‘ஜிகர்தண்டா’ இசை விமர்சனம்

‘ஜிகர்தண்டா’ இசை விமர்சனம்

விமர்சனம் 4-Mar-2014 11:13 AM IST Chandru கருத்துக்கள்

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுக இசையமைப்பாளராக களமிறங்கிய சந்தோஷ் நாராயணன் வரிசயை£க ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘குக்கூ’ என தொடர் வெற்றிகளைக் குவித்து வருகிறார். ‘பீட்சா’ கூட்டணியான கார்த்திக் சுப்பராஜ் - சந்தோஷ் நாராயணனின் அடுத்த அதிரடி ‘ஜிகர்தண்டா’. இதன் சுவை எப்படி?

1. கண்ணம்மா... கண்ணம்மா...
பாடியவர்கள் : ரீட்டா, ஆண்டனி தாசன்
பாடலாசிரியர் : முத்தமிழ்

வழக்கமான சந்தோஷ் நாராயணன் ஸ்டைல் கிட்டார் இசையோடு ஆரம்பிக்கும் இந்தப் பாடல் ‘ஆமா....’ என்ற ஆண்டனி தாசனின் வித்தியாசமான குரலோசையோடு வேறொரு மூடிற்குப் பயணிக்கிறது. ‘கண்ணம்மா... கண்ணம்மா காதலிச்சாளாம்...’ என ரீட்டாவின் தேன் குரலில் மதுரைத் தமிழ் பாஷையோடு ஒலிக்கும் இந்தப் பாடல் முதல் முறை கேட்கும்போதே மனதோடு பதிந்துவிடுகிறது. அதிலும் ‘‘உள்ளத்துல விதையைப் போட்டுட்டான்... இவன் உரத்தப் போட்டு வேர வளத்துட்டான்’’ என்ற பாடலாசிரியர் முத்தமிழின் வரிகளில் மண் மணம் கமழ்கிறது. சந்தோஷ் நாராயணனின் வெஸ்டன் ஸ்டைல் இசைக்கு, மதுரை பாஷையோடு ஒலிக்கும் ரீட்டா, ஆண்டனி தாசன் குரல்கள் இப்பாடலுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கின்றன. பாடல் முழுக்க ஒலிக்கும் ‘ஆமா...’ என்ற பின்னணி கோரஸ் ‘நச்’!

2. டிங் டாங்...
பாடியவர்கள் : மோஸ் (ஆங்கிலம்), அருண் ராஜா (தமிழ்)

‘‘கஷ்டப்படுற ஜீவன சாவடிச்சா... அது கருணைக் கொல..! நான் கருணையா பாத்தாலே கொலைதாண்டா!’’ என படத்தின் வில்லன் சிம்ஹாவின் கொடூரமான வசனத்தோடு தொடங்குகிறது இந்த வித்தியாசமான ‘ராப்’ பாடல். அனேகமாக இப்பாடல் வில்லனின் குணத்தை காட்டுவதற்காக உருவாக்கப்பட்ட ‘மான்டேஜ்’ டைப் பாடலாக இருக்கும். ‘‘டிங் டாங்.... உன்னை கட்டி வச்சு உதைப்பேன்... டிங் டாங் உன்னை எட்டி எட்டி மிதிப்பேன்’’ என்பன போன்ற பாடல் வரிகளும் கேங்ஸ்டர் லைஃபின் பின்னணியைச் சொல்வதாகவே உள்ளது. அருண் ராஜாவின் ஆக்ஷன் கலந்த தமிழ் குரலும், மோஸின் ஆங்கில ‘ராப்’ குரலும் இணையும் இப்பாடல் தமிழ்சினிமாவிற்கு புது ரகம்! அவ்வப்போது பின்னணியில் ஒலிக்கும் சாக்ஸஃபோனின் இசை அக்மார்க் சந்தோஷ் நாராயணன் ‘டச்’. ‘புதுப்பேட்டை’ படத்தின் ‘வர்றியா...’ பாடலைப் போல் பெரிய அளவில் வரவேற்பைப் பெற வாய்ப்பிருக்கிறது.

3. பாண்டி நாட்டுக் கொடி....
பாடியவர் : ஆண்டனி தாசன்
பாடலாசிரியர் : ஆண்டனி தாசன்

வித்தியாசமான ஒரு ஆண் குரலின் ஒப்பாரியோடு தொடங்குகிறது இந்த ‘பாண்டி நாட்டுக் கொடி’. இந்த ஒப்பாரி குரலுக்குச் சொந்தக்காரரின் பெயர் ‘கருவாயன்’ என ஆடியோ சிடியில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஜாலி மூடில் பயணிக்கும் இந்தப் பாடலில் ‘பேண்டு’ இசையும், ‘சாக்ஸஃபோன்’ இசையும் ஒன்றோடொன்று கலந்து ஒரு கல்யாண ஊர்வலத்தின் பின்னணியை நம் மனக்கண்களில் ஓடவிடுகிறது. கடலூர் ‘செல்வா பேண்டு’ குரூப் இப்பாடலுக்கான பேண்டு இசைக்கருவிகளை இசைத்திருக்கிறார்கள். பாடலின் வரிகளுக்கும் குரலுக்கும் சொந்தக்காரர் ஆண்டனி தாசனே! காட்சிகளோடு இப்பாடலைப் பார்க்கும்போது பெரிய அளவில் கவனம் ஈர்க்கலாம்.

4. தெசையும் எழந்தேனே...
பாடியவர்கள் : மீனாக்ஷி ஐயர், சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர் : பிரதீப் குமார்

மூன்று நிமிடங்களுக்கும் குறைவாகவே ஒலிக்கும் இந்தப் பாடலின் முதல் ஒரு நிமிடத்தை சந்தோஷ் நாராயணனின் ஹம்மிங்கும், மெல்லிய பியானோ இசையுமே ஆக்ரமித்துக் கொள்கின்றன. அதன் பிறகே ‘மொகத்தின் திரைய...’ என மீனாக்ஷி ஐயரின் ‘ஷார்ப்’பான குரல் ஒலிக்கிறது. வார்த்தைகள் தெளிவாக கேட்கும் வண்ணம், பின்னணி இசை வழிவிட்டுக் கொடுத்து மென்மையாக ஒலிக்கும் இந்த மெலடிப் பாடலும் கேட்டவுடன் பிடிக்கிறது!

5. பேபி...
பாடியவர் : சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர் : முத்தமிழ்

‘சூது கவ்வும்’ படத்தின் ‘கம்னா கம்... கம்னாட்டி கோ...’ பாடல் ஸ்டைலில் ஒலிக்கிறது இந்த ‘ஆச வந்து யார வுட்டுச்சு பேபி...’ பாடல்! சந்தோஷ் நாராயணன் வித்தியாசமான ஸ்டைலில் பாடியிருக்கும் இந்தப் பாடலில் பின்னணியில் கோரஸ் குரல்களும் பாடல் முழுவதும் ஒலிக்கிறது. கீ போர்டு இசையோடு வயலினும் இ¬ணைந்து ஒலிக்கும் இப்பாடலும் அக்மார்க் சந்தோஷ் நாரயணன் ரகம்தான். 3 நிமிடங்கள் மட்டுமே ஒலிக்கும் இந்தப் பாடலில் முத்தமிழின் வித்தியாசமான வரிகளைத் தவிர புதிதாக வேறொன்றும் இல்லை!

6. ஜிகர்...
பாடியவர் : பிரதீப் குமார்
பாடலாசிரியர் : பிரதீப் குமார்

‘க்ளப் சாங்’ ஸ்டைலில் ஒலிக்கும் இந்தப் பாடலின் ஒரு வார்த்தைகூட என்னவென்றே புரியாத தொனியில் ஒலிக்கிறது. ஒரு வேளை வித்தியாசமாக எதையும் முயற்சி செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. இப்பாடல் படத்தில் இடம்பெறவிருக்கும் இடத்தைப் பொருத்து இதன் வரவேற்பு இருக்கும். ‘ஜிகர்’ என இப்பாடலுக்கு எதற்கு பெயர் வைத்திருக்கிறார்கள் என்பதும் புரியவில்லை! ஒருவேளை ‘ஜிகர்’னா ஹார்ட் என டீஸரின்போது கொடுத்த விளக்கமாக இருக்குமோ என்னவோ.

7. தண்டா... (இன்ஸ்ட்ருமென்டல்)
இரண்டரை நிமிட ‘ஜிகர்தண்டா’வின் தீம் மியூசிக் இது! படத்தின் பின்னணி இசையில் பெரும்பான்மை பங்கு வகிக்கலாம்.

8. ஹூஹா....
பாடியவர்கள் : சீன் ரோல்டன், சந்தோஷ் நாராயணன்
குங்ஃபூ சண்டையின்போது எழுப்பப்படும் ஒலியான ‘ஹூஹா...’வையே ஒரு தீம் மியூசிக்காக மாற்றியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். காட்சிகளின் பின்னணி இசைக்கு இதுவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

9. ஓட்டம்... (ஸாண்டியின் ஜாஸ் பேண்டு)
இரவு நேரப் பார்ட்டிகளில் ஒலிக்கவிட நல்ல சாய்ஸ் இந்த ‘ஓட்டம்...’ என்ற ஜாஸ் ரக தீம் மியூசிக். பரிசோதனை முயற்சியாக இந்த ஆல்பத்தில் இப்பாடலைச் சேர்த்திருக்கலாம்.

‘ஜிகர்தண்டா’வின் ஆல்பத்தில் இடம் பெற்றிருக்கும் 9 பாடல்களில் 4 பாடல்கள் ‘தீம் மியூசிக்’ வகையறா. மீதமிருக்கும் 5 பாடல்களும் கூட எல்லாமே 3 நிமிடங்கள் மட்டுமே ஒலிக்கும் வகையில் உருவாக்கியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ‘டிங் டாங்...’ பாடல் மட்டுமே 4 நிமிடங்கள் ஒலிக்கும் இந்த ஆல்பத்தின் நீளமான பாடலாக இருக்கிறது. ‘பீட்சா’வின் ‘மோகத்திரை....’ போன்றோ அல்லது ‘சூது கவ்வும்’ படத்தின் ‘காசு, பணம், துட்டு...’ போலவோ பெரிய அளவில் கவனம் ஈர்க்காவிட்டாலும் இந்த ஆல்பத்திலும் ரசிக்கக்கூடிய பாடல்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், நிச்சயம் ‘ஜிகர்தண்டா’ ஆல்பம் தமிழ்சினிமாவில் ஒரு புதிய முயற்சிதான்! இந்த ஆல்பத்தின் வெற்றி படத்தின் வெற்றியோடு சம்பந்தப்பட்டிருப்பதால் பட ரிலீஸிற்குப் பிறகே இதன் வரவேற்பு தெரியவரும்.

மொத்தத்தில் இந்த ‘ஜிகர்தண்டா’ மதுரைவாசிகளுக்குமே புதிய சுவைதான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜூங்கா - டைட்டில் டீசர்


;