‘பாம்பய்’ ஹாலிவுட் திரை விமர்சனம்

பிரம்மிப்பு குறைவான பிரம்மாண்டம்!

விமர்சனம் 24-Feb-2014 1:15 PM IST Chandru கருத்துக்கள்

தயாரிப்பு : ஃபிலிம் டிஸ்ட்ரிக்ட்
இயக்கம் : பால் டபிள்யூ.எஸ்.ஆன்டர்சன்
நடிப்பு : கிட் ஹாரிங்டன், கேரி அன்னே மோஸ், எமிலி ப்ரௌனிங், அக்பஜே
ஒளிப்பதிவு : க்ளென் மேக்ஃபெர்சன்
இசை : கிளிண்டன் ஷார்ட்டர்

‘க்ளாடியேட்டர்’ படத்திலிருந்து ஆக்ஷன் காட்சிகள், ‘டைட்டானிக்’ படத்திலிருந்து காதல் காட்சிகள், ‘2012’ படத்திலிருந்து இயற்கை பேரழிவுக் காட்சிகள் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து பக்காவாக ஒரு கதையை உருவாக்கினால் அதுவே ‘பாம்பய்’ திரைப்படம். 3டியில் வெளிவந்திருக்கும் இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு ஈர்த்துள்ளது?

கதைக்களம்
கிபி 62ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் ரோமானியர்களால் ஒரு தனிப்பட்ட இனம் முழுமையாக அழிக்கப்படுகிறது. அந்த இனத்தில் மிஞ்சும் ஒரேயொருவனான ‘மிலோ’ (கிட் ஹாரிங்டன்) அடிமையாக வளர்க்கப்பட்டு மிகப்பெரிய ‘க்ளாடியேட்டர்’ வீரனாக உருவாகுகிறான். ரோமானியர்களால் புதிதாக உருவாக்கப்படும் ‘பாம்பய்’ நகரின் விழா கொண்டாட்டத்திற்காக அடிமைகள் அனைவரும் அந்த நகருக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

அங்கே வரும் நாயகன் மிலோவுக்கும் ‘பாம்பய்’ நகரை உருவாக்கிய தலைமை நிர்வாகியின் மகள் கேஸியாவுக்கும் (எமிலி ப்ரெளிங்) காதல் மலர்கிறது. ஆனால் ரோமானிய செனட்டரும் கேஸியாவை அடைய நினைக்கிறான். அடிமைகளுக்கும் ரோமானியர்களுக்கும் நடக்கும் ஒரு மிகப்பெரிய மோதலின்போது, ‘பாம்பய்’ நகரின் தூரத்தில் இருக்கும் எரிமலை ஒன்று வெடிச்சிதற, மொத்த நகரமும் கலவர பூமியாகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதை தியேட்டரில் காண்க.

படம் பற்றிய அலசல்
இப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு எதை முன் நிறுத்த வேண்டும் என்பதில் ரொம்பவே குழம்பியிருக்கிறார் இயக்குனர் பால் ஆன்டர்சன். இயற்கைப் பேரழிவின் வீரியத்தை காட்ட நினைக்கிறாரா அல்லது ஒரு அடிமை வீரனின் திறமையை பறைசாற்ற வருகிறாரா இல்லையென்றால் அடிமைக்கும் இளவரசிக்கும் இடையே மலரும் காதலின் புனிதத்தைச் சொல்ல வருகிறாரா என்பது தெரியவில்லை. ஆனால், அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் இப்படத்தில் வரும் கதையும், காட்சிகளும் ஏற்கெனவே நாம் பார்த்த பல ஹாலிவுட் படங்களின் சாயலில்தான் உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு
அடிமை வீரனாக நடித்திருக்கும் கிட் ஹாரிங்டன் பார்ப்பதற்கு இளைஞனாகத் தெரிந்தாலும், தான் ஏற்ற ‘க்ளேடியேட்டர்’ பாத்திரத்தை முடிந்தளவு காப்பாற்றியிருக்கிறார். கட்டுமஸ்தான அவரின் உடலமைப்பும், அசாதாரணமான அவரின் சண்டைக் காட்சிகளும் அவரை ஒரு ஹீரோவாக ஏற்றுக் கொள்ள வைக்கிறது. நாயகி எமிலிக்கு தமிழ்ப் பட ஹீரோயின் போன்ற வேடம்தான். நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் ‘மேட்ரிக்ஸ்’ புகழ் கேரிக்கும் மிகச்சிறிய வேடமே!

வில்லன் கீஃபர் சதர்லேன்ட் நடிப்பில் கலக்கியிருக்கிறார். அதேபோல் நாயகனின் நண்பனாக வரும் அடிமை வீரர் அக்பஜேவும் ரசிகர்களை வெகுவாகக் கவர்கிறார்.

பலம்
* நாயகன் நாயகிக்கிடையே மலரும் காதல் காட்சிகள்.
* இடைவேளைக்கு முன்பு வரும் அடிமை வீரர்களின் சண்டைக் காட்சியும் அதை படமாக்கிய விதமும்.
* ‘பாம்பய்’ நகரின் அற்புதமான செட்டிங்ஸ், எரிமலைச் சீற்றத்தின் கிராபிக்ஸ் காட்சிகள், உறுத்தாத 3டி!
* அற்புதமான ஒளிப்பதிவு, கச்சிதமான எடிட்டிங், பிரம்மாண்டமான பின்னணி இசை.

பலவீனம்
* ஏற்கெனவே பார்த்த பல படங்களை நினைவுபடுத்தும் கதை. அடுத்தடுத்து என்ன நடக்கும் என எளிதில் யூகிக்கக்கூடிய திரைக்கதை.
* தொடர்ந்து 20 நிமிடங்களாக எரிமலை வெடித்துக் கொண்டேயிருப்பது பெரிய சலிப்பை ஏற்படுத்துகிறது.
* தமிழ்ப் படங்களுக்கு சவால்விடும் அளவுக்கு ‘லாஜிக்’ ஓட்டைகள் நிரம்பியிருப்பது.

மொத்தத்தில்...
இவ்வளவு பெரிய உழைப்பை ஒரு புதிய கதைகளத்துக்கு கொட்டியிருந்தால் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹாலிவுட் படங்களின் பட்டியலில் ‘பாம்பய்’க்கும் இடம் கிடைத்திருக்கும்.

ஒரு வரி பஞ்ச் : பிரம்மிப்பு குறைவான பிரம்மாண்டம்!

சுவாரஸ்யத் தகவல்கள்
1. இப்படத்தின் ‘மிலோ’ கேரக்டருக்காக நாயகன் கிட் ஹாரிங்டன் தினமும் 3000 கலோரிக்கும் அதிகமாக சாப்பிட்டு, கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு கட்டுமஸ்தான உடலமைப்பைப் பெற்றுள்ளார். தன் வாழ்நாளிலேயே இதுபோன்ற உடலமைப்பை தான் பெற்றதில்லை என வியந்து சொல்லியிருக்கிறார் கிட்.
2. கேரி அன்னே மோஸும், கிட் ஹாரிங்டனும் இப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக இணைந்து நடித்திருக்கிறார்கள். முதல் படம் ‘சைலன்ட் ஹில்’ (2012).
3. கேரி அன்னே மோஸின் பிறந்தநாளான ஆகஸ்ட் 21ஆம் தேதி இப்படத்தின் முதல் டிரைலர் வெளியிடப்பட்டது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;