கோச்சடையான் டிரைலர் விமர்சனம்

கோச்சடையான்’  டிரைலர் விமர்சனம்

விமர்சனம் 11-Mar-2014 8:45 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்தியத் திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம்.... சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கிறார் என்பதையும் தாண்டி, ‘இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் அனிமேஷன் படம்’ என்கிற அடையாளமும் இந்த எதிர்பார்ப்பிற்கு ஒரு காரணம். ‘கோச்சடையான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை இதுவரை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் யு-டியூபில் கண்டுகளித்துள்ளனர். டீஸருக்கு வெவ்வேறான கருத்துக்கள் கிடைத்துள்ள நிலையில், தற்போது இப்படத்தின் முழுமையான டிரைலர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஆடியோ விழாவில் 3டியில் போட்டுக் காட்டப்பட்ட இந்த டிரைலருக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள ‘கோச்சடையான்’ படத்தின் டிரைலர் எப்படி?

‘ஈராஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரித்திருக்கும் ‘கோச்சடையான்’ படத்தின் டிரைலர் மொத்தம் 3 நிமிடங்கள் ஓடுகின்றன. டீஸரில் ரஜினி வாய்ஸைக் கேட்காமல் ஏமாந்து போன ரசிகர்களுக்கு இந்த டிரைலரின் ஆரம்பத்திலேயே அவரின் குரலைக் கேட்டதும் உற்சாகம் ஊற்றெடுக்கிறது. 6 பேக் வைத்திருக்கும் ரஜினியைப் பார்க்கும்போது, உண்மையிலேயே ரஜினி இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்கள். அனிமேஷனாக இருந்தால்கூட ரஜினியின் அந்த வேகவேகமான நடை, ஸ்டைல் என கொஞ்சம் நுணுக்கமாகவே பதிவு செய்திருக்கிறார்கள்.

வழக்கமாக ரஜினி பத்துப் பதினைந்து பேரை பறந்து பறந்து அடித்து துவம்சம் செய்வதை எந்தவித லாஜிக்கும் பார்க்காமல் கைதட்டி ரசிப்போம். அதையே ‘கோச்சடையானி’ல் இன்னும் கொஞ்சம் அதிகமாகக் காட்டியிருக்கிறார்கள். ருத்ர தாண்டவம் ஆடுகிறார், நான்கு திசைகளிலிருந்தும் சீறி வரும் ஓநாய்களை ஒரே நேரத்தில் கொன்று குவிக்கிறார், டால்பின் மேல் ஏறி பறந்து வருகிறார்... ஆனால் எல்லாவற்றையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. காரணம் அனிமேஷன் என்பதால்! படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும், ரஜினியின் டயலாக் டெலிவரியும். ரஜினியின் ஒரிஜினல் வாய்ஸையே இதில் பயன்படுத்தியிருப்பதால், நம்மால் ‘கோச்சடையான்’ கேரக்டரை ரஜினியாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. அதேபோல் சரித்திரப் பின்னணி கொண்ட இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் ஆர்கெஸ்ட்ரா அற்புதமான இசையை பாடல்களுக்கும், பின்னணிக்கும் தந்திருக்கிறார்கள்.

விஷுவலாக இந்த டிரைலரில் நிறைய குறைகள் கண்களுக்குத் தெரிவதையும் தவிர்க்க முடியவில்லை. அதேபோல் 3டி படம் என்பதற்காகவே நிறைய ஷாட்களை வலுக்கட்டாயமாக வைத்திருப்பதைப் போன்ற உணர்வையும் தருகிறது (ஒருவேளை 3டி கிளாஸ் அணிந்துகொண்டு பார்க்கும்போது நன்றாக இருக்கலாம்!). ஹாலிவுட் படங்களுடன் இப்படத்தை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லையென்றாலும் இந்தியாவில் வெளியான ‘ராமாயணா’ போன்ற அனிமேஷன் படங்களோடு ஒப்பிடுகையில் ‘கோச்சடையான்’ கொஞ்சம் பின்தங்கியே இருக்கிறது. இருந்தாலும் தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு போகும் ஒரு முயற்சியாக பார்க்கும்போது இப்படத்தை வரவேற்பது நிச்சயம் நமக்குப் பெருமையே!

மொத்தத்தில் ரஜினி என்ற மந்திரசக்தி மட்டுமே ‘கோச்சடையான்’ அனிமேஷன் பட டிரைலரிலும் நம்மை கட்டிப்போடுகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;