ஆஹா கல்யாணம் திரை விமர்சனம்

‘ஆஹா...’வில் ஆச்சரியம் இல்லை!

விமர்சனம் 21-Feb-2014 6:32 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தயாரிப்பு : யஷ்ராஜ் ஃபிலிம்ஸ்
இயக்கம் : ஏ.கோகுல் கிருஷ்ணா
நடிப்பு : நானி, வாணி கபூர், சிம்ரன், படவா கோபி
ஒளிப்பதிவு : லோகநாதன் ஸ்ரீனிவாசன்
இசை : தரண் குமார்
எடிட்டிங் : பவன் ஸ்ரீகுமார்

ஹிந்தியில் வெற்றிபெற்ற ‘பேண்ட் பாஜா பாரத்’ படத்தின் தமிழ் ரீமேக்தான் ‘ஆஹா கல்யாணம்’. காதலர்களுக்கிடையே இருக்கும் வழக்கமான ஒரு ஈகோ பிரச்சனையை முழுக்க முழுக்க கல்யாண கொண்டாட்டங்களின் பின்னணியில் சொல்ல வந்திருக்கும் படமே ‘ஆஹா கல்யாணம்‘.

கதைக்களம்
காலேஜ் படிப்பை முடித்ததும் சொந்தமாக பிசினஸ் தொடங்க வேண்டும் என நினைக்கும் ஸ்ருதி சுப்ரமணியம் (வாணி கபூர்) ‘கெட்டிமேளம்’ என்ற பெயரில் ‘வெட்டிங் பிளானிங்’ நிறுவனம் ஒன்றை தொடங்குகிறார். ‘கெட்டிமேளம்’ நிறுவனத்தின் பார்ட்னராக ஸ்ருதியுடன் கைகோர்க்கிறார் ஷக்தி (நானி). இருவரும் சேர்ந்து படிப்படியாக முன்னுக்கு வருகிறார்கள். ஒரு மிகப்பெரிய கல்யாணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு பார்ட்டி கொண்டாடும் ஸ்ருதியும், ஷக்தியும் மதுபோதையில் தவறாக நடந்துகொள்கிறார்கள். ‘இருவருக்கிடையில் இருக்கும் காதலால்தான் இப்படி நடந்துகொண்டோம்’ என நினைக்கும் ஸ்ருதி, நானியிடம் காதலைச் சொல்ல வருகிறார். ஆனால் நானி ஸ்ருதியின் காதலைத் தவிர்க்கிறார். அவர் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்...? அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை!

படம் பற்றிய அலசல்
ஸ்ருதி, ஷக்திக்கு இடையே நடக்கும் ஈகோ மோதல்கள் நாம் ஏற்கெனவே பார்த்துப் பழக்கப்பட்ட ‘குஷி’, ‘நீதானே என் பொன்சவந்தம்’ உட்பட பல படங்களை நினைவுபடுத்துவதுபோல் உள்ளது. முதல்பாதி கதைக்குச் சம்பந்தம் இல்லாமல் கலகலப்பாகவும், இரண்டாம்பாதி முழுக்க நாம் எதிர்பார்த்தபடியே நகர்ந்து செல்கிறது. ஆனால் முழுக்க முழுக்க கல்யாணக் கொண்டாட்டங்களின் பின்னணியில் ஒரு படத்தைப் பார்ப்பது தமிழ் ரசிகர்களுக்கு இது முதல்முறையாக இருக்கும். அதற்காக திரும்பத் திரும்ப கல்யாண வீட்டையே காட்டிக் கொண்டிருப்பதும் ஒரு கட்டத்தில் போர்தான்.

இளைஞர்களுக்குப் பிடித்த ஒரு ஜாலியான படத்தை தரவேண்டும் என்று நினைத்த அளவில் அறிமுக இயக்குனர் கோகுல் பாஸ் மார்க் வாங்குகிறார். மற்றபடி அவரின் ஞாபகம் நிலைக்கும் அளவுக்கு பெரிதாக எதுவும் நம்மை ஈர்க்கவில்லை. கதையும், கதை நடக்கும் இடங்களும் தமிழ் கலாச்சாரத்திற்கு கொஞ்சம் அன்னியப்பட்டே நிற்கிறது.

நடிகர்களின் பங்களிப்பு
‘நான் ஈ’யில் பார்த்த அதே துறு துறு நானி இப்படத்திலும் படம் முழுக்க சுற்றி வருகிறார். அவரின் டயலாக் டெலிவரி, பாடிலாங்குவேஜ் என அத்தனையிலும் எனர்ஜி கொப்பளிக்கிறது. வழக்கமான நாயகிகளைப் பார்த்துப் பார்த்து போரடித்த தமிழ் ரசிகர்களுக்கு வாணி கபூரின் நெடு நெடு உயரமும் ஆண்சுபாவம் கலந்த கலையான முகமும் நிச்சயம் கொஞ்சம் நாள் நினைவில் இருக்கும். நடிப்பிலும் வாணி அசத்தியிருக்கிறார். மற்றபடி சிம்ரன், படவா கோபி உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு படத்தில் சின்ன சின்ன வேலைதான்.

பலம்
* போரடிக்காத திரைக்கதை. ஆங்காங்கே ரசிக்க வைக்கும் காமெடிக் காட்சிகளும் அதற்கு கைகொடுத்திருக்கும் வசனங்களும்.
* நானி, வாணி கபூரின் நடிப்பு மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகள்.
* கண்களுக்கு விருந்தளிக்கும் கலர்ஃபுல் ஒளிப்பதிவு, உறுத்தாத பின்னணி இசை, காட்சிகளை சரியாக நகர்த்திய எடிட்டிங்.

பலவீனம்
* நம் ஊருக்கு சம்பந்தமில்லாத கதைக்களம். ஏற்கெனவே பார்த்த சில தமிழ்ப் படங்களை ஞாபகப்படுத்தும் ‘ஈகோ’ பிரச்சனை காட்சிகள்.
* டப்பிங் படம் பார்ப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுவது.
* படத்தில் நிறைய பாடல்களைப் பயன்படுத்தியிருப்பது.

மொத்தத்தில்...
நண்பனின் சேட்டுவீட்டு கல்யாணத்திற்குச் சென்றுவிட்டு, அங்கே நடக்கும் ஜாலியான விஷயங்களை எட்டி நின்று பார்த்துவிட்டு வந்ததுபோல் இருக்கிறது. ஆனால் நம்மை அந்தக் கொண்டாட்டத்தில் ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லை. இளைஞர்களை மட்டுமே சந்தோஷப்படுத்துகிறது இந்த ‘ஆஹா கல்யாணம்’.

ஒரு வரி பஞ்ச் : ‘ஆஹா...’வில் ஆச்சரியம் இல்லை!

சுவாரஸ்யத் தகவல்கள்
1. பாலிவுட்டில் மிகப்பெரிய நிறுவனமான ‘யஷ்ராஜ் ஃபிலிம்ஸ்’ இப்படத்தின் மூலம் தமிழில் காலடி எடுத்து வைத்திருக்கிறது.
2. இப்படத்தின் அறிமுக இயக்குனர் கோகுல் கிருஷ்ணா, இயக்குனர் விஷ்ணுவர்தனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர்.
3. ‘வெப்பம்’, ‘நான் ஈ’ படங்களைத் தொடர்ந்து நடிகர் நானி நடிக்கும் மூன்றாவது இருமொழியில் (ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு) உருவான படம் இது.
4. ‘யஷ்ராஜ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தான் அறிமுகப்படுத்துபவர்களிடம் தொடர்ந்து மூன்று படங்கள் செய்ய வேண்டும் என்ற ஒப்பந்தம் செய்துகொள்ளும். அதன்படி வாணி கபூர் ஹிந்தியில் ‘சுத் தேசி ரொமான்ஸ்’ படத்தைத் தொடர்ந்து நடிக்கும் இரண்டாவது படம் இது. இன்னும் ஒரு படம் ஹிந்தியில் நடிக்கவிருக்கிறார்.
5. தமிழ், தெலுங்கு மொழி வசனங்களைப் படிக்க மொழிபெயர்ப்பாளர் யாரையும் வைத்துக்கொள்ளவில்லை நடிகை வாணிகபூர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;