‘கோச்சடையான்’ பாடல்கள் - ஒரு ஸ்பெஷல் முன்னோட்டம்!

‘கோச்சடையான்’ பாடல்கள் - ஒரு ஸ்பெஷல் முன்னோட்டம்!

செய்திகள் 5-Mar-2014 9:51 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘முத்து’, ‘படையப்பா’, ‘பாபா’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’ படங்களைத் தொடர்ந்து மீண்டும் ரஜினி & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் இன்னொரு படம் என்றால், அந்த பாடல்களைக் கேட்க ரசிகர்கள் எவ்வளவு ஆர்வமாக இருப்பார்கள்? அந்த ஆர்வத்திற்கு தீனி போடும் வகையில் ‘கோச்சடையான்’ படத்தின் பாடல்கள் என்னென்ன? யார் யார் பாடியிருக்கிறார்கள் என்ற ‘டிராக் லிஸ்ட்’டை சோனி நிறுவனம் தற்போது வெளியிட்டிருக்கிறது. வரும் மார்ச் 9ஆம் தேதி பாடல்கள் வெளியாகவிருக்கும் ‘இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் அனிமேஷன்’ படத்தின் பாடல்கள் எப்படி?

மொத்தம் 9 பாடல்களைக் கொண்ட இந்த ஆல்பத்தில் வழக்கம்போல ரஜினி படத்தின் ஆரம்பப் பாடலைப் பாடியிருப்பவர் சாதனைக் குரலுக்குச் சொந்தக்காரரான எஸ்.பி.பாலசுப்ரமணியம்தான். ‘எங்கே போகுதோ வானம்...’ என்ற கவிஞர் வைரமுத்துவின் வைர வரிகளுக்கு குரலோசை கொடுத்திருக்கிறார் எஸ்.பி.பி. ஆல்பத்தின் இரண்டாவது பாடலையும் இவரே பாடியிருக்கிறார். ‘மெதுவாகதான்....’ என்ற வாலியின் வரிகளை சாதனா சர்கத்துடன் இணைந்து பாடியிருக்கிறார்.

ஆல்பத்தின் 3வது பாடல் நிச்சயம் ரசிகர்களுக்கு ரஜினியின் ஸ்பெஷல் ட்ரீட்டாக இருக்கும். ஏனென்றால், ‘மாற்றம் ஒன்றே மாறாதது...’ எனத் தொடங்கும் இந்தப் பாடலை ஹரிச்சரணுடன் இணைந்து பாடியிருக்கிறார் சூப்பர் ஸ்டார். வைரமுத்துவின் வரிகளில் உருவாகியிருக்கும் இப்பாடலுக்கு ஜதி அமைத்திருப்பவர் வி.உமா ஷங்கர். ஆல்பத்தின் அடுத்த பாடலும் ஸ்பெஷல்தான். ‘மணப்பெண்ணின் சத்யம்...’ எனத் தொடங்கும் இப்பாடலைப் பாடியிருக்கிறார் லதா ரஜினிகாந்த். மிகச்சிறந்த பாடகியான லதா, நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் குரல் வளத்தை ரசிகர்களுக்கு பரிசாக்கியிருக்கிறார்.

‘இதயம்... ’ எனத் தொடங்கும் ஆல்பத்தின் 5வது பாடலை ஸ்ரீனிவாஸும் சின்மயியும் இணைந்து பாட, ‘எங்கள் கோச்சடையான்...’ என்ற 6வது பாடலை ஒரு ஸ்பெஷல் டீம் பாடியிருக்கிறது. ஹரிசரண் குரலில் ஆல்பத்தின் 7வது பாடலாக ஒலிக்கிறது ‘மணமகனின் சத்யம்...’. ஆல்பத்தில் 8வதாக வருவது லண்டன் செஸன்ஸ் ஆர்கெஸ்ட்ராவின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் ‘ராணாஸ் ட்ரீம்’ என்ற இன்ஸ்ட்ருமென்டல் பாடல்.

ரஹ்மான் இசையமைப்பில் அவரே பாடும் பாடல் எப்போதுமே ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்டாக அமையும். ‘கோச்சடையான்’ ஆல்பத்தில் வரும் கடைசி பாடலான ‘கர்ம வீரன்....’ பாடலை தன் சகோதரி ஏ.ஆர்.ரெஹய்னாவுடன் இணைந்து பாடியிருக்கிறார் ஏ.ஆர்.ஆர்!

ஒரு பாடலை மட்டும் வாலி எழுதியிருக்க, மற்ற பாடல்கள் அனைத்தையும் கவிஞர் வைரமுத்துவே இயற்றியிருக்கிறார். ரஜினிக்கு இசையமைப்பதென்றால் ரஹ்மானுக்கு எப்போதுமே அது சந்தோஷமான வேலைதான்! ஏற்கெனவே இவர்களது கூட்டணியில் வெளிவந்த ஆல்பங்களே இதற்கு சாட்சி. அந்த வரிசையில் ‘கோச்சடையான்’ பாடல்களும் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு மாபெரும் வெற்றிபெறும் எனக் காத்திருக்கிறார்கள் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;