வல்லினம் திரை விமர்சனம்

விறுவிறுப்பு குறைந்த விளையாட்டு!

விமர்சனம் 28-Feb-2014 10:20 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தயாரிப்பு : ஆஸ்கர் ஃபிலிம்ஸ்
இயக்கம் : அறிவழகன்
நடிப்பு : நகுல், மிருதுளா, ‘நண்டு’ ஜெகன், ஜெயபிரகாஷ், அதுல் குல்கர்னி
ஒளிப்பதிவு : பாஸ்கரன் மனோகரன்
இசை : தமன்.எஸ்
எடிட்டிங் : வி.ஜே.ஷபு

தமிழ் சினிமாவில் விளையாட்டை மையப்படுத்தி வந்த படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றவைதான். ‘கில்லி’, ‘வெண்ணிலா கபடி குழு’, ‘சென்னை 28’ என அனைத்துமே வெற்றி பெற்ற படங்கள் தான். அந்த வகையில் இந்த பட்டியலில் ‘வல்லினம்’ இடம் பிடிக்கிறதா?

கதைக்களம்
திருச்சியில் கல்லூரியில் படிக்கும் நகுல், கூடைப்பந்து விளையாடும்போது தன் நண்பன் கிருஷ்ணா மீது பந்தை அடிக்க, எதிர்பாராதவிதமாக அவர் இறந்து போகிறார். அதனால் கூடைப்பந்தை இனி தொடுவதில்லை என்ற முடிவோடு கல்லூரியை மாற்றி சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில் கிரிக்கெட் விளையாடும் சீனியர்களுடன் மோதல் ஏற்பட, மீண்டும் ‘பாஸ்கட் பாலை’ கையிலெடுக்கிறார். அந்தக் கல்லூரியில் கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் அங்கீகாரத்தை கூடைப்பந்துக்கும் பெற்றுத்தருவது என நகுலும் நண்பர்களும் களத்தில் குதிக்கிறார்கள். முடிவில் ஜெயித்தது கிரிக்கெட்டா? இல்லை கூடைப்பந்தா? என்பது ‘வல்லினம்’ நமக்கு சொல்ல வரும் கதை!

படம் பற்றிய அலசல்
நகுல் நடித்த படங்களிலேயே பெரிய பட்ஜெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் என்றால் அது ‘வல்லினம்’தான். ஏற்கனவே நிறைய ஸ்போர்ட்ஸ் படங்களை பார்த்த நமக்கு இந்த படமும் அந்த படங்களில் ஒன்றாகவே அமைந்து போனதால் பெரிய ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. நாட்டையே வசியப்படுத்தி வைத்திருக்கும் கிரிக்கெட்டை சாடியிருப்பதுதான் படத்தில் இயக்குனர் அறிவழகன் சொல்ல வந்த விஷயம். ஆனால் நமது தேசிய விளையாட்டான ஹாக்கியையே ஏறெடுத்து பார்க்க ஆள் இல்லாத இந்த நேரத்தில், கூடைப்பந்துக்கு அங்கீகாரம் கேட்க வேண்டிய அவசியம் ஏன் என்றுதான் குழப்பமாக இருக்கிறது.

ஒரு விளையாட்டை முன்னிறுத்தி படம் எடுக்கும்போது அதில் இருக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் நுணுக்கமாக கவனித்து காட்சிகளை வைக்க வேண்டியது அவசியம். அதேபோல், என்னதான் வித்தியாசமான களம் என்றாலும், திரைக்கதை சுவாரஸ்யமில்லாத திரைக்கதையில் படத்தோடு ஒன்ற முடியவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு
இப்படத்திற்காக நடிப்பில் நிறைய மாறுதல்களைச் செய்திருக்கிறார் நகுல். ஒரு கூடைப்பந்து விளையாட்டு வீரராக மிகவும் சிரத்தையுடன் பயிற்சி எடுத்து நடித்துள்ளார். விளையாட்டை நேரில் பார்த்த உணர்வை தருகிறார்கள் அவரும், அவரது நண்பர்களாக வரும் அம்ஜத், சீனியர் வீரர் மற்றும் எதிரணியில் வரும் மதிவாணன் ஆகியோர். இருந்தும் கூடைப்பந்து விளையாட்டு பற்றி தெரிந்தவர்களுக்கு ஏமாற்றமே.

நாயகியாக மிருதுளா. அவ்வளவாக நடிக்க வாய்ப்பில்லை என்றாலும் முக்கியமான ஒரு திருப்பத்துக்கு காரணமாகி கதையில் தானும் இருப்பதை நிரூபிக்கிறார். அவரது அப்பாவாக ஜெயப்ரகாஷ், கூடைப்பந்து பயிற்சியாளராக அதுல் குல்கர்னி, கல்லூரி முதல்வராக ஒய்.ஜி.மகேந்திரன் என தெரிந்த முகங்கள் சிலரும் இருக்கிறார்கள்.

பலம்
* வழக்கமான கதைகளிலிருந்து கொஞ்சமாக வித்தியாசமாக சிந்தித்திருப்பது.
* அந்தந்த கேரக்டர்களின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கும் நடிகர்களின் பங்களிப்பு
* பாஸ்கட் பால் விளையாட்டை நேரடியாகப் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திய ஒளிப்பதிவும், அதற்கு பக்கபலமாக அமைந்த பின்னணி இசையும்.

பலவீனம்
* ட்விஸ்ட்டுகளோ, யூகிக்க முடியாத காட்சிகளோ இல்லாத சுவாரஸ்யமற்ற திரைக்கதை.
* யதார்த்தத்தை மீறிய சினிமாத்தனம் அதிகமாக இருப்பது.

மொத்தத்தில்...
‘ஈரம்’ படத்தில் இருக்கையுடன் நம்மை கட்டிப்போட்ட அறிவழகன், இந்த படத்தில் அதை செய்ய முடியாதது வருத்தமளிக்கும் விஷயம். ஆனாலும் பாராட்ட வேண்டிய முயற்சி!

ஒரு வரி பஞ்ச் : விறுவிறுப்பு குறைந்த விளையாட்டு!

சுவாரஸ்யத் தகவல்கள்
1. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’யின் தயாரிப்பில் ‘திருமணம் எனும் நிக்காஹ்’, ‘ஐ’, ‘விஸ்வரூபம் 2’ என இந்த வருடம் அடுத்தடுத்து படங்கள் வரவிருக்கின்றன.
2. மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் கோல்டு மெடல் வாங்கிய இயக்குனர் அறிவழகன் ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். அதோடு ஷங்கரின் ‘எஸ் பிக்சர்ஸ்’ மூலம் ‘ஈரம்’ படத்தில் இயக்குனராக அறிமுகப்படுத்தப்பட்டார். ‘வல்லினம்’ இவருக்கு இரண்டாவது படம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செய் - டீசர்


;