சிறப்புக் கட்டுரை : சினிமாவுக்குள் சினிமா!

சிறப்புக் கட்டுரை : சினிமாவுக்குள் சினிமா!

கட்டுரை 24-Feb-2014 2:59 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் சசிகுமாரின் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பிரம்மன்’. சினிமாவை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பல படங்கள் சினிமாவுக்குள் சினிமாவைக் காட்டியிருக்கின்றன. அந்த வரிசையில் சமீபகாலங்களில் வந்த சில தமிழ்ப் படங்களைப் பற்றிய ஒரு சிறப்புத் தொகுப்புதான் இக்கட்டுரை.

1. வெள்ளித்திரை (மார்ச், 2008)
மோகன்லால், சீனிவாசனின் நடிப்பில் 2005ல் வெளிவந்து வெற்றிபெற்ற ‘உதயநாணு தாரம்’ மலையாளப் படத்தின் தமிழ் ரீமேத்தான் இந்த ‘வெள்ளித்திரை’. பிருத்விராஜ், பிரகாஷ்ராஜ், கோபிகா, எம்.எஸ்.பாஸ்கர், சத்யன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த இப்படத்தை இயக்கியவர் விஜி. பிரகாஷ் ராஜின் ‘டூயட் மூவிஸ்’ நிறுவனம் தயாரித்த இப்படம் வசூல்ரீதியாக வெற்றிபெறவில்லையென்றாலும் விமர்சனரீதியாக பலரின் பாராட்டுக்களைப் பெற்றது.சினிமா கனவுகளுடன் ஒரே அறையில் தங்கியிருந்து வாய்ப்புத் தேடும் இரண்டு நண்பர்களின் கதைதான் இந்த ‘வெள்ளித்திரை’. நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சுற்றித்திரியும் பிரகாஷ்ராஜ், இயக்குனர் கனவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பிருத்விராஜின் கதை ஒன்றைத் திருடி தயாரிப்பாளர் ஒருவரிடம் தருகிறார். அந்த அற்புதமான கதையால் ஈர்க்கப்பட்டு அதை தயாரிக்க முன்வரும் தயாரிப்பாளரிடம், தன்னை நாயகனாகப் போட்டுதான் படம் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அதன் பிறகு பெரிய ஹீரோவாக உருவாகுகிறார் பிரகாஷ் ராஜ்.

பின்னாளில் தன் கதையை வைத்துதான் ஹீரோவாக பிரகாஷ்ராஜ் மாறியிருக்கிறார் என்ற விஷயம் பிருத்விராஜுக்கு தெரிய வருகிறது. மனம் தளராத பிருத்விராஜ் மீண்டும் ஒரு கதையைத் தயார் செய்கிறார். அதில் நாயகனாக பிரகாஷ் ராஜ் நடிக்கும் சூழல் உருவாகிறது. படம் முடியும் தருவாயில் ‘ஈகோ’ மோதலால் படத்திலிருந்து திடீரென பிரகாஷ் ராஜ் விலகிக்கொள்வதாக அறிவிக்க, அவருக்கே தெரியாமல் அவரின் இயல்பான வாழ்க்கையைப் படம்பிடித்து படத்தை நிறைவு செய்கிறார் பிருத்விராஜ். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெறுவதோடு நிறைவுபெறுகிறது ‘வெள்ளித்திரை’.

2. குசேலன் (ஆகஸ்ட், 2008)இதுவும் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த ஒரு படம்தான். மம்முட்டி, சீனிவாசன் நடிப்பில் வெற்றிபெற்ற ‘கத பறையும்போள்’ தமிழில் ரஜினி, பசுபதி நடிக்க ‘குசேலனா’க மாறியது. இவர்களோடு மீனா, வடிவேலு, சந்தானம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த இப்படத்தை கே.பாலசந்தரின் ‘கவிதாலயா’ நிறுவனம் தயாரித்தது. பி.வாசு இயக்கிய இப்படத்திற்கு இசையமைத்தவர் ஜி.வி.பிரகாஷ்.

ஒரு சிறிய கிராமத்தில் சலூன் கடை வைத்து தன் மனைவி மீனா மற்றும் 3 குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு குடும்பம் நடத்தி வருகிறார் பசுபதி. அதே ஊரில் மாடர்னாக சலூன் கடை திறக்கும் வடிவேலுவால் பசுபதியின் வாடிக்கையாளர்கள் குறைகிறார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனது பால்ய கால நண்பனும் தமிழ்சினிமாவின் சூப்பர்ஸ்டார் ‘அசேக்குமாரு’மான ரஜினி அந்த ஊருக்கு வருகிறார். தன் கஷ்டத்தை தன் நண்பனிடம் சொல்லாமல் தயங்கி தயங்கி அதை தவிர்க்கும் பசுபதிக்கு, க்ளைமேக்ஸில் நட்புக்கரம் நீட்டுகிறார் ரஜினி. உணர்ச்சிப்பூர்மான இந்தப் படம் தமிழில் நினைத்த வெற்றியைப் பெறவில்லை.

3. பொம்மலாட்டம் (டிசம்பர், 2008)1994ஆம் ஆண்டு வெளிவந்த ‘கருத்தம்மா’ படத்திற்குப் பிறகு மீண்டும் ரசிகர்களின் கவனத்தை இப்படத்தின் மூலம்தான் ஈர்த்தார் இயக்குனர் பாரதிராஜா. இப்படத்தின் கதையால் ஈர்க்கப்பட்டு கதையின் நாயகனாக நடிக்க ஹிந்தியின் பிரபல நடிகர் நானா படேகர் சம்மதம் தெரிவித்தார். அவரோடு அர்ஜுனும் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்தார். காஜல் அகர்வால் தமிழில் அறிமுகமானது ‘பொம்மலாட்டம்’ படத்தில்தான். கூடவே பரதநாட்டியத்தில் பரிச்சயம் பெற்ற ருக்மினியும் அறிமுகமானார்.

சினிமா இயக்குனர் நானா படேகர், தன் படத்தின் பெண் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ஆண் ஒருவரை (ஆணாக நடித்தது ருக்மினி) பெண்ணாக மாற்றுகிறார். அவரை உண்மையிலேயே பெண் என நினைத்து அவருக்கு பாலியல் தொந்தரவுகளை தரும் சிலர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தக் கொலையை துப்புத்துலக்க வரும் அர்ஜுன், இயக்குனர் நானா படேகரின் மீது சந்தேகம் கொள்கிறார். முடிவில் எல்லா உண்மைகளும் வெளிச்சத்திற்கு வர, மனிதாபிமான அடிப்படையில் நல்லவர்களுக்கு துணையாக நிற்பார் அர்ஜுன்.

கடைசிவரை பெண்ணாக நடித்தது ஒரு ஆண் என்று யாருக்கும் தெரியாத வண்ணம் திரைக்கதை அற்புதமாக நகர்த்தி இருப்பார் இயக்குனர் பாரதிராஜா. விமர்சனரீதியாக பெரிய வரவேற்பைப் பெற்ற இப்படம் வசூலிலும் ஓரளவு சாதித்தது.

4. விண்ணைத்தாண்டி வருவாயா (பிப்ரவரி, 2010)நீண்டநாள் கழித்து தமிழில் பெரிய வெற்றியைப் பெற்ற ஒரு முழுமையான காதல் படம் என்றால் அது கௌதம் மேனன் இயக்கிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’தான்! சிம்பு, த்ரிஷா, சமந்தா, பாபு ஆண்டனி, கிட்டி, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் அந்த வருட ‘ப்ளாக் பஸ்டர்’ ஹிட்!

சினிமாவில் இயக்குனராக ஜெயிக்க வேண்டும் என்ற கனவுகளோடு சுற்றித் திரியும் இளைஞன் சிம்புவின் குடும்பம், மலையாள பெண்ணான த்ரிஷாவின் வீட்டின் கீழ்போர்ஷனில் வாடகைக்கு குடியேறுகிறது. பார்த்தவுடன் த்ரிஷாவின் மேல் காதல் கொள்ளும் சிம்பு அவரிடம் தன் காதலைத் தெரிவிக்க, த்ரிஷா அரைகுறை மனதுடன் அதை ஏற்கிறார். பின்னர் தன் குடும்பத்திற்காக சிம்புவிடம் இருந்து பிரிகிறார். பின்னர் மீண்டும் சிம்புமேல் காதல் கொள்கிறார் த்ரிஷா. ஆனால், முடிவில் தன் குடும்பத்தார் பார்த்த மாப்பிள்ளையையே திருமணம் செய்து கொள்கிறார். படத்தின் முடிவில் இயக்குனராக மாறும் சிம்பு தன் சொந்த காதல் கதையை படமாக்கி ஜெயிக்கிறார்.

காதலர்களுக்கிடையே இருக்கும் அன்னியோன்யம், ஈகோ, ரொமான்ஸ் என அத்தனை விஷயங்களையும் யதார்த்தமாக படம்பிடித்த இப்படம் யூத்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. அதுவரை பார்த்திருந்த சிம்புவை வேறொரு பரிமாணத்தில் காட்டியிருந்தார் இயக்குனர் கௌதம் மேனன். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது ‘விடிவி’.

5. ஒரு நடிகையின் வாக்குமூலம் (பிப்ரவரி, 2012)ஒரு சினிமா நடிகை தனது திரைத்துறையில் எவ்வளவு பிரச்சனைகளைச் சந்தித்து பிரபலமாகிறார் என்பதைச் சொன்ன படமே ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’. கிட்டத்தட்ட நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைப் போலவே கதையம்சம் கொண்டிருந்த இப்படத்தின் நாயகியாக சோனியா அகர்வால் நடித்திருந்தார். அவருடன் ‘புன்னகை பூ’ கீதா, இயக்குனர் கபூர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஒரேயொரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் ‘ஜித்தன்’ ரமேஷ். அதோடு இயக்குநர்கள் விக்ரமன், ஏ.வெங்கடேஷ், ராசு மதுரவன், செல்வபாரதி, சுராஜ் ஆகியோர் இயக்குனர்களாகவே நடித்துள்ளனர். ராஜ் கிருஷ்ணா இயக்கிய இப்படம் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

சமீபத்தில் வந்த இந்த 5 படங்களைத் தவிர்த்து, அந்தக்கால ‘சர்வர் சுந்தரம்’ முதல் ஏகப்பட்ட படங்கள் சினிமாவை மையமாக எடுக்கப்பட்டு வெளிவந்திருக்கின்றன. ஆனால், இந்த படங்களின் வெற்றி சதவிகிதம் குறைவுதான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;