வாலு இசை விமர்சனம்

Vaalu Music Review

விமர்சனம் 11-Mar-2014 5:36 PM IST Chandru கருத்துக்கள்

தயாரிப்பு : நிக் ஆர்ட்ஸ்
இயக்கம் : விஜய் சந்தர்
நடிப்பு : சிம்பு, ஹன்சிகா, சந்தானம்
இசை : தமன் எஸ்.எஸ்.
பாடலாசிரியர்கள் : மதன் கார்க்கி, சிம்பு

‘ஒஸ்தி’ படத்திற்குப் பிறகு மீண்டும் ‘வாலு’ படத்தின் மூலம் இணைந்திருக்கிறது சிம்பு - தமன் கூட்டணி. 2012ல் வெளிவந்த ‘போடா போடி’ படத்திற்குப் பிறகு சிம்பு ஹீரோவாக நடித்து வேறு எந்தப் படமும் வெளிவரவில்லை. இடையில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘இங்க என்ன சொல்லுது’ போன்ற படங்களில் லேசாக தலை காட்டிவிட்டுச் சென்றதோடு சரி! சிம்புவும், ஹன்சிகாவும் இணைந்து இப்படத்தில் நடித்திருப்பது வேறு ‘வாலு’ படத்தின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக ஏற்றியிருக்கிறது. ‘வாலு’ ஆல்பம் எப்படி வந்திருக்கிறது?

1. எங்கதான் பொறந்த...
பாடியவர் : சிம்பு
பாடலாசிரியர் : சிம்பு

வழக்கமான சிம்பு பாணி பாடல் இது. வசனங்களை கவிதையாக்கி அதையே பாடலாகவும் பாடி விடுவதில் வல்லவர் சிம்பு. இப்பாடலின் ட்யூன் ‘வல்லவன்’ படத்தின் ‘லூசுப் பெண்ணே...’வையும் வரிகள் ‘போடா போடி’ படத்தின் ‘எங்கப்பன் மவனே... வாடா..’வையும் ஞாபகப்படுத்துகின்றன. காதலியை நினைத்து காதலன் உருகி உருகி பாடும் இந்தப் பாடலில் ‘‘எல்லோரும் தன் காதலிக்காக பூவைப் பிச்சு தருவான்... உனக்காக என் இதயத்தைப் பிச்சு பூவைப் போல தருவேன்...’’ என்கிற வரிகளில் இழையேடுகிறது ரொமான்ஸ் ஃபீலிங்ஸ்! ஏற்கெனவே கேட்ட பாடல் போல் இருந்தாலும், இந்தப் பாடலையும் கேட்க முடிகிறது!

2. ஹே வாசமொக்கா...
பாடியவர்கள் : அனிருத், ஆன்ட்ரியா
பாடலாசிரியர் : மதன் கார்க்கி

டெக்னாலஜிக் கவிஞர் மதன் கார்க்கியின் வரிகளுக்கு குரல் கொடுத்துள்ளனர் அனிருத்தும் ஆன்ட்ரியாவும். சிம்பு, ஹன்சிகாவுக்காகவே ஸ்பெஷலாக வரிகளை கார்க்கி எழுதியிருக்கிறார் என்பது முழுப்பாடலிலும் எதிரொலிக்கிறது. தமனின் இளமைத் துள்ளல் இசையில் கேட்டதும் பிடித்துப் போகிறது இந்த யூத் ஸ்பெஷல் சாங்!

3. பிங்கி பிங்கி... இங்கி பாங்கி....
பாடியவர் : எஸ்.தமன்
பாடலாசிரியர் : மதன் கார்க்கி

இந்தப் பாடல் வெளிவருவதற்கு முன்பே சர்ச்சைகளால் ஹிட்டடித்திருக்கிறது. ‘‘நயன்தாரா, சமந்தா, தீபிகா யாருமே வேணாம்... நீ மட்டும் போதும்’’ என ஹன்சிகாவைப் பார்த்து சிம்பு ‘வாலு’ படத்தில் பாட்டுப் பாடியிருக்கிறார் என ஏற்கெனவே எல்லா மீடியாக்களும் எழுதித் தள்ளிவிட்டதால் இப்பாடலுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு. எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை மதன் கார்க்கியின் வரிகளும், தமனின் பின்னணி குரலும்! கொஞ்சம் குழந்தைத்தனமாக இருந்தாலும் பின்னணி இசையும், சுவாரஸ்யமான வார்த்தைகளுமே இப்பாடலை ஹிட்டாக்கிவிடும்.

4. லவ் என்றவன் நீ யாருடா...
பாடியவர் : சிம்பு
பாடலாசிரியர் : சிம்பு

‘‘உன்ன நாலு வார்த்தை நாக்கு புடுங்க கேக்கணும்... கண்டந்துண்டமா வெட்டி வெட்டி போடணும்... உள்ள தள்ளி தூக்கு தண்டனை கொடுக்கணும்... நடு ரோட்டுல பெட்ரோல் ஊத்தி கொளுத்தணும்... வெட்டி சாய்க்கணும்...’’ இப்படி போகிற போக்கில் கிடைக்கும் வார்த்தைகளையெல்லாம் அள்ளிப் போட்டுப் பாடி அதையும் பாடலாக்கிவிடுகிறார் சிம்பு. ‘ஒஸ்தி...’ படத்தின் ‘கலா...சலா...’ மாதிரி ஒரு பாடல் வேண்டும் என் கேட்டார்களோ என்னவோ, அதையே கொஞ்சம் மாத்திப் போட்டு கொடுத்திருக்கிறார் தமன். பாடலின் இடையே சிம்புவின் ஆஸ்தான நண்பர்களான சந்தானமும், ‘விடிவி’ கணேஷும் வந்து போகிறார்கள். எஸ்.டி.ஆர். ஃபேன்ஸுக்கு தியேட்டர்ல எந்திரிச்சு நின்னு ஆடுறதுக்கு ஏத்த பாடல்!

5. வாத்தியாரு...
பாடியவர்கள் : டி.ராஜேந்தர், ப்ரியதர்ஷினி
பாடலாசிரியர் : மதன் கார்க்கி

சிம்பு ஆல்பத்தில் டி.ஆர். பாடவில்லை என்றால் அது எப்படி முழுமையடையும்...? ஆல்பத்தின் கடைசிப் பாடலை வழக்கமான தன் குத்து ஸ்டைலில் பாடி போட்டுத்தாக்கியிருக்கிறார் டி.ஆர். எம்.ஜி.ஆர்., ரஜினி, அஜித் ஆகியோருக்கு புகழ் மாலை சூடுகிறது இப்பாடல். சரி... போகட்டும் என கேட்டுக் கொண்டே போனால் கடைசியாக இந்த வரிசையில் சிம்புவையும் சேர்த்து அதிரடிக்கிறார் கவிஞர் கார்க்கி... அது சரி...! ஒரு முடிவோடுதான் இந்தப் பாடலை ‘வாலு’ ஆல்பத்தில் சேர்த்திருக்கிறார்கள் தமனும், சிம்புவும்.

மொத்தத்தில்.... இவர்கள் கூட்டணியில் உருவாகும் ஆல்பம் இப்படித்தான் இருக்கும் என நாம் நினைத்ததை அப்படியே பிரதிபலித்திருக்கிறது ‘வாலு’ டீம்! எது எப்படியோ ‘டென்ஷன்’ வரும்போதெல்லாம் இந்த ஆல்பத்தைப் போட்டுக் கேட்டால் எல்லாம் பறந்துபோய்விடும்... செம ஜாலிப்பா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;