நிமிர்ந்து நில் திரை விமர்சனம்

முதல் பாதி ‘நச்’... இண்டாம் பாதி ‘ப்ச்’

விமர்சனம் 11-Mar-2014 10:49 AM IST Chandru கருத்துக்கள்

தயாரிப்பு : வாசன் விஷுவல் வெஞ்சர்ஸ்
இயக்கம் : சமுத்திரக்கனி
நடிப்பு : ஜெயம் ரவி, அமலா பால், சூரி, சரத்குமார்
ஒளிப்பதிவு : எம்.சுகுமார்
இசை : ஜி.வி.பிரகாஷ்
எடிட்டிங் : ஏ.எல்.ரமேஷ்

‘ஆதிபகவன்’ படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி மீண்டும் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘நிமிர்ந்து நில்’. கொஞ்சம் தொய்வடைந்திருக்கும் ஜெயம் ரவியின் கேரியரை நிமிர்ந்து நிற்க வைத்திருக்கிறாரா சமுத்திரக்கனி?

கதைக்களம்

லஞ்சம், ஊழல்களால் புரையோடிப் போயிருக்கும் சமூக அமைப்பை ஒரு சாதாரண இளைஞன் மாற்ற முயல்வதே ‘நிமிர்ந்து நில்’.

ஆசிரமப் பாதுகாப்பில் ஒழுக்கமாக வளர்ந்து பெரியவனாகும் அரவிந்த் (ஜெயம் ரவி), வெளியுலகத்திற்கு வரும்போது அந்த சூழலுக்கு ஏற்றவாறு வளைந்து கொடுக்க முடியாமல் தடுமாறுகிறான். எங்கும் ஊழல், எதற்கும் லஞ்சம் எனக் காட்சியளிக்கும் சிட்டி வாழ்க்கை அவனுக்குள் ஒரு கோபக்கனலை ஏற்படுத்துகிறது. நியாயமான முறையில் எல்லாவற்றையும் எதிர்கொள்ளத் துடிக்கும் அவனால் எதையுமே மாற்ற முடியவில்லை. முடிவில் அதிரடி முடிவு ஒன்றைக் மேற்கொள்கிறான். அவன் மேற்கொண்ட திட்டத்திற்கு பலன் கிடைத்ததா? இல்லையா என்பதே ‘நிமிர்ந்து நில்’ படத்தின் க்ளைமேக்ஸ்.

படம் பற்றிய அலசல்

படத்தின் கதைக்களம் ஏற்கெனவே நாம் பார்த்த ‘ரமணா’, ‘அந்நியன்’ போன்ற படங்களை ஞாபகப்படுத்தினாலும், காட்சிகளில் வித்தியாசத்தைக் காட்டி நம்மை படத்தோடு கட்டிப்போட முயன்றிருக்கிறார் இயக்குனர் சமுத்திரக்கனி. முதல் பாதி திரைக்கதையை விறுவிறுவென கொண்டு சென்று இடைவேளையில் ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைத்தவர், இரண்டாம் பாதியில் சற்றே கோட்டை விட்டிருக்கிறார்.

சமூக அவலங்களைத் தட்டிக் கேட்கும் உணர்ச்சி மிகுந்த வசனங்கள் படத்திற்கு பெரிய ப்ளஸாக அமைந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் படமெங்கும் வசனங்களாக நிறைந்திருப்பதால் போரடிக்கத் துவங்குகிறது. அதேபோல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் படத்தில் ஜெயம் ரவியுடன் அமலா பால் டூயட் பாடச் செல்வதும் படத்தின் ஓட்டத்திற்கு தடையாக அமைந்திருக்கிறது.. க்ளைமேக்ஸில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கலாம்.

நடிகர்களின் பங்களிப்பு

‘ஜெயம்’ ரவியின் உழைப்பைப் பற்றி சொல்லத் தேவையில்லை. ஒவ்வொரு படத்திற்கும் முழு உழைப்பையும் கொட்டுவார். இப்படத்திலும் அப்படியே! இரண்டு வேறுபட்ட கேரக்டர்களுக்காக நடை, உடை, பாவனை என அத்தனை விஷயங்களிலும் வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார். நடிப்பிலும் முந்தைய படங்களைவிட நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது ரவியிடம். சீரியஸாக போய்க்கொண்டிருக்கும் படத்தில் கொஞ்சம் ரொமான்ஸ் காட்டுவதற்காக மட்டுமே பயன்பட்டிருக்கிறார் அமலா பால். காமெடி மட்டுமல்ல தன்னால் நடிக்கவும் முடியும் என நிரூபித்திருக்கிறார் சூரி. கொஞ்ச நேரமே வந்தாலும் சரத்குமார் கேரக்டர் நச். உண்மை டிவியின் தொகுப்பாளராக ‘நீயா நானா’ கோபிநாத். இன்னும் நிறைய கேரக்டர்கள் படம் முழுவதும் வந்து போகிறார்கள்.

பலம்

* சுவாரஸ்யமான முதல் பாதி.
* ஜெயம் ரவியின் அபாரமான உழைப்பு. சரத்குமார், கோபிநாத் உள்ளிட்டோரின் கதாபாத்திரதேர்வு.
* சாட்டையடி வசனங்கள்.
* கேட்பதற்கு சுவாரஸ்யமில்லாத பாடல்களைக்கூட அற்புதமான விஷுவல்களால் காப்பாற்றிய ஒளிப்பதிவு.
* ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை.

பலவீனம்

* தொய்வடைந்த இரண்டாம் பாதியும் ஏற்றுக்கொள்ள முடியாத க்ளைமேக்ஸும்.
* காட்சிகள் மூலம் கதைக்கு அழுத்தத்தைக் கொடுக்காமல் வசனத்தின் மூலமாகவே அழுத்தம் கொடுக்க முயன்றிருப்பது.
* ஜி.வி.பிரகாஷின் இசையமைப்பா? என்ற சந்தேகத்தை பாடல்கள் ஏற்படுத்துகின்றன.

மொத்தத்தில்...

ஒவ்வொரு படத்திலும் இந்த சமூகத்திற்கு நல்ல கருத்துக்களைச் சொல்ல வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கும் சமுத்திரக்கனிக்கு வாழ்த்துக்கள். அதேநேரம், படம் பார்க்கும் ரசிகன் அந்தப் படத்தோடு ஒன்றிப் பயணிக்கும்போதுதான் சொல்ல வந்த கருத்தும் அவனைச் சென்று சேரும். இந்த இடத்தில்தான் ‘நிமிர்ந்து நில்’ கொஞ்சம் தடம் புரண்டிருக்கிறது. இருந்தாலும் ஜெயம் ரவியின் உழைப்பிற்காகவும், சமூக சிந்தனையோடு படங்களை இயக்கும் சமுத்திரக்கனிக்காகவும் ஒருமுறை நிமிர்ந்து நிற்கலாம்!

ஒரு வரி பஞ்ச் : முதல் பாதி ‘நச்’... இண்டாம் பாதி ‘ப்ச்’.

சுவாரஸ்யத் தகவல்கள்

1. இதேபடம் தெலுங்கில் நானி நடிக்க ‘ஜன்டா பாய் கபிராஜு’ என்ற பெயரில் இயக்கியிருக்கிறார் சமுத்திரக்கனி. அங்கேயும் ஹீரோயின் அமலா பால்தான். விரைவில் இப்படம் தெலுங்கில் வெளியாகவிருக்கிறது.
2. ஜெயம் ரவிக்கு அடுத்ததாக ‘பூலோகம்’ வெளிவரவிருக்கிறது. தவிர, ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் நயன்தாராவுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் - teesar


;