ருத்ரதாண்டவம் ஆடிய ரஜினி!

ருத்ரதாண்டவம் ஆடிய ரஜினி!

செய்திகள் 10-Mar-2014 8:25 PM IST VRC கருத்துக்கள்

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் இயக்கத்தில், மோஷன் கேப்சர் என்ற தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள படம் ‘கோச்சடையான்’. இப்படத்திற்கு கே.எஸ்.ரவிகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது. படத்தின் இயக்குனர் சௌந்தர்யா, தயாரிப்பாளர் முரளி மனோகர், ‘சவுண்ட் மிக்சிங்’ களைஞர் ரசூல் பூக்குட்டி, நடிகர் ஆதி மற்றும் ஆடை வடிவமைப்பாளர் நீத்தா லுல்லா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது பேசிய இயக்குனர் சௌந்தர்யா, “இது இந்திய சினிமாவில் ஒரு புதிய முயற்சி. ஹாலிவுட்டில் இந்த தொழில்நுட்பத்தில் நிறைய படங்கள் வெளிவந்துள்ளன. படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம். படத்திற்கு, கதைக்கு ஏற்ற பாடல்கள் மட்டும் படத்தில் பயன்படுத்தப்படும். இந்த தொழில்நுட்பத்தில் நிஜமாக நம்மால் செய்ய முடியாத பல விஷயங்களை செய்யலாம். அப்படித்தான் அப்பாவை ருத்ர தாண்டவம் ஆட வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அதை நிறைவேற்றினோம். படத்தில் மூன்று விதமான கதாபாத்திரங்களில் வருகிறார் அப்பா ரஜினி! அந்த மூன்று பாத்திரங்கள் தந்தை கோச்சடையான் மற்றும் இரண்டு மகன்கள் ராணா - சேனா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் இந்த ‘கோச்சடையான்’’ என்றார்.

பின்னர் பேசிய தயாரிப்பாளர் முரளி மனோகர், “ஹாலிவுட்டில் இது போன்ற படங்களை எடுக்க 3000 கோடி, 4000 கோடி செலவு செய்கிறார்கள். அதற்கு 5 முதல் 6 வருடங்கள் வரை ஆகிறது. இந்தப் படத்தை மிகக் குறைந்த செலவில் தான் எடுத்திருக்கிறோம். அதாவது 125 கோடி! இப்போதே படத்தின் விளம்பரங்கள் செய்ய துவங்கி விட்டோம். அடுத்த வாரம் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்ப இருக்கிறோம். படத்தை ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியிட ஏற்பாடுகள் செய்து வருகிறோம்” என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம போத ஆகாதே - டிரைலர்


;