பிரம்மன் திரை விமர்சனம்

‘ஓடு... ஓடு...’ ஓபனிங் பாடல் 'டெடிகேட்டட் டூ' ரசிகர்கள்!

விமர்சனம் 22-Feb-2014 10:31 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தயாரிப்பு : கே.மஞ்சு சினிமாஸ், ஆன்டோ ஜோசப்
இயக்கம் : சாக்ரடீஸ்
நடிகர்கள் : சசிகுமார், நவீன் சந்திரா, லாவண்யா திரிபாதி, சந்தானம், சூரி
ஒளிப்பதிவு : ஜோமன் டி ஜான், பைசல் அலி
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
எடிட்டிங் : ராஜாமுகமது

சசிகுமார் அவரின் ஸ்டைலில் படம் நெடுக நட்பு வசனங்கள் பேசியிருக்கும் இன்னொரு படம்தான் ‘பிரம்மன்’.

கதைக்களம்
சசிகுமார், நவீன் சந்திரா, சந்தானம் மூவரும் சினிமா கனவுகளுடன் வளரும் சிறுவயது நண்பர்கள். வளர்ந்து பெரியவர்களானதும் நவீன் சந்திரா பிரபல தெலுங்கு இயக்குனராகவும், சசிகுமார் சந்தானத்தின் உதவியுடன் ‘மாடர்ன்’ என்ற தியேட்டரை லீசுக்கு எடுத்து நடத்துகிறார். ஒரு கட்டத்தில் சசிகுமாரின் தியேட்டர் இழுத்துமூடும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறது. இப்படி ஒரு இக்கட்டான தருணத்தில் செல்வச்செழிப்புடன் இருக்கும் தன் நண்பன் நவீன் சந்திராவைப் பார்த்து உதவி கேட்கக் கிளம்புகிறார் சசிகுமார். அதன் பிறகு நடப்பவைதான் மீதிப்படம்.

படம் பற்றிய அலசல்
படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ‘இப்படி ஒரு கதையில் நடிக்க சசிகுமார் எதற்குதான் ஒப்புக்கொண்டாரே’ என்ற முணுமுணுப்புகளை தியேட்டரில் எழ வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சாக்ரடீஸ். முதல்பாதியில் திரைக்கதையைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் காட்சிகளை அடுத்தடுத்து வேகமில்லாமல் நகர்த்திக் கொண்டே போய் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறார். சசிகுமார் - திரிபாதி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளே போரடிக்கும் நேரத்தில், சசிகுமாரின் தங்கைக்கு என தனியாக ஒரு காதல் வேறு. அபத்தம்! இரண்டாம் பாதியில் நிறைய சென்டிமென்ட் காட்சிகளை வைத்து ரசிகர்களை நெகிழ வைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் ஏற்கெனவே பலமுறை பார்த்து பழக்கப்பட்ட ரசிகனுக்கு அலுப்புதான் மிஞ்சுகிறது. காட்சிக்கு காட்சி வித்தியாசப்படும் ஒளிப்பதிவு, ரசிக்க முடியாத பாடல்கள், திரைக்கதையை சரியாக நகர்த்தாத எடிட்டிங் என எல்லா டெக்னிக்கல் விஷயங்களும் ‘பிரம்மனு’க்கு எமனாகவே வாய்த்திருக்கின்றன.

நடிகர்களின் பங்களிப்பு
முன்னணி ஹீரோக்களைப் போல கலர் கலராக ஆடை அணிய வேண்டும், டூயட் பாட வேண்டும், பறந்து பறந்து சண்டை போட வேண்டும் என்று ஆசைப்பட்ட சசிகுமார் அதற்கான வினையை இப்படம் தரும் ரிசல்ட்டின் மூலம் விரைவில் புரிந்துகொள்வார். ‘சுப்ரமணியபுரம்’, ‘போராளி’, ‘சுந்தரபாண்டியன்’ படங்களில் பார்த்த சசி இப்போது வேறு எதிலே பிஸி? காதலிக்கவும், டூயட் பாடவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார் நாயகி லாவண்யா திரிபாதி. சந்தானம் காமெடி என்ற பெயரில் போரடிக்க, சூரி கொஞ்சம் காப்பாற்றியிருக்கிறார்.

பலம்
* இரண்டாம் பாதியின் சில சென்டிமென்ட் காட்சிகளும், அதற்கு கைகொடுத்திருக்கும் வசனங்களும்.
* ஆங்காங்கே சிரிக்க வைக்கும் சூரியின் காமெடிக் காட்சிகள்.

பலவீனம்
கதை, திரைக்கதை, கதாபாத்திரங்கள், டெக்னிக்கல் உட்பட பல விஷயங்கள்!

மொத்தத்தில்...
‘நீங்க கேட்டா கட்டை விரலையே தருவேன்... கதையை தரமாட்டேனா?’, ‘நண்பன் ஜெயிச்சா நாமே ஜெயிச்ச மாதிரி’, ‘நீ எனக்கு நண்பன் மட்டுமில்ல என்னை படைச்ச பிரம்மன்’ என வசனங்களை மட்டுமே நம்பி களமிறங்குவதை தவிர்த்துவிட்டு, தமிழ்சினிமாவின் டிரெண்ட் செட்டராக அமைந்த ‘சுப்பரமணியபுரம்’ போன்ற வித்தியாசமான படைப்புகளில் மட்டுமே சசிகுமார் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்!

ஒரு வரி பஞ்ச் : ‘ஓடு... ஓடு...’ ஓபனிங் பாடல் 'டெடிகேட்டட் டூ' ரசிகர்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர் 2


;