடித்ததற்கும் பாராட்டுக்கள்!

முதல் பாதியில் திகிலை மட்டுமே மையமாக வைத்து, என்னவாக இருக்கும்? என யோசிக்க வைத்த இயக்குனர், இரண்டாவது பாதியில் சீக்கிரமே அதை ரசிகர்களுக்கு சொல்லி எதிர்பார்ப்பை சற்று குறைக்கிறார். ஆனாலும் ரசிகர்களை இறுதிவரை சீட்டில் உட்கார வைக்கிறார் கௌசிக்.

இதுபோன்ற திகில் படங்களுக்கு ஒளிப்பதிவும், பின்னணி இசையும் சரியாக அமைய வேண்டியது அவசியம். அவை இந்தப் படத்தில் பிரமாதமாக கையாளப்பட்டிருக்கிறது. அழகான ஊட்டியின் ரம்மியத்தையும், இருட்டான அந்த கல்லூரி காட்சிகளிலும் வித்தியாசம் காட்டி படத்தோடு ஒன்ற வைக்கிறார் ஒளிப்பதிவாளர். திகில் காட்சிகளுக்கு பயத்தைக் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது பின்னணி இசை!

நடிகர்களின் பங்களிப்பு
இந்த கேரக்டருக்கு பொருத்தமான தேர்வு நாயகன் அஜய். ஒரு மனநல மருத்துவராக, பேராசிரியராக சிறப்பாக நடித்துள்ளார். முதல் பாதியில் சீரியஸ் அஜய், ஃப்ளாஷ்பேக்கில் சந்தோஷமாக, காதலுடன் வலம் வரும் ரொமான்ஸ் அஜய் என நடிப்பில் இரண்டு பரிணாமங்களைக் காட்டி பேலன்ஸ் செய்கிறார்.

நாயகி கவிதா ‘க்யூட்’டாக வலம் வருகிறார். இரண்டாவது பாதி முழுக்க ரசிகர்களை தன் நடிப்பாலும், அழகாலும் வசீகரிக்கிறார். அவரது முடிவு மனதில் இறுக்கத்தை ஏற்படுத்துகிறது.

கல்லூரி முதல்வரும், முத்துவாக வருபவரும் பாத்திரத்திற்கு ஏற்ப யதார்த்தமாக நடித்துள்ளனர். ‘டிவி’ காம்பியராக வரும் இன்னொரு நாயகியும் ஓகே.

பலம்
திரைக்கதையில் விறுவிறுப்பைக் கூட்டிய முதல் பாதி
காட்சிகளுக்கு உயிர்கொடுத்த ஒளிப்பதிவு
பின்னணி இசையும் சவுண்ட் மிக்சிங்கும்

பலவீனம்
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத இரண்டாம் பாதி திரைக்கதை!

மொத்தத்தில்...
திகில் பட ரசிகர்களுக்கான இன்னொரு வரவு இந்த ஆதியும் அந்தமும். வெள்ளித்திரை இயக்குனராக வெற்றி பெற்றுள்ளார் கௌசிக்.

ஒரு வரி பஞ்ச் : கொஞ்சம் சுவை குறைந்த ‘பீட்சா’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இமைக்கா நொடிகள் - டீஸர்


;